மழை வருவதற்கு ஏன் தாமதமாயிற்று

மழை வருவதற்கு ஏன் தாமதமாயிற்று

31 Oct 22
Stories


 

 

 

ஓவியம்: Chiang Yee Chinese in Britain

 

நேற்றிலிருந்து மழையை எதிர்நோக்கியிருக்கிறேன். கூகிளையும் சிரியையும் எத்தனையோ முறை கேட்டு உறுதி செய்தும் இன்று மாலை தான் மழை எட்டிப்பார்த்திருக்கிறது. நேற்று நடுநிசியில் விழிப்பு தட்டிய போது கூட கூர்ந்து கேட்டும் மழை ஓசை இல்லாதது என்னவோ போலிருந்தது. காலையிலேயே பணிக்குச் சென்று அதிதீவிர மனநிலையை எட்டியபோது உடன் பணி செய்யத்தொடங்கியிருந்த பெண்ணிற்கு உடல்நலமில்லாமல் போக அவர் வீட்டிற்குக் கிளம்பிவிட்டார். என்னசெய்வது என்று யோசிக்கையில், ஒரு ஃபோட்டோ ஷூட் என்னை வைத்து எடுக்கவேண்டும் என்றார்கள். அந்தப்பரிசோதனை முறையினூடே அருகில் இருந்த டேபிள் டென்னிஸ் அறையில் விளையாட நுழைந்தேன். அறையின் கூரை ஒளியூடுருவும் படியானது. தலைக்கு மேலே மேகங்களும் புறாக்களும் பார்ப்பதற்கு சுகமாக இருந்தாலும் அந்தக் கூரையில் மழை விழுவதைப் பார்க்க இன்னும் பரவசமாக இருக்கும் இல்லையா. மழை இன்னும் வரவில்லை.

 

சென்ற ஆண்டு இதே நாட்களை ஒட்டி மழை வந்து சென்றதும், நிகழ்ந்த கடுமையான அனுபவங்களும் படம் போல விரிய விரிய டேபிள் டென்னிஸ் விளையாடினேன். இப்படி விளையாடி, நீண்ட காலம் ஆயிற்று. ஒன்றுக்கொன்று இணக்கமில்லாமல் சிதறிக்கிடக்கும் புலன்களும் துடிப்பும் ஒன்று சேர்ந்தால் தான் பந்தினை அடிக்கமுடிகிறது என்பது புரிய அரைமணி நேரமாயிற்று. இடையிடையே கேமிரா மேனுக்கு முகம் காட்டிவந்தேன். அவர் நான் விளையாடியதைப் பொருட்படுத்தவே இல்லை. அவர் பணியிலேயே மும்முரமாக இருந்தது ஆறுதலாக இருந்தது. என்னால் விளையாட்டைத் துண்டிக்க முடியவில்லை. விளையாடிய குழுவினர் அப்படி.

 

மாலை நெருங்க நெருங்க மழை இன்னும் பெய்யத்தொடங்காததன் பதற்றம் தொற்றியது. ஏனென்று சொல்லமுடியவில்லை. ஆறுமணிக்கு இப்பொழுது தான் நிறைவு செய்திருந்த ஒரு படத்தின் ப்ரிவியூ பார்க்கவேண்டியிருந்தது. அந்தப்படத்தில், நான் பாடல்கள் எழுதியிருக்கிறேன். தீவிரமான உணர்ச்சி நிலை மங்காத படம்.  படம் வரும்போது நீங்களே அறிந்துகொள்வீர்கள்.  படம் முழுக்க மழை, மழை. இரவு எட்டு மணிக்கு வீடு திரும்பவேண்டியிருந்தது.  படம் பற்றி கருத்து கேட்ட இயக்குநரிடம் ஒரு சில திருத்தங்களை மட்டும் சொல்லிவிட்டு, ஒரு நாள் கழித்து விரிவாகப் பேசுகிறேன், ஆறட்டுமே என்று சொல்லிவிட்டு படம் பார்த்த கையுடன் சாலையில் இறங்கி நடந்தேன். ஆஹா, மழை பெய்யத் தொடங்கியிருந்தது. நல்வாய்ப்பாக, என் கையில் குடையும் இருந்தது. வடபழனியிலிருந்து கோடம்பாக்கம் வரை நடக்கவேண்டும். பேருந்துகளோ ஆட்டோவோ எடுக்கும் மனநிலை இல்லை. மனதில், நான் பார்த்திருந்த படம் இன்னும் இயங்கிக்கொண்டிருந்தது. நடந்தால் தான் நன்றாயிருக்கும் போல.  மனநிலையும் நேரமும் வாய்த்தால் குடைபிடித்து மழையினூடே நடக்க நன்றாகத்தான் இருக்கும். இருபது நிமிடத்தில் நடந்தே வீடு வந்து சேர்ந்தேன். மழை வலுத்தது.

 

திடீரென்று பள்ளிகளுக்கு விடுமுறை கொடுக்கவேண்டுமே என்ற கவலை எட்டியது. திருவள்ளூர் மட்டுமே விடுமுறை அறிவித்திருந்தது. சென்னையில் பத்தரை மணிக்கு மேல் தான் அறிவித்தார்கள். அவளை அழைத்து நாளை சென்னையில்  பள்ளிகள் மட்டுமே விடுமுறை என்று சொன்னேன்.  வானத்திற்கும் பூமிக்குமாய்ச் சிரித்தாள். இதற்கிடையே எதிர்பார்த்திருந்த வந்த மழையைப் புகைப்படம் எடுக்க மறந்தே போயிருந்தேன். ஏனென்று தெரியவில்லை.

மழை - (மழை வருவதற்கு ஏன் தாமதமாயிற்று)

எனக்கும் மழை ரெம்ப பிடிக்கும்....... நனையத வரை,

Write To Author

About

Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.

Get in touch

Enquiries welcome for poetry, translations, film, and literary events.

Site: Kutti Revathi