நான் உருமாறிவிட்டேன்
காலங்களின் உருக்குலைந்த எழில்
பூமியைச் சுற்றி வருவது போல
பறவையொன்று அடிவானில் சிறகடிப்பது போல
மதியத்தின் உச்சத்தில்
ஒற்றைமரத்திலிருந்து தேங்காயொன்று
அறிமுகமான சத்தத்துடன் முற்றத்தில் வீழ
மரத்தின் கிளைகள் எல்லாம்
மஞ்சள் கொடிகளாய் அசைந்து பறந்தெழும்
பகலில் உன் மீது வீசும் கதிர்காலங்களில்
உன்னைக்காண்பது மறந்து
இரவுகளின் திண்மையான தருணங்களில்
மோகக்குமிழ்கள் சிதற
எல்லோரும் குடும்பச்சவால்களில் அயர்ந்துபோய்
கனவுகளில் கூடத்தொலைந்து போய்
காலையில் கனவுகளை மீளச்சொல்லா
அன்றாடத்திலும் கரைந்து போய் குழம்பிப்போய்
சென்ற வழியே வந்து திரும்பும்
பாதைகளில்
நாமென்ற அபூர்வம் குலையாது
சூரியனைச் சிதறவிடாது
என்னை வீணையாக்கு வீணையாக்கு
என்று மன்றாடுகிறேன்
நீ கண்மூடி விரல்களால்
காற்றின் நரம்புகளைக் கனவு காண்கிறாய்
குட்டி ரேவதி
Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.
Enquiries welcome for poetry, translations, film, and literary events.
Site: Kutti Revathi