
சுதந்திரம் என்ற சொல் யாருக்குத்தான் பிடிக்காது. சொல் என்ற அளவில் எல்லோருக்கும் உகந்ததே. ஆனால், செயல்படுத்திப் பாருங்களேன், எவ்வளவு எதிர்வினை வருகிறதென்று. யாருமே சுதந்திரத்துடன் இல்லை.
மூவர்ணமும், அசோகச்சக்கரமும் என்ன விளக்குகின்றன என்பதை நாம் நம் சிந்தனையில் ஏற்றிக்கொள்ளாமல் இவற்றைக் கொடியாக ஏற்றி என்ன பயன். பொது நீர்ச்சேமிப்பிலிருந்து தாகத்திற்கு நீர் எடுத்துக்குடித்ததற்காக, சிறுவன் ஒருவன் அடித்தே கொல்லப்பட்டிருக்கிறான். இன்றும் பள்ளிச்சிறுமியர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிக் தினந்தோறும் ஒரு பொதுச்செய்தியாகும் அளவிற்குக் கொல்லப்படுகின்றனர். என்றுமில்லாத அளவிற்கு இது கடந்து செல்லும் ஒரு செய்தியாகிவிட்டது. வயது முதிர்ந்த பெண்கள் கூடக் கடத்திச் செல்லப்பட்டு கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகின்றனர். சுதந்திரத்தின் வட்டத்தை விரிக்க விரிக்க எங்கெல்லாம் மேடுபள்ளங்களும் கிழிசல்களும் இருக்கின்றனவோ அவையெல்லாம் புலப்படுகின்றன. இதில் எங்கே சுதந்திர தினத்திற்காகப் பெருமைப்பட்டுக்கொள்ளமுடியும்.
சுதந்திரம் அடைந்த வரலாற்றுக்காகப் பெருமைப்படவேண்டுமா, அல்லது சற்றும் சுதந்திரமே அடையாத இன்றைய நிகழ்காலத்திற்காக சுதந்திரம் பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கைகாகப் பெருமைப்படவேண்டுமா, இல்லை ஒரு கொடியாக நெஞ்சில் குத்திக்கொள்ளக் கிடைத்த வாய்ப்பிற்காகப் பெருமைப்படவேண்டுமா. மதவேறுபாடுகளையுகம் சாதி ஏற்றத்தாழ்வுகளையும் நெஞ்சில் சுமந்துகொண்டே அதன் மீது இந்தக்கொடியைக் குத்திக்கொள்வது நாட்டிற்கு இழைக்கும் துரோகம் இல்லையா.
நாட்டுப்பற்று மிக்கவள் என்ற முறையில் சொல்கிறேன், நம் நாடு இந்தியா என்று பெருமைப்பட நிறைய ஒருங்கிணைந்த செயல்பாடுகளில் நாம் ஈடுபடவேண்டியிருக்கிறது. சுதந்திரம் என்பது அதனுடன் சமத்துவமும் சகோதரத்துவமும் இணைந்து பொருள் பெறும்போது தான் முழுமையான மதிப்புறுகிறது. எவ்வளவோ இந்திய மக்களுக்கு, சகோதரர்களுக்கு அவர்களுக்கு உண்டான சுயமதிப்பையும் வாழ்வுரிமையையும் கொடுக்காத அளவில் இது பெயரளவில் தான் ஒரு சுதந்திர தினம்.
பெண் ஆண் வேறுபாடாகட்டும், மத வேற்றுமையாகட்டும், சாதி ஏற்றத்தாழ்வுகளாகட்டும் இங்கே ஒன்றொடொன்று முடிபோடப்பட்டிருக்கின்றன. இச்சிக்கலைக் களையும் துணிவும் தெளிவும் உறுதியும் இன்றி நம் நாட்டின் உண்மையான சுதந்திர தினம் எவ்வளவு அழகானது என்று நாம் உணரவே முடியாது.
அசோகச்சக்கரத்தின் 24 ஆரங்களும் பெளத்தத்தின் 24 நெறிகளைக் குறிக்கின்றன. நம் நாட்டின் கொடியாகத் திகழும் இந்த 24 ஆரங்களைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள, அண்ணல் அம்பேத்கரின் புத்தமும் அவர் தம்மமும் வாசிக்கவேண்டும். பலர் சொல்லும் அவதூறு போல, இலங்கையின் பெளத்தமன்று இது. இந்தியாவில் தோன்றிய கெளதம புத்தர் வலியுறுத்திய பெளத்த நெறிகள் அவரின் உண்மையான செயல்படுத்தல் அளவிலேயே வலியுறுத்தப்படுபவை.
இந்தியாவின் இயற்கையான வளங்களுக்கும் நம் மண்ணுக்காக உழைத்தோர் வலியுறுத்திய நெறிமுறைகளுக்கும் நம் நாடு போற்றப்பட்டிருந்தால் இன்று நம் மண் இவ்வளவு வன்முறையின் சுவடுகளுடன் இருந்திருக்காது. ரு புறம் பிரிவினையை விதைத்துக்கொண்டே அகிம்சையைப் போற்றுதல் போல் தான் இதுவும்.
ஆனால், நண்பர்களே, நாமே விதந்தோதும் வன்முறையும், செயல்படுத்தும் பிரிவினையும் என்று நம் வீட்டின் வாசலில் வந்து வன்முறையை விதைக்காது என்பதை நாம் அறியோம். எல்லாவகையிலும் நாம் பிரிவினைகளை விதைக்காது இருப்போம். இந்தியாவில் எக்ஸ்க்ளூசிவ் என்று எதுவுமே இல்லை.
அசையும் நம் தேசியக்கொடி வலியுறுத்தும் நெறிகளுக்கே நாம் ஓங்கிச் செலுத்துவோம் ஒரு வணக்கம்!
Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.
Enquiries welcome for poetry, translations, film, and literary events.
Site: Kutti Revathi