தேஜஸ் ரயில். சென்னையிலிருந்து மதுரை செல்வது. காலை ஆறு மணிக்குக் கிளம்பினால் 9.55க்கெல்லாம் திருச்சிக்கு வந்துவிடும். தனியார் மயமானது என்பதை எல்லாவகைகளிலும் நிறுவுகிறார்கள். வேகம், உணவு இவையெல்லாம் ஒரு விமானத்தில் போல கவனிப்பு. இவற்றையெல்லாம் இந்திய ரயில்வே கொண்டுவந்தாலும் வண்டிகள் வேகமாக ஓடும், உணவும் ருசிக்கும். ஆனால், நமக்கெல்லாம் நாட்டுப்பற்று கொஞ்சம் குறைவு தான்.
நாற்காலி அமைப்பு இருக்கைகள் என்பதால், ஏறி இறங்குவதற்குள் ஒரு புத்தகத்தை வாசித்துவிடலாம். இந்த முறை, லதாவின் ‘கழிவறை இருக்கை’, நூல். மிகவும் பேசப்பட்டு, அதிகம் வாசிக்கப்பட்ட நூல் என்பதால் வாசித்து விட வேண்டும் என்ற பிடிவாதத்தில் இருந்தேன்.
ஆனால், ஏறியது முதல், பத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் ஐம்பத்தைந்து அறுபது வயதுகளில் இருப்போர் மிகவும் சத்தமாகப் பேசியபடி, அதிக ஒலித்திறனில் சிரித்தபடியே உரையாடிக்கொண்டு வந்தார்கள். அப்படி மகிழ்ச்சியாக இருப்பவர்களைப் பார்ப்பதற்கு முதலில் மகிழ்ச்சியாகத் தான் இருந்தது. அவர்களின் அன்னியோன்யம் ரசிக்கும் படியாகவே இருந்தது. முன் இருக்கையில் இருந்தவர்கள் பின்னோக்கி எழுந்து நின்றபடி, பின்னிருக்கையில் அமர்ந்திருப்பவர்களுடன் அயராது உரையாடிக்கொண்டே வந்தார்கள். ஒரு கட்டத்திற்கு மேல், அது ரசிப்பதாக இல்லை. தொல்லையாக இருந்தது. இத்தனைக்கும் முதிய பெண் ஒருவர் எழுந்து வந்து ‘கொஞ்சம் சத்தத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள்’, என்ற வேண்டுகோளை முன்வைத்துவிட்டுச் சென்றார். அதற்குப் பிறகு அந்த வேண்டுகோளை அவமதிப்பது போல இருந்தன அவர்களின் நடவடிக்கைகள்.
பொது இடத்தில் குடிமை உணர்வைப் பின்பற்றவேண்டும். இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்ற விதிகளைத் தாண்டிய பொறுப்புகள் இடத்திற்குத் தகுந்தாற்போலவும் சூழலுக்குத் தகுந்தாற்போலவும் இருக்கின்றன. அவற்றை இதுயிதுவென்று விளக்கிட முடியாது. இத்தகைய குடிமை உணர்வைப் பின்பற்றுதே ஒருவகையில் நாட்டுப்பற்றுணர்வுடன் தொடர்புடையது என்று சொல்லலாம். சாளரங்கள் எல்லாம் மூடிய குளிரூட்டப்பட்ட வண்டியில் சத்தம் சிதறி வெளியேறாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருப்பது போல் இருந்தது. இதற்கிடையில் என் முன்னிருக்கையில், கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது எனக்குத் துல்லியமாகக் கேட்கும்படியாக இருந்தது.
பின்னிருக்கைகளில் ஒரு பள்ளியில் இருந்து மதுரைக்குச் செல்லும் பதினைந்து வயது மிக்க மாணவ மாணவியர் நிறைந்திருந்தனர். மகிழ்ச்சியை அவர்கள் சத்தம் என்று அடையாளம் கண்டிருந்ததால், பெரும் இரைச்சல். பார்ப்பதற்கு அழகானதாக இருப்பது ஒரு கட்டத்தில் நாராசமாக, சூழலுக்கு இசையாத சத்தமாக மாறிவிடுகிறது. எப்பொழுது இறங்குவோம் என்ற நிலைமையை அந்தப் பெட்டியில் இருந்தோர் எல்லோருமே பெற்றுவிட்டார்கள். தன்னுடைய மகிழ்ச்சி என்பதை மற்றவர்கள் மகிழ்ச்சியைப் பொருட்படுத்தாது என்று தான் நாம் அறிந்துவைத்திருக்கிறோம் போலும்.
ஆண்களுக்கு அடக்கம் அவசியம் என்று நீண்ட காலமாகவே சொல்ல நினைத்திருந்தேன். இந்த நிகழ்வை ஒட்டி இதைச் சொல்லிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். ரக்கட் ஆண், சாக்லேட் ஆண் எல்லோரையும் தாண்டி அடக்கமான ஆண் தான் அழகான ஆண். அப்படியான சில ஆண்களை என் வாழ்வில் சந்தித்திருக்கிற படியால் இதைச் சொல்லமுடிகிறது.
**
Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.
Enquiries welcome for poetry, translations, film, and literary events.
Site: Kutti Revathi