காதலும் காமமும்

காதலும் காமமும்

27 Oct 22
Stories


 

 

 

ஓவியம்: வான்கோ

*

“இந்த டிரெஸ் எப்படி இருக்குது மேம்?”

“அருமையா இருக்கு. தீபாவளிக்கு எடுத்ததா?”

“ஆமா. இங்க ஒரு புது ஃப்ரெண்ட் கிடைச்சாங்க. அவள கூட்டிக்கிட்டு போய் மேக்ஸ்ல எடுத்தேன்”

“பூனை மாதிரி இருக்கீங்க”. புன்னகைத்தாள். அவளுக்குப் பூனைகள் பிடிக்கும்.

வெள்ளையில் கருப்பு வளையங்களாய்க் கோடுகள் போட்ட உடை. மெலிந்த உடல். இருபுறமும் தோள்களில் வழியும் முடி. பூனைக் கண்கள்.

இப்பொழுது தான் சென்னைக்கு நகர்ந்திருக்கிறார்.

இளம் வயதிலேயே திரைக்கதை எழுத்தாளராகிவிட்டார்.  சமீபத்தில்,  உடைந்து போன தன் காதலால் இவரும் நொறுங்கிப்போயிருந்தார்.

தன் காதலருடன் சேர்ந்து ஒரு பாடலைப் பாடி, யூட்யூப்பில் வெளியிட்ட காணொளியைப் போட்டுக் காட்டிக் கொண்டிருந்தவர் அப்படியே அழத்தொடங்கிவிட்டார்.

தன் காதலின் ப்ரேக் அப்பிற்குப் பின் தான் அவர் மும்பையிலிருந்து சென்னைக்கு நகர்ந்திருந்தார்.

“இது தான் முதல் காதல் மேம். முதல் காமமும். என் உடம்பே என்கிட்ட இல்லாத மாதிரி இருக்கு.”

“இந்த ப்ரேக் அப் யாருடைய முடிவு?” என்று கேட்டேன்.

“என்னுடைய முடிவு தான். தொடக்கத்தில எல்லாம் நல்லா இருந்துச்சி. போகப்போக தினமும் சண்டை, அழுகைன்னு விபரீதமா போகத் தொடங்குச்சி.

தொடக்கத்துல இருந்த அழகே போயிருச்சி. நண்பர்களா இருப்போம்னு சொல்லிட்டேன். அப்படி சொல்லிட்டேனே தவிர என்னால தாங்க முடியல. திரும்பப்போய்ப் பழகினா கூட தொடக்கத்துல இருந்த உண்மைய, மகிழ்ச்சிய, அழக மீட்க முடியாதுன்னு தோனுச்சி. கொஞ்சம் கொஞ்சமா குணமாயிட்டுத்தான் இருக்கேன்”

 

சென்னைக்கு நகர்ந்து தனக்கென வீடு பார்த்து தன்னை அமர்த்திக்கொண்டார். எப்பொழுதாவது உணர்ச்சிக் கொந்தளிப்பு அதிகமாகும் போது அழுத்தம் அதிகம் ஆகும்போது என்ன செய்வேன் தெரியுமா என்று கேட்டார்.

“என்ன செய்வீங்க?”, என்று கேட்டேன்.

“டிரெயின் டிக்கெட் புக் பண்ணுவேன். பாம்பே வரை ஏசி கோச். ஏறினதும் ஸ்கிர்ப்டை எழுதத் தொடங்குவேன். போய் இறங்குறவரை எழுதுவேன். பேய் பிடிச்ச மாதிரி. அப்புறம் இறங்கினதும் லோக்கலா ஒரு இடத்துல சாப்பிடுவேன். ஹெவியா. அப்புறம் புக் பண்ணி வச்சிருக்கிற அடுத்த டிரெயின்ல ஏறி இதே மாதிரி சென்னை வரை எழுதிக்கிட்டே வருவேன்.” அவள் கண்கள் கண்ணீருடன் கொப்பளித்து இருந்தது. இருநூறு பக்க திரைக்கதையை இப்படியாக மூன்று நான்கு நாட்களுக்குள் எழுதிக்கொண்டு வந்து  என் முன் வைத்து வாசித்து விட்டுச் சொல்லுங்கள் என்று போனாள்.

 

இன்று காலை அழைத்தாள். “மழையில சென்னை அழகா இருக்கில்ல, மும்பைய விட. வாங்க ஒரு காபி சாப்பிடலாம்”, என்றாள்

Write To Author

About

Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.

Get in touch

Enquiries welcome for poetry, translations, film, and literary events.

Site: Kutti Revathi