பெரியாரும் சித்த  நாத்திகமும்

பெரியாரும் சித்த  நாத்திகமும்

19 Sep 22
Stories


 

 

தமிழர்கள் இந்த உலகத்திற்கு அளித்த கொடை என்றால் அது நாத்திகம் என்பேன். அது ஒரு கருத்தாக்கமாக, தத்துவமாக, சிந்தனையாக, கள எழுச்சியாக, இயக்கமாக ஆனது பெரியாரின்  தீவிர சமூகப்பணிகளுக்குப் பின்பு தான். என்றாலும் அதற்கு முன்பே தமிழர்களின் வாழ்வியல் நெறியாக நாத்திகமே இருந்திருக்கிறது. இதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்களை என் இடத்தில் இருந்து சொல்லமுடியும்.  ஒன்று, கீழடி, ஆதிச்சநல்லூர் பகுதிகளின் இன்று வரை தொடரும் அகழாய்வுகளில் சமயச்சான்றுகளோ, சமயச்சின்னங்களோ இல்லவே இல்லை. தமிழர்களின் வாழ்வியல் திணை வாழ்வியலாக, திணை சமுதாயமாகவே இருந்திருக்கிறது. இன்னொன்று, தமிழ் மருத்துவர்கள் என்று இன்று நாம் கொண்டாடும் சித்த மருத்துவத்தின் அடிப்படையும் இதுவே. கடவுள் இல்லை என்பதையே அவர்கள் முழக்கமாக வைத்தனர். கடவுள் இல்லை என்ற தத்துவம் மனித உடலின் விழுமியங்களுக்கு அதிக மதிப்பு அல்லது முதன்மையான கவனம் கொடுக்கப்பட்டதால் விளைந்தது. ஒரு வாக்கியத்தை இப்படிப் புரட்டிப் போட்டது போல் தான் உயிருடலே உண்டு என்பதே கடவுள் இல்லை என்பதாகப் புரண்டு விழுந்திருக்கவேண்டும்.  இதனால், ‘குகை கலவரம்’, என்று ஒன்று நிகழ்ந்து சித்தர்கள் எல்லோரும் குகைகளுக்குள் அடைத்துக் கொல்லப்பட்ட சம்பவத்தையும் தமிழ்ப்பண்பாட்டறிஞர் தொ. பரமசிவன் அவர்களிடம் இருந்து நான் கேட்டிருக்கிறேன்.  பெரியார், ஒரு மொழிப்பண்பாட்டில் ஒரு குறிப்பிட்ட காலகாட்டத்தில் என்னென்னவோ எழுச்சிகளை, சீர்திருத்தங்களைச் செய்திருக்கிறார். என்றாலும், என்னை அதிகம் கவர்ந்தது அவருடைய நாத்திகத் தத்துவம் தான்.  துணிச்சல் ஓங்கியது.  மொழி வகையில், பாலின வகையில் அவருடைய சிந்தனைகள் இன்றும் நவநாகரிகப் பெண்கள், ஆண்கள் கற்றறிய வேண்டிய நவீனம் தொனிப்பவை. என்ன தான் முற்போக்குச் சிந்தனை உடையவர்கள் என்ற பட்டம் கொண்டிருந்தாலும் கூட அவர்கள் பெரியார் அளவிற்கு எம்பிக்குதிக்க முடிவதில்லை. இந்திய நாட்டின் சாதிய அடிமைப்பண்பாட்டையும் அதே சமயம்  முழு விடுதலையார்ந்த  சீர்திருத்த வெளிகளையும் அறிந்திருக்கும் ஒருவரால் தான் நாத்திகத்தையே  முழங்கமுடியும்.  இந்தியாவின் ஒட்டுமொத்த பிரமாண்ட வரைபடத்தை முழுவதுமாய்ப் பார்க்கும் கண்கள் கொண்டவர்கள் வெகு சிலரே. அவர்களின் ஒருவர் பெரியார்.

 

நான் இன்னும் அதிகமாய்ச் சொல்லவருவது, நாத்திகத்தைப் பயில்வோர் நடைமுறையில் பின்பற்றுவோர், தம் வாழ்வை வேறெவரை விட அதிகமாய்ச் சமூகத்திற்கும் தனக்கும் பயன் உடையதாய் மாற்றும் வழிமுறைகளைக் கண்டறிந்திருக்கின்றனர் என்பதே.

 

Write To Author

About

Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.

Get in touch

Enquiries welcome for poetry, translations, film, and literary events.

Site: Kutti Revathi