முன்பெல்லாம்......இப்பொழுதெல்லாம்......

முன்பெல்லாம்......இப்பொழுதெல்லாம்......

13 Oct 22
Stories


 

முன்பெல்லாம் ஒருவர் மனதில் எப்படி இடம்பிடிப்பது என்னெவெல்லாம் செய்யவேண்டும் என்பது  தான்  ஒருவரின் நோக்கமாக இருந்தது. அதற்காக எதுவும் செய்வோம். வாழ்த்து அட்டை கொடுப்போம். நேரில் சென்று பார்ப்போம். நோதல் கரையக் காத்திருப்போம். நோவைத் தாங்கிக்கொண்டு கடந்து செல்வோம். நான் நிறைய கடிதம் எழுதியிருக்கிறேன். சொற்களால் கரைக்கமுடியாதது எதுவும் இல்லை என்ற நம்பிக்கை இருந்தது. ஏதோ சாக்குபோக்கு சொல்லியேனும் பிறருக்கு நம்மால் உண்டாகிய நோவினைச் சரிசெய்வதில் முந்திக்கொள்வோம்.

 

இப்பொழுதெல்லாம் அப்படியில்லை. எந்த அளவிற்கு ஒருவரை காயப்படுத்துவது, அவரை விட அதிகமாய் நாம் எப்படி அவரைத் துன்புறுத்துவது என்பதில் கடுமையான போட்டியே இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்களேன். உறவுகளுக்கு இடையிலும் நண்பர்களுக்கு இடையிலும் இது இன்று அதிக வழக்கமாகிவிட்டது. நண்பர்கள் அல்லாதவரிடம் நமக்கு என்ன இணைப்பு, நாம் எப்படி அவரைத் துன்புறுத்தும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால், ஒருவரையொருவர் நிராகரிப்பதில் நாம் நாளுக்கு நாள் வல்லுநர்களாகிக் கொண்டே செல்கிறோம். நாம் கற்ற கல்வியும் பண்பும் பெற்றுவிட்ட தொழில் நுட்பமும் ஒருவரையொருவர் துன்புறுத்திக்கொள்வதில் பேருதவியாக இருக்கின்றன.

 

ஒருவரையொருவர் விரட்டியடிப்பதில் நுட்பமான செயல்பாடுகளைக் கையாளும் கலைஞர்கள் ஆகிவிட்டோம். சில நேரங்களில் வாழ்வின் முக்கியமான தருணங்களில் ஒருவருக்கொருவராய் மெனக்கெட்ட நிகழ்வுகளையெல்லாம் நிறைய படித்திருக்கிறேன். இன்றைய வாழ்வில் அதையெல்லாம் செய்து பார்க்கக் கூட நமக்கு வாய்ப்பு இல்லாத அளவிற்கு முரண்களாலான உறவுகளைக் கட்டமைத்துக் கொண்டிருக்கிறோம். நாமும் அத்தகைய உறவுகளாய் இருக்கிறோம்.  நாம் நேசிப்பவரை நாம் காயப்படுத்திவிடுவோமோ என்ற எச்சரிக்கையெல்லாம் துளியும் இல்லை. 'பார், உன்னைவிட அதிகமாய் நான் எப்படி உன்னைக் காயப்படுத்திவிட்டேன்!', என்ற இறுக்கத்தை முகத்தில், சொல்லில், செயலில் காணமுடிகிறது.

 

திரை இயக்குநர் வெர்னர் ஹெர்சாக், தன்னுடைய தோழி ஒருவர் மரணத்தருவாயில் இருப்பதாய்க் கேள்விப்படுகிறார். அப்படி நடக்கக்கூடாது, அந்த மரணத்தை எப்படியேனும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டு, ஜெர்மனியிலிருந்து அந்தத் தோழியின் வீடு இருக்கும் ஃப்ரான்ஸ் வரை நடைபயணமாகவே நடந்து செல்கிறார். அந்தத் தோழியின் வீட்டின் முன் சென்று அழைப்பு மணியை அழுத்துகையில் அவர் வந்து தன் முன் கதவைத் திறக்கவேண்டும் என்ற ஒரே எண்ணத்தைத் தன் இதயத்தில் தாங்கியபடியே நடக்கிறார். வழிநடையெங்கும் பயணக்குறிப்புகளை எழுதி வைத்துக்கொள்கிறார். Of Walking in Ice என்ற நூலாகியது.  அவ்வாறே தன் உறுதியான நல்லெண்ணம் போலவே அந்தத் தோழி உயிர் மீள்கிறார். காலந்தோறும் விலங்கினங்களோ பறவையினங்களோ உயிரனங்களோ அழிந்து போவதைப் போல, மனிதர்களின் குணநலன்களும் மெல்ல அருகி அழிந்து போகின்றன.

Write To Author

About

Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.

Get in touch

Enquiries welcome for poetry, translations, film, and literary events.

Site: Kutti Revathi