
பாடகர் பம்பா பாக்யாவின் மரணம் மட்டுமன்று, இதுபோன்ற இளைய கலைஞர்கள், திறனாளிகள் தொடர்ந்து ஒவ்வொருவராய் சட்டென்று மரித்துப்போவது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. சில நாட்களுக்கு முன், வாழ்க்கை ஒரு நொடியின் குமிழ் என்று ஒரு பதிவை எழுதி வைத்தேன். இம்மாதிரியான கலைஞர்கள் மறைந்து போகும் போது, நம் வாழ்விற்குத் தம் கலை வழியாக, திறன் மூலமாக அழகு சேர்த்த அந்த அழகும், நம் வாழ்வின் ஒரு பகுதியும் கூடத் தொலைந்து போகிறது. நம் எல்லோரின் வாழ்வும் நல்வழியிலோ, கேடான வழியிலோ ஒருவருடன் ஒருவர் இணைக்கப்பட்டதான ஒரு காலகட்டத்தை வந்து சேர்ந்திருக்கிறோம்.
அதிலும் இசையும் பாடலும் நம் வாழ்வில் இரண்டறக்கலக்க நம்மிடம் வந்து சேர்ந்தவர்களை நாம் பறிகொடுக்க இயலாது. இன்று காலையில் ஒரு நண்பன் அழைத்து பம்பா பாக்யா பற்றிய அந்தச் செய்தி பொய்யான செய்தி என்று சொல்லுங்கள், ப்ளீஸ் என்று கரைந்தார். இது போன்ற மரணங்களுக்கு என்ன காரணமாக இருக்கும் என்று கேட்டார். எனக்குக் காரணம் தெரியவில்லை. ஆனால், என்னளவில் சட்டென்று ஒரு காரணம் தோன்றியது, இரவு உணவைத் தாமதமாக உண்ணுவதாக இருக்கலாம் என்று சொல்லிவைத்தேன்.
நவீன இலக்கியத்தின் ஒரு வகைமை போலவே, போலச் செய்தல் நடவடிக்கைகள் நம் வாழ்க்கையில் பெருகிவிட்டன. உணவு போல ஒன்றைச் சாப்பிடுகிறோம், உறவைப் போல ஒன்றைக் கடைபிடிக்கிறோம், வாழ்க்கையைப் போல ஒன்றை வாழ்கிறோம். உண்மையான அர்த்தங்களில் இவையெல்லாம் எங்கோ தொலைதூரக் காலத்தில் தொலைந்து போய்விட்டன. இந்தப் “போல”, வாழ்க்கை முறையைச் சமீபத்தில் சந்திக்கும் நண்பர்களிடம் எல்லாம் சொல்லத் தொடங்கியிருக்கிறேன்.
உணவு விடுதிகளில் உணவு சரியில்லை என்று வீட்டிலேயே தயார்செய்து உண்டாலும் அது இந்தக்காலத்தில் “உணவு போல”, ஒன்றாகத் தான் இருக்கிறது. எந்த உறவின் அடையாளமுமே ‘உறவு போல’, ஒன்றாக மாறியிருப்பதையும் உணர்கிறேன். அதாவது, தாய் போல ஒருவர், கணவன் போல ஒருவர், நண்பர் போல ஒருவர், சகோதரர் போல ஒருவர்.
இவற்றில் விதிவிலக்குகள் இருக்கலாம். அங்கொன்றும் இங்கொன்றுமாக உண்மையான தன்மைகளுடன் இவர்களை அடையாளம் காணும் போது திகைப்பாகவே இருக்கிறது.
நகரத்தின் பரபரப்பான, அன்றாட வாழ்க்கையில் சிக்கிக்கொண்ட தன்மை, Obsessed மனநிலைகள், ஒன்றுக்குள் தன்னைத்தானே வலிந்து திணித்துக்கொண்ட அடம் நிரம்பிய மனத்துடனும் உடலுடனும் வாழ்வது, நகரவாழ்வியலின் அதி தீவிர வேகத்தன்மையுடன் தன்னைப் பிணைத்துக்கொள்வது, இரவு உணவை மிகவும் தாமதமாக உண்ண அது சீரணிக்கும் காலத்தை அளிக்காமல் இருப்பது, நல்வகை கொழுப்புகளை எல்லாம் நம் வாழ்விலிருந்து இழந்தது என நிறைய காரணங்கள் தொடர்கின்றன. முந்தைய மூத்த தலைமுறையின் உடல் வழு நம்மிடம் இல்லை. ஒரு கருவைக் கூடக் கருப்பையில் தாங்கக்கூடிய திறன் அளிக்காத உணவு முறைகளும் அரிசி வகைகளும் நம் வாழ்வில் வந்து சேர்ந்துவிட்டன. வாழ்வும் நம்மைப் பிணைக்கும் அறநெறிகளும் இல்லை. நண்பர்களும் இல்லை. செம்மாந்த உறவுகளும் இல்லை. தன் வாழ்க்கையுடன் தன்னைப் பிணைக்க எல்லாமும் தாம் தேவையாக இருக்கின்றன. அந்த வலுவுடன் தான் தன் வாழ்வை ஒவ்வொரு மனிதனும் காத்துக்கொள்ள முடியும்.
பாக்யாவை நேரில் சந்தித்ததில்லை. அவர் பாடல் வெளிவரும் போது, அவரது படைப்பு புதிய கண்டுபிடிப்பாக இருந்தது. தேடிச்சென்று அவர் யார் என்று அறிந்துகொண்டேன். நெஞ்சைக் கல் கொண்டு தாக்கும் நிகழ்வுகளில் பம்பா பாக்யாவின் மரணமும் ஒன்று. இதுவும் ஒரு மரணம் போல இருக்கக்கூடாதா.
நண்பர்களே, மிகவும் மெதுவாக வாழவேண்டும் போல இருக்கிறது, நீண்ட காலம் வாழவேண்டும் போல இருக்கிறது, நம் வாழ்வில் வந்து சேரும் கலையழகு மிளிரும் கலைஞர்கள் எல்லாம் வாழக்காண வேண்டும் போல இருக்கிறது.
**
Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.
Enquiries welcome for poetry, translations, film, and literary events.
Site: Kutti Revathi