
ஒரு காலத்தில் தொடர்ந்து ரயிலைப் பற்றிய அதிதீவிர கற்பனை கவிதைகளை எழுதிக்கொண்டிருந்தேன். அதிகமான ரயில் கவிதைகளை எழுதியிருக்கிறேன். ரயிலில் நீள் தூரம் பயணிப்பது இன்றும் மிக விருப்பமான ஒன்று. சமீபமாய்க் கூட, தொடர்ந்து ‘ரயில் கனவுகள்’ வரும் படியாக பதினைந்து நாட்களுக்கும் மேல் பயணத்தில் இருந்திருக்கிறேன். இந்தத் தொடர் ரயில் பயணங்கள் வழியாக, ஒரு ரயிலில் எப்படி வசதியாகப் பயணிப்பது என்பது பற்றிய அடிப்படை அறிவைக் கற்றுக்கொண்டேன். இதுவல்லாமலும் எழுத்து, வாசிப்பு பணிகளையெல்லாம் இந்தப்பயணத்தில் முடித்துவிடமுடியும். தூக்கப்பற்றாக்குறைகளையும் இந்தப்பயணங்களில் சரி செய்துகொள்ளமுடியும்.
இதுவும் பயணம் பற்றிய பதிவு அன்று. ஒரு முறை ரயில் பயணத்தில் ரயில் அதிகாரி ஒருவரின் அலட்சியச் செயலால் விபத்துக்குள்ளாகி தன் இருகால்களையும் ஒரு கையையும் இழந்த நண்பரின் நீதிக்கான போராட்டத்தைப் பற்றிய ஓர் ஆவணப்பட உருவாக்கத்தில் ஈடுபட்டிருக்கிறோம். இதறுப் பின் ரயில் நிலையங்கள் முற்றிலும் வேறாகத் தென்படத்தொடங்கியிருக்கின்றன. அவ்வளவு வசதி குறைபாடுகளுடன் ஒவ்வொரு பெரிய ரயில் நிலையமும் இருப்பதை உணரமுடிகிறது. அதிலும் வயது முதிர்ந்த என் அம்மாவை அழைத்துக்கொண்டு சொந்த ஊர் செல்லும் பயணத்தின் போது, இயங்கும் ரயில் நிலையங்களின் துடிப்பையும் செயல்பாடுகளில் இருக்கும் குறைபாடுகளையும் முற்றிலுமாக உணரமுடிந்தது. கூலிக்கு ஆட்களை அமர்த்திப்பயணித்த ஆங்கிலேயர்களுக்கான வசதிகளுடன் அமைக்கப்பட்ட ரயில் நிலையங்கள் இன்று நம் பாமர மக்களுக்குமான ரயில்நிலையங்களாயும் இருக்கமுடியாது. அவ்வளவு படிகளையும் தங்கள் பயணப்பெட்டிகளைச் சுமந்து கொண்டு ஏறி இறங்குவது சாத்தியமில்லை. பல இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் மின்சாரப்படிக்கட்டுகளில் பழக்கமின்மையால் பெண்கள் விழுவதை கண்ணெதிரேயே பார்த்திருக்கிறேன். மின்சாரத்தில் இயங்கும் படிக்கட்டுகளில் பயணிக்கக் கொஞ்சமேனும் உபயோகப்பழக்கம் வேண்டும். இப்படி ஒன்றுக்கு ஒன்று முரணாய் இயங்கும் ரயில்துறை, அதிக வருவாய் அளிக்கும் துறை. அதே சமயம், அதிக மக்கள் பயன்படுத்தும் துறை.
இப்பொழுதெல்லாம் இந்த ரயில்நிலையங்கள் மீது புதிதாக ஒரு துயரும் கோபமும் வந்து படிந்துகொண்டது போல் இருக்கிறது. அதிகப் போராட்டத்திற்குப் பின்பே ஒரு ரயில் பயணத்தை ஒரு சாதாரண மனிதரால் ஏற்கமுடியும் என்ற நிலை. ரயில் நிலையங்களைப் பெருவாரியாக புனரமைக்கவேண்டும் என்று நினைக்கிறேன். நவீனமுறை வசதிகள் குறித்தும் இன்றைய மக்கள் வாழ்வியல், உடல்நிலை அவதிகள் குறித்தெல்லாம் பரந்த விழிப்புணர்வு அவசியம். ஊனமுற்றவர்கள் இயல்பாகப் பயணிப்பதற்கான தனித்த ஏற்பாடுகளையும் செய்யவேண்டும். இன்றும் மக்கள் ஒருமித்த சமூகமாய்ப் பயணிப்பதற்கான வாகனம் ரயில் மட்டுமே. ஒப்புரவை அளிப்பது ரயில் பயணம்.
சமீபத்தில் திருச்சியிலிருந்து வடஇந்தியா செல்லும் பகல் ரயிலில் பயணித்தேன். நான் பயணித்த பெட்டியில் இன்னும் இருவரே இருந்தனர். அமைதியான, வெறுமையான பெட்டி, நேரடியாக இன்னொரு புதிய உலகத்திற்கு அழைத்துச் செல்லும் ஊர்தி. அவ்வளவு அழகான பயண அனுபவத்தை நான் உணர்ந்ததில்லை. ரயில் சாளரம் வழியாக, கடந்து செல்லும் தமிழ்நாட்டின் ஊர்களையும், நீர்நிலைகளையும், மக்கள் வாழ்வையும் பார்க்கக் கிடைப்பது புதிய ஊக்கம். மீண்டும் சில ரயில் கவிதைகளையும் எழுத முடிந்தது. காலத்தின் சலிப்பின்மை இல்லாத ஓர் உலகத்தில் அயர்ந்து ஒரு சிற்றுறக்கமும் வாய்த்தது.
Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.
Enquiries welcome for poetry, translations, film, and literary events.
Site: Kutti Revathi