
பேராசிரியர் க. நெடுஞ்செழியன் விடயத்தில் இயற்கையும் வாழ்வும் இன்னும் கூடுதல் கருணையுடன் நடந்திருக்கலாம்!
சீனிவாசனை அழைத்து, ‘நான் அந்திமழை’, இதழுக்கு நேர்காணல் கொடுக்கவேண்டும் என்று கூறினார். நாங்கள் அந்திமழை அசோகனை அழைத்துச் சொன்னதும் , மறுநாளே எங்களுக்கு முன்பாகவே சென்று, பேராசிரியரை நேர்காணல் எடுக்கத் தொடங்கியிருந்தார், அசோகன். அந்திமழையில் தான் அவருடைய முந்தைய நேர்காணலும் சிறப்பாக வந்திருந்ததை பேராசிரியர் நினைவு கூர்ந்தார். படுக்கையில் அவ்விதமாகப் படுத்தபடி, நோயில் உழன்றபடி அவர் பேசிய அரிய சிந்தனைகள் நெஞ்சில் பொறித்து வைத்துக்கொள்ள வேண்டியவை. அவ்வளவு உற்சாகம், மொழி உவகை, பேச்சினூடே வந்து தெறித்து விழும் படிமங்கள் என மொழியில் ஊறிய சிந்தனையாளனின் நெடிய பயணமாய் இருந்தது அந்த நேர்காணல். அவ்வப்பொழுது மறந்து விடுகிறது என்று சொல்கிறாரே அன்றி, தெளிவான துல்லியமான ஞாபக அடுக்குகள். சிறந்த நேர்காணல். அந்த ஒரு நேர்காணலிலே நான் கற்றறிந்தவற்றைப் புரட்டிப் போட்டது போன்ற சிந்தனை வெளிச்சம் அவரிடம். உடலின் இன்னல்களை முறியடித்துக்கொண்டிருக்க வழக்கமான அவருடைய இயல்பூக்கம் மட்டுமே உதவிக்கொண்டிருந்தது எனலாம். பேச்சினூடே, ‘நம்மை சிலப்பதிகாரம் தானே இணைத்தது’, என்று என்னிடம் சொல்லி மகிழ்ந்தார்.
ஆம், சங்க இலக்கியம் பற்றிய தன் நவீன பார்வையை அதன் அழகியலும் அர்த்தங்களும் தமிழ் மரபின் செறிவும் கொஞ்சமும் குறையாமல் முன்வைத்த ஒரே எழுத்தாளர் பேராசிரியர் க. நெடுஞ்செழியன். மொழியில் எந்தச் சந்தேகம் எனக்குத் தோன்றினாலும் எப்பொழுது என்றாலும் அவரை அழைத்துக் கேட்பேன். அவ்வளவு அன்புடனும் அக்கறையுடனும் விளக்குவார். ரசித்து உரையாடுவார். அவரைப் பற்றி அறிந்து கொள்ள, அவர் எழுதிய சங்க இலக்கியக்கட்டுரைகளையெல்லாம் தேடி வாசியுங்கள் என்பேன். புதிய பரிமாணங்களை உணரலாம். அத்தகைய ஒரு தீவிர மொழி உணர்வு வெளி.
மீண்டும் வந்து பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டுக் கிளம்பிய போது, ‘ஒரே ஒரு உதவிம்மா. சாப்பிடுவதற்கு கொஞ்சம் மிக்சர் வேண்டும்’, என்றார். இந்நிலையில் அவர் சாப்பிடலாமா என்ற சந்தேகம் எழ, அவரது மகளிடம் கேட்டேன். ‘ஆமாம், மருத்துவர் சாப்பிடலாமென்று உறுதியளித்திருக்கிறார்’, என்றார். எப்படியேனும் எழுந்து வந்துவிடுவார் என்று என் மன ஓரத்தில் உறுதியானதொரு நம்பிக்கை இருந்தது. அசோகன் அழைத்து பேராசிரியரின் உடல்நிலை பற்றிச் சொன்னபோதே கொஞ்சம் கவலை தொற்றிக்கொண்டது. கடைசி நொடி வரை எங்கிருந்தோ அவருக்குள் சொல்லொணா வேட்கை ஒளிர்ந்துகொண்டேயிருந்தது என்று சொல்வேன். உரையாடலினூடே, ‘இன்னும் ஒரே ஒரு நூல் எழுதவேண்டியிருக்கிறது, குட்டி ரேவதி’, என்றார். அந்த நூலை எழுதுவதற்கேனும் இயற்கையும் அவருக்கு அளிக்கப்பட்ட வாழ்க்கையும் கொஞ்சம் கூடுதல் கருணையுடன் நடந்துகொண்டிருக்கலாம். இன்று ஒரு வெற்றிடம் என் மனதில்.
தமிழ் மொழியினை ஆழ அகல உழுது நுகன்ற ஒரு தலைமுறையின் இறுதி குழந்தை மரித்தது போன்ற ஓர் உணர்வு. ஆமாம், ஆமாம், எப்பொழுதும் ஒரு குழந்தையின் உள்ள எழுச்சியுடன் இயங்கினார். அவர் தமிழுக்கு அளித்துச் சென்றிருக்கும் கொடை, ஒரு மனித வாழ்வினும் அகண்டது. அவ்வளவு உழைப்பு, துணிவு, ஆய்வு, பற்று, அறத்திற்கான வேட்கை. தமிழ்நாட்டின் அரசு பேராசிரியர் க. நெடுஞ்செழியனைப் பேணிப் போற்றியது போலவே, அவரது பெயரில் தமிழ் மெய்யியல் குறித்த துறையொன்றை உருவாக்கி வளர்த்தெடுக்கவேண்டும். அப்பொழுது தான் அவர் தொடங்கிய ஆசீவகப் பயணத் தீப்பந்தம் தன் நீண்ட பயணத்தைத் தொடரும், தமிழ் மெய்யியல் மரபு உலகளாவிய எல்லைகளைத் தொட உதவும் என்று நம்புகிறேன்.
Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.
Enquiries welcome for poetry, translations, film, and literary events.
Site: Kutti Revathi