புரிசை நாடகவிழா 2022 விடிய விடிய

புரிசை நாடகவிழா 2022 விடிய விடிய

03 Oct 22
Stories


 

சவால்களில் எனக்குப் பெரிய சவால், இரவு முழுக்க விழித்திருப்பது தான். அதிலும் ஒழுங்கான உறக்கமின்மையால் உடல் நலம் பாதிக்கப்படும் என்று உள்ளுணர்வு அறிவுறுத்திக்கொண்டே இருக்கையில் முழு இரவு விழித்திருப்பதை ஒரு குற்ற உணர்வோடு தான் கழிப்பேன். இரண்டு மூன்று மணி வரை விழித்திருப்பது கொண்டாட்டமாக இருக்கும். அதற்கு மேல் சில நிமிடங்களுக்கு ஒரு முறை கைகடிகாரத்தைப் பார்க்கத் தோன்றிவிடும். இரண்டு இரவுகள், புரிசை கிராமத்தில் கலைமாமணி கண்ணப்பத் தம்பிரான் அவர்கள் நினைவாக தெருக்கூத்து & நாடக விழா நிகழ்ந்தது. பதினாறு ஆண்டுகளுக்கு மேலாக நடத்திவருகிறார்கள்.

தொடக்கத்தில் சில ஆண்டுகள் கலந்துகொண்டிருக்கிறேன். எப்படியும் நாடகத்துறையில் கால் ஊன்றிவிடுவேன் என்று நினைத்திருந்த காலம் அது. பிரவீண் இயக்கி, இன்று புகழ்பெற்றிருக்கும் பல நாடகக் கலைஞர்களான கலைராணி, பசுபதி, ஜெயக்குமார் உள்ளிட்ட அனைவரும் நடித்த பொன்னியின் செல்வன் நாடகத்தில் நடிப்பதில் பங்குபெற்றிருக்கிறேன். பல ஆண்டுகள் கழித்து, புரிசை ஊருக்குள் செல்வது புராதன ஊருக்குள் செல்லும் உணர்வைக் கொடுத்தது. சூரியன் மறையும் நேரத்தில் நுழையும் பொது ஊரை விழாவின் பரபரப்பும் களையும் தொற்றியிருந்தது. இரண்டு நாட்களும் நல்ல உணவு அளித்து அன்புடன் உபசரித்து விழாவில் கலந்துகொள்ளச் செய்கிறார்கள். இந்த முறை நிறைய இளைஞர்கள்.

ஒரு முறை நாடகத்தின் மீது ஆர்வம் தொற்றிக்கொண்டால் அந்தப் பித்தம் எப்பொழுதும் ஏறிக்கொண்டே இருக்கும். நாடகத்தில் பங்கு பெற வேண்டும் என்றில்லை. தெருக்கூத்தையும் நாடக உருவாக்கங்களையும் பார்ப்பது படைப்பியக்கத்தின் இன்னொரு துல்லிய, தூயச் செயல்பாடு. எப்படியும் நான் நாடகத்துறையில் தொடராமல் போனது எனக்கு இழப்பு தான், தோல்வி தான். புரிசை கிராமத்தில் அவ்வப்பொழுது ஏதேனும் இசைக்கருவி, தெருக்கூத்துக் கலைப்பயிற்சி என்று கொடுப்பார்கள். இந்த முறை கூட, பத்து நாட்கள் தொடர்ந்து தப்பாட்டமும், தெருக்கூத்தும் பயிற்சி அளித்து அவற்றை பயிற்சி பெற்றவர்களை வைத்து மேடை ஏற்றினார்கள். தப்பாட்டம் நிகழும் போதும் சரி, தெருக்கூத்து அரங்கேறும் போதும் சரி பார்வையாளர்களும் அதில் பங்கேறும் விதமாக நட்பார்ந்த சூழலாக இருந்தது.

என் உறக்கத்திற்கு வருகிறேன். இருளரின் மாசிமகம் விழாவில் முழு இரவும் கலந்துகொண்டிருக்கிறேன். அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் எங்கேயேனும் காலை நீட்டி உறங்க முடிந்தால் போதும் என்ற தீவிர எழுச்சி உடலைப் பற்றிக்கொள்ளும். அது போல, இந்த முறையும் உறங்கச் சொல்லி உடல் உத்தரவு கொடுத்துக்கொண்டே இருந்தாலும், விடியும் முன் தான் வாலி மோட்சம் தெருக்கூத்து நிகழ்வைத் தொடங்குகிறார்கள் என்பதால், அதைப் பார்க்காமல் நாடக விழா நிறைவுறாது. முன்பெல்லாம், முழு இரவும் தெருக்கூத்து நிகழ்வைப் பார்த்திருக்கிறேன். கதாபாத்திரங்களின் நாடக நிகழ்த்துதல் பிரதி ஒரு பரவசத்தைக் கொடுக்கும்.

விடிய விடிய விழித்திருந்தால், மறு நாள் முழுதும் மயக்க மருந்து எடுத்துக்கொண்டது போல் இருக்கும். அதிலும் இம்மாதிரியான உயர்எழுச்சி நாடகவிழாவின் நிகழ்த்து வெளிப்பாட்டுத் தீவிரம் மனதில் நிறைய படிமங்களை, சரசரவென்று உருவாகும் கற்பனையெழுச்சிகளைத் தரக்கூடியது. உறக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையே எல்லோரும் நகர்வதை உணரமுடியும். இரண்டு எல்லையிலிருந்தும், அதாவது கலை எல்லையிலிருந்தும் சமூக எல்லையிலிருந்தும் மக்கள் ஐக்கியமாவதை உணரமுடியும். நாடகவிழாவின் மேடைக்கு முன்னே அவரவர் படுக்கையையும் பாயையும் எடுத்துவந்து அமர்ந்து பார்ப்பதும் அப்படியே பார்த்தபடி தூக்கம் வந்தால் அங்கேயே தூங்கிக்கிடப்பதும் அவர்களுக்கு மத்தியில் அமர்ந்து மற்றவர்கள் நாடகத்தைப் பார்ப்பதும் தொடரும் வழக்கம் தான். புரிசை கிராமத்தின் அமைப்பு, இந்த இயக்கத்திற்கு அழகு சேர்க்கிறது. இசையும் கதாபாத்திரங்களும் கதையும் ஒன்றுக்குள் ஒன்றாகச் சுருண்டு மண்டைக்குள் திணிக்கப்பட்ட உணர்வில் இன்னும் நேற்றைய இரவின் அனுபவம் தொலையவில்லை. அத்துடன் இரவெல்லாம் விழித்திருந்தது, உடலுக்குள் ஒரு போதையுணர்வைத் திணிக்கிறது.

சொல்லப்போனால், நாடகத்துறை தான் தீவிரமாக இயங்குகிறதோ என்று தோன்றுகிறது. இதிலும் நமக்குக் குறைகளும் விமர்சனங்களும் இல்லாமல் இல்லை. ஆனால், அன்றிலிருந்து கண்ணப்பத்தம்பிரானின் கலையார்வத்தைத் தொற்றி வரும் அதே கலைஞர்கள் தம் தீவிரத்தின் கத்தியைச் சாணை தீட்டிக்கொள்கிறார்கள். இயக்கத்தின் முழு வீச்சுடன் செயல்படுகிறார்கள்.

அவரவர் இயங்கும் கலை வெளியில் முழு ஊக்கத்துடன் உற்சாகத்துடன் இது போன்ற மாய இரவுகளுக்குள் நிகழும் நிகழ்த்துக்கலை பெரு ஊக்கமருந்து. தனக்கு உள்ளேயே கைகளை விட்டு அள்ளிச் சலித்துப் பார்த்துக்கொள்ளும் அவகாசத்தையும் பயிற்சியையும் கொடுக்கும் அனுபவம். ஒரு தன்னிலை அலசல் என்றும் சொல்லலாம். கதை சொல்லலின் மூர்க்கம் விட்டுபோகாமல் அதே சமயம் பல வகை பாணி நாடகங்களை ஒரே இடத்தில் ஒன்றின் பின்னாய் மற்றொன்றைப் பார்க்க முடிவது, கலைச்செல்வத்தை அள்ளிக் கையில் கொடுப்பது போல. கடற்கரையில் காலாற நடந்து கொண்டிருப்பவரை எதிர்பாராத ஒரு தருணத்தில் அலையொன்று வந்து மண்ணில் சரித்து நனைத்துத் தோய்த்தெடுப்பது போல. நாடகக்கலை இயக்கம் புத்துயிர்ப்பு பெற்றிருக்கிறது.

Write To Author

About ME

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book.

Get In Touch

Address: 262 Milacina Mrest.

Phone: +91 3333 6789.

Tax: +91 3333 6789.

Email: support@kr.com

Website: www.kr.com