இலக்கியத்திற்கான நோபல் பரிசு, இந்த முறை ஒரு பெண்ணியவாதிக்கு!

இலக்கியத்திற்கான நோபல் பரிசு, இந்த முறை ஒரு பெண்ணியவாதிக்கு!

08 Oct 22
Stories


 

 

 

 

நோபல் அறிவிப்பு வந்ததும், ஆனி எர்னோவின் Happening நூலை ஒரே மூச்சில் வாசித்துமுடித்தேன். அவர் சொல்வது போலவே எழுத்தைக் கத்தி போல செயல்படுத்துகிறார். வாசிக்கத் தொடங்கினால் கீழே வைக்கமுடியாது. எழுத்தை ஓர் அரசியல் செயல்பாடு என்று கூறும் இவர் தீவிர வாசிப்பே அவரை எழுத்திற்கு அழைத்துவந்ததாகவும் சொல்கிறார்.

 

சமகாலச் சூழலை கருத்தில் எடுத்துக்கொள்வதில்லை என்று நோபல் கமிட்டி சொன்னாலும், ஒரு பெண்ணியவாதி என்று வருகையில் அது சமகாலச் சூழலை எல்லாவகையிலும் உள்ளடக்கியதே என்பேன். சால்மன் ருஷ்டிக்கோ, ஹாருகி முராகமிக்கோ தான் இந்த முறை விருது என்று அதிகமாய் எதிர்பார்த்த ஒரு நிலையில் ஆனி எர்னோ என்பதே ஒரு கூர்மையான நடவடிக்கை தான். அவரை வாசித்து அறியாதோரெல்லாம் இனி அவரது எழுத்தை வாசித்து ஒரு புதிய பெண்ணியச் சிந்தனை அலையைக் கிளப்பமுடியும். வாசகர்கள் என்போர் வேறு, விசிறிகள் என்போர் வேறு. முராகமிக்கு  நோபல் வழங்கப்படவில்லை என்ற  விசிறிகளின் சீற்றத்தை எங்கெங்கும் காணமுடிகிறது. முராகமியின் கதைகளில் இல்லாத பெண்ணிய பாத்திரங்களா என்று பெயர்களைப்பட்டியலிடுகின்றனர். என்றாலும் ஆனி எர்னோவை, பட்டியலில் உள்ள பிற எழுத்தாளர்களுடன் ஒப்பிடமுடியாத விசிறி வெளிச்சம் இல்லாத வாசகப்பரப்பு கொண்டவராக  இருக்கிறார்.

ஆனி எர்னோவின் எழுத்தை, பெண்ணிய அடையாளத்திற்குள் வைப்பது என்பது உலகின் பல முற்போக்கு சிந்தனைத் தத்துவங்களுடன் இணையிட்டு மனிதச்சிந்தனையை சீர்தூக்கிப் பார்ப்பது என்பது போலத்தான்.

 

எளிமையான ஆனால், ஆழமான நடைபாதையில் கூட்டிச்செல்லும் மூர்க்கமான எழுத்து. இன்னும் சொல்லப்போனால், எழுத்தைக் கத்தி போல செயல்படுத்துகிறார் என்பதை விட, Happening கத்தியால் எழுதப்படுகிறது என்றே சொல்லவேண்டும். ‘வெட்கமில்லாதது’, என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது அவருடைய எழுத்து. சீரிய துல்லியமான நாட்குறிப்புகளிலிருந்து எழுதப்பட்டவை என்பதால் ஒரு காலவரலாறு போலும் உருப்பெறுகிறது.  தொடர்ந்து எழுதிய ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் அவர் எழுத்திற்கான அங்கீகாரத்தினைப் பெறத்தொடங்கியிருக்கிறார் என்று கூறுகிறார்கள்.  பெண்ணின் உடலைச் சூழ்ந்த அரசியலை முன்வைப்பதில் அலைபாயும் தன்மையற்றதாய் இருந்திருக்கிறது அவருடைய எழுத்து. அதுவும் தன்னுடைய உடலின் உள் நின்று முன்வைப்பதில் நீதிக்கான கோரிக்கையாக இருக்கிறது. Happening வாசித்து முடிக்கையில் விடுதலையையும் புத்தெழுச்சியையும் ஒரு சேர உணர முடிகிறது. இந்த உலகம் எழுச்சியுடன் பாய்ச்சலைக்கொள்வதற்கும் கொண்டாட்டத்திற்குமானது என்பது அவருடைய நம்பிக்கை.

 

சமரசமற்ற எழுத்து, சமூக ஏற்றத்தாழ்வினை அறிந்துகொள்ளல், கற்பனையின் திரைகளைக் கிழிக்கும் எழுத்து, பெண்கள் மற்றும் மறக்கப்பட்டவர்களின் விடுதலையை எழுதுதல், சரணடையாத எழுத்து,  அனுபவங்கள் வழியாக நினைவுகளை ஆய்வு செய்தல், தன் தோற்றுப்போன காதல் அனுபவங்கள், கருக்கலைப்பு, பெற்றோர்களின் மரணம், மார்பு புற்றுநோய் போன்ற அசாதாரண நிகழ்வுகளைப் பதிவு செய்திருக்கிறார். உடல், பாலினப்பண்பு,  உடலரசியல், நெருக்கமான உறவுகள், சமூக ஏற்றத்தாழ்வு, காலம், நினைவு மற்றும் தன் வாழ்க்கை அனுபவங்களை மறுக்கமுடியாத வடிவில் எப்படி எழுதுவது என்ற கேள்வி ஆகியவை தாம் இவர் எழுத்தின் கருப்பொருட்கள்.

 

Working-class என்ற பின்னணியில் இருந்து வந்தவர் என்பதற்கு அழுத்தம்கொடுக்கப்படுகிறது, நம் நாட்டில் oppressed people என்பதைக் குறிப்பிடுதல் போல.

 

ஒரு பெண்ணியவாதியின் எழுத்திற்கு வழங்கப்படும்  என்பது என்னளவில் உலகின் மேம்பட்ட சிந்தனைத்தத்துவங்களையெல்லாம் ஒட்டுமொத்தமாகக் கவனத்தில் எடுத்துக்கொண்டதாகவே புரிந்துகொள்கிறேன்.  அவ்வளவு காலமும், உழைப்பும், மேம்பட்ட சிந்தனையும் இதற்கு வழங்கப்படுகிறது. மனிதர்களுக்கேயான இடைவெளியையும் பிளவுகளையும் கண்டடையும் போது அதன் அதை நிரவும் அர்த்தங்களையும் கண்டடைய முடியும். பெருமளவில் இதைப் பெண்ணெழுத்தே செய்திருக்கிறது. பெண்கள் மீதான அமைப்புகளின் அழுத்தம் இந்தப் பணியைப் பெண்களைச் செய்யத் தூண்டுகிறது. எழுத்தில் அரசியல் அவசியமா என்று அவ்வப்பொழுது கேள்விகள் எழுந்து ஓய்கின்றன. பெண்ணெழுத்தில் அரசியலின்றி ஏதும் இல்லை.

 

வழக்கம்போலவே,  உலகளாவிய படைப்பாளிகளின் நூல்களைத் தேடும் போதெல்லாம் கால சுப்ரமணியம் அவர்களிடமே தஞ்சம் அடைகிறேன். ஆனி எர்னோவின் எல்லா நூல்களையும் தொகையாக வழங்கி உதவியுள்ளார். சீரிய வேகத்தில் வாசித்துவிடமுடியும் என்று நம்புகிறேன். தொடர் வாசிப்பே  அடுத்தக்கட்ட எழுத்திற்கு அழைத்துச் செல்கிறது.

Write To Author

About ME

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book.

Get In Touch

Address: 262 Milacina Mrest.

Phone: +91 3333 6789.

Tax: +91 3333 6789.

Email: support@kr.com

Website: www.kr.com