ஓடும் ரயில் முன் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படும் பெண்கள்

ஓடும் ரயில் முன் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படும் பெண்கள்

16 Oct 22
Stories


 

எப்பொழுதாவது ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே திருச்சியில் வாழும் என் அம்மாவுடன் சென்று இருந்து வருவேன். அதுவும், குடும்ப சம்பந்தப்பட்ட பணிகள் வற்புறுத்தும்போது மட்டுமே செல்வேன்.  அம்மாவிற்கு வீட்டில் முழு நாளும் வானொலி ஒலிக்கவேண்டும். இன்னோர் ஆள் உடன் இருப்பது போல் தோன்றும் என்பார். மாலை ஆறு மணியிலிருந்து பத்துமணி வரை டிவி தொடர்கள். ஆகவே, அமைதியான சூழல் வேண்டும் என் பணிகளை என்னால் செய்யமுடியாது. டிவியில் நீயா நானா, தமிழா தமிழா தொடர்கள் எப்பொழுதாவது பார்ப்பேன், அதுவும் கருப்பொருள்களைப் பொறுத்து. இந்தத் தொடர்களின் பின்னணியில் என் நண்பர்கள் சிலர் பணிபுரிவதும் காரணம். இவை தவிர வேறெதுவும் தொலைக்காட்சியில் பார்ப்பது கடினம். மற்ற நிகழ்ச்சிகளைப் பொருத்தவரை, எனக்கு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர்களின் குரலும் தொனியும் நிகழ்ச்சிகளின் மையப்பொருளுடன் பொருந்திப்போகவேண்டும். கீச் கீச் என்றோ, விவாதிக்கும் விடயங்களின் கனங்களுக்கு மதிப்பு அளிக்காத தொனியோ இருந்தால், அவை நம் வாழ்க்கைக்கும் பொருந்தாதவை என்று அணைத்துவிடுவேன்.

இந்த முறை அம்மாவைக் காயப்படுத்த விரும்பவில்லை. ஆகவே தொலைக்காட்சி தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தது. பெரும்பாலும் ஆங்காங்கே நிகழ்ந்த சாலை விபத்துகள் நிகழ்ந்த விதம் தான் மீண்டும் மீண்டும் வந்து சென்று கொண்டிருந்தன. ஒரு கண்டக்டர் பேருந்தின் கம்பிகளைப் பிடிக்காது படிகளில் நின்று கொண்டே பயணிக்க, ஓட்டுநர் வண்டியின் முன்னே வந்து பாய்ந்த நாயின் மீது வண்டியை ஏற்றிவிடாமல் இருப்பதற்காக சட்டென்று ப்ரேக் போட, அந்த சட்டென்ற நிறுத்துதலில் கம்பியைப் பிடிக்காது நின்று கொண்டிருந்த நடத்துநர்  வண்டியிலிருந்து விழுந்து அந்த இடத்திலேயே இறந்து போகிறார். மேலும், வட மாநிலம் ஏதோ ஒன்றில் ஒரு ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலுக்கு முன் தன்மனைவியைத் தள்ளிவிட்டு விட்டு தன் குழந்தைகள் இருவரையும்  அவசரமாகத் தூக்கிக்கொண்டு  செல்லும் கணவனைப் பதிவு செய்திருந்த கண்காணிப்பு கேமிராவிலிருந்து எடுத்துக்காட்டிக்கொண்டே இருந்தனர். திக்கென்று இருந்தது. மங்கிய ஒளியில் நிகழ்ந்த அந்தக்காட்சி நீண்ட நாட்களுக்கு மனதின் பின்னணியில் ஓடிக்கொண்டே இருந்தது. அந்த அதிர்ச்சி கரையும் முன்னே அதே சம்பவம் போலொரு நிகழ்வு சத்யப்பிரியாவினுடையது.

பெண் வெறுப்பின் உச்சம் இது போன்ற புதிய புதிய கொலைமுறைகளைக் கண்டறிந்து கொண்டே தான் இருக்கும். ஆகவே தான் நாம் இது போன்ற பெண் வெறுப்பைக் கண்டிக்கிறோம். நாம் பெண் என்பதாலேயே மட்டும் இதைக்கண்டிப்பதில்லை. உங்களுடன் வாழும் வளரும் மகள்கள், சகோதரிகள், பெண்களையும் கருத்தில் கொண்டு தான் இந்தப் பெண் வெறுப்பு குணங்களையெல்லாம் முளையிலேயே கிள்ளியெறிய விரும்புகிறோம்.  இல்லையென்றால், சத்யபிரியாவின் அப்பா உட்சென்ற மனநிலை தான் நம் சமூகத்தில் வெடிக்கும். பெருவெடிப்பின் அதிர்ச்சி பரவி ஊடுருவும் விபரீதம் எப்பொழுதுமே மனித மனம் கிஞ்சித்தும் முன்னறிய முடியாதது என்பேன்.

ரயில்கள் கண்டுபிடிக்கப்பட்டதற்கான நோக்கம் நிறைவேறியது போல, இன்றுடன் எல்லா ரயில்பாதைகளையும் அடைத்துவிடலாம் என்று நினைக்கிறேன். வேண்டுமென்றே இந்தக் குறிப்புக்கு முரணானதொரு புகைப்படத்தை ஏற்றியிருக்கிறேன். வேறு  என்ன செய்வது என்று தெரியவில்லை.

 

Write To Author

About

Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.

Get in touch

Enquiries welcome for poetry, translations, film, and literary events.

Site: Kutti Revathi