
ஒரு முறை ஆழமான இடத்தில் கால் வைத்துப் பார்த்துவிட்டால், மேலோட்டமான இடங்களில் நீந்த ஆசையிருக்காது. அல்லது,
இங்கே ஆழம் இல்லை என்பது கால் வைத்த மாத்திரத்திலேயே புரிந்துவிடும் திறன் வந்துவிடும். மனம் என்பது ஒன்றை அறிந்துவிட்டால் அப்படித்தான், அறியாத நிலைக்குத் தன்னை மீண்டும் கொண்டு செல்லமுடியாது. ஹெராக்ளிட்டஸ் சொல்வதையும் இதனுடன் இணைத்துக்கொள்ளலாம், எந்த மனிதனும் ஒரே நதியில் இரண்டு முறை அடியெடுத்து வைப்பதில்லை.
சரியான இலக்கிய நூல்களை வாசித்துப்பழகிவிட்டால், ஆழமான அர்த்தங்கள் தொனிக்காத நூல்கள் மனதில் படிவதில்லை. வெறும் தகவல்களின் உலகத்தில் உலவும் நமக்கு இந்த உண்மை, ஆழம், அர்த்தம் என்பவை எல்லாம் இன்று வெகு அரிதாகவே கிடைக்கின்றன. உறவுகளில் கூட அப்படித்தான். நல்லுறவுகளைச் சந்தித்துவிட்டால், போலியான உறவுகளின் தன்மைகளைக் கண்டடையும் திறன் வந்துவிடும். நல்ல சுவையான ஆரோக்கியமான உணவுகளை உண்டு பழகிவிட்டால், முதல் வாய் உணவிலேயே மோசமான உணவைக் கண்டுவிட முடியும்.
தட்டையான, மேம்போக்கான, ஒட்டாத விடயங்களுக்கே பழகியிருந்துவிட்டால், வாழ்வின் மீதும் பிடிப்பின்றிப்போய்விடும். சலித்துப் போய்விடும். வெறுமை தட்டி மிகக் குறைந்த காலத்திலேயே முதுமை தட்டிவிடும். ஆழமான வெளி நோக்கி நகர நகர, வாழ்வின் எதிர்க்கரை நோக்கிய தேடல் நம்மை ஈர்க்கும். ஒவ்வொரு நாளும் புதிய வாழ்வை நோக்கி உந்தித் தள்ளும்.
வாழ்க்கை என்பது அவ்வளவு பரந்த தேசம் தான். எல்லையற்ற தேடல்களுக்கும் பயணங்களுக்கும் மனிதர்களுக்கும் வாய்ப்பானது. நாம் தான் வட்டங்களை நம் காலடியைச் சுற்றியே போட்டுக்கொண்டு அதன் நிழலைக் கூட வெளியே பாவ விடாமல் பார்த்துக்கொள்கிறோம். வாழ்க்கையின் சமூகக் கட்டமைப்புகளும் அப்படியே. ஒரு சிறிய பிரச்சனையை, நாங்கள் எங்கள் வீட்டில் எப்பொழுதோ சரி செய்திருக்கமுடியும். நாளுக்கு நாள் அதை வளர விட்டதற்கு அடிப்படையான காரணம், வீட்டில் நடப்பது வெளியே தெரியக்கூடாது என்று பழகிய இறுக்கமான குணம் தான். அண்டை அயலாரின் விமர்சனங்களுக்குத் தயங்கி எங்களை நாங்களே குறுக்கிக் கொண்டோம். பிரச்சனை முற்றி நாம் நினைத்தது விட பெரிதான அவலமாகிவிட்டது. நம் சுற்றி விழும் சருகுகளை நாம் அப்புறப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும். இது ஒரு அன்றாடச் செயல்பாடு.
ஆக, நம் ரசனை, உணவு, உறவு, பண்பு எல்லாவற்றிலுமே இயன்றவரை உண்மையான, ஆழமான அர்த்தம் இல்லாதவற்றிலிருந்து மறு நிமிடமே நம்மை நாமே களைந்து கொள்வது மிகவும் அவசியம். எவ்வளவு பகட்டாக, ஆர்ப்பாட்டமாக இருந்தாலும் அதனால் எந்தத் தொடர் அர்த்தமும் இல்லை. இல்லையெனில் நாளாக நாளாகப் பெரிய சுமை ஆகி அதைச் சமாளிப்பதே பெரிய வேலையாகிவிடும். கலை விடயங்களில் இது பெருத்த முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது. ரசனை என்று இதைப் பழகிய ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டாலும் அது அவ்வளவு எளிதானது இல்லை. தேர்ந்த வாசிப்பு, தொடர் நுகர்வு, வெறும் தகவல் மற்றும் நுகர்வு சரக்குகளைப் புறக்கணித்தல் என்று அலைகளைக் கையால் அடித்து அடித்து முன்னகரவேண்டும். இல்லையெனில், பதின் பருவத்தில் எதை அதிசயித்து ரசித்துக்கொண்டிருந்தோமோ அதுவே சிறந்த படைப்பு என்று அறுபதிலும் தூக்கிப் பிடிப்போம். எங்கேயோ அது நம் வயதிற்கும் வாழ்க்கைக்கும் பொருந்தாத முகமூடியாக இருப்பதை நாம் உணர்ந்திராமலே கரைந்துபோவோம். என்ன தான் மனிதக்கூட்டத்தின் மத்தியில் ஒருவராய் நாம் இருந்தாலும் அவரவர் வாழ்க்கை வெகுவாய்த் தனித்தது தானே.
மனதில் இருப்பதை அப்படியே வார்த்தையாக பார்த்த வியப்பு. தற்போது திண்டுக்கல்லில் புத்தகத் திருவிழா நடக்கிறது. நானும் எனது மகள்களும் சென்றோம். புத்தகங்களைப் புரட்டும் போதே மிக மோலோட்டமாதை கண்டறிய முடிகிறது. ஆயினும் வாசிக்க வேண்டியவற்றை கண்டறிய முடியவில்லை. 4வருடங்களுக்கு முன்புதான் அம்பை அறிமுகமாகி வாசித்தோம். நானும் எனது மூத்த மகளும் (தற்போது வயது 17) . மேலோட்டமாக ஆங்கிலம் தெரியும், ஆனாலும் தமிழில் வாசிப்பதே சுகமாக இருக்கிறது. தாக்கமும் அதிகம். எனவே வாசிக்க வேண்டிய புத்தகங்கள் (சிறு பட்டியல்) முடிந்தால் வெளியிடவும். ஆனி எர்னோ தமிழில் மொழி பெயர்க்க வழியுண்டா? நன்றி!
Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.
Enquiries welcome for poetry, translations, film, and literary events.
Site: Kutti Revathi