
ஏற்கெனவே, தொலைக்காட்சி பார்ப்பதில்லை, செய்தித்தாள் வாசிப்பதில்லை. அன்றாடச் செய்திகள் தொடர்பான எதையுமே பின்பற்றுவதில்லை.
செய்திகள் அவை தானாக வந்து காதில் சேரட்டும், மனதைத் தொடட்டும் என்று பேசாமல் இருந்து விடுகிறேன். எப்படியும் நமக்குத் தேவையானவை நம்மைத் தோள் குலுக்கி
உலுக்கிவிடுகின்றன, நிலைகுலையச் செய்துவிடுகின்றன. அத்தனை ஊடகப்பின்னல்கள் நம்மைச் சுற்றி. என்றாலும் என் உளவியல் நண்பர், இன்னும் மெதுவாகச் செயல்படுங்கள், உங்கள் மனோவேகத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள் என்று என்னைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். நானோ சமூகத்திலிருந்து என்னை மிக மிக விலக்கிவைத்துக்கொண்டாலும் எல்லாமே இன்னும் இன்னும் வேகமாகச் செயல்படுவதற்கு ஊடகங்களிலிருந்து விலகி இருத்தல் நன்று என்ற நம்பிக்கைக் கொண்டிருந்தாலும், என் மனோவேகம் முன்பை விட அதிகமாக இருப்பதை உணர்கிறேன். கனவுகளில் ஓடும் ரயிலில் ஏறுகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.
என்னிலும் இளையதலைமுறையினரின் மனோவேகம் எப்படிச் செயல்படுகிறது என்று ஊன்றிக் கவனிப்பதுண்டு. வீடியோ கேம்ஸ் விளையாடுவது, துரிதகதி விளையாட்டுகளில் விளையாடுவது, அதிவேகத்தில் வாகனங்களை இயக்குவது என அவர்களின் மனோவேகத்தை ஒட்டிய செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டே இருக்கின்றனர். இல்லையென்றால் அவர்களுக்கு வாழ்க்கை அலுப்பூட்டுகிறது. ஆனால் என்னைப் பொறுத்தவரை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மனோவேகத்தில் இயங்குகின்றனர் என்றாலும், காட்டில் வாழும் பழங்குடி மனிதர்கள் அல்லது எந்த வகை பழங்குடி மனிதர்கள் என்றாலும் அவர்களின் மனோவேகம் நகரவாழ்க்கையில், நவீன வாழ்க்கை முறையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களை விட அதிகம் என்று தோன்றுகிறது. காட்டிற்குள் அம்மாதிரியான புதிர்வெளிப்பாடுகள், தற்செயலான செயல்பாடுகளுக்கான சாத்தியங்கள் அதிகம், வீடியோ கேம்ஸைவிட சரவேகம் கொண்ட நிகழ்வுகள் காடுகளுக்கானவை.
ஓர் ஆய்விற்காக, காடு சம்பந்தப்பட்ட திரைப்படங்கள் சிலவற்றைப் பார்த்தேன். நாவல்களை ஆதாரமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படங்கள். எல்லாவற்றிலும் காட்டில் வாழும் வேட்டையாளர்களின் மனோவேகத்தை எந்த நவீன வாழ்வின் ஊடகமும் ஈடுசெய்யமுடிவதில்லை என்றே எண்ணுகிறேன். என்றாலும், இந்த மனோவேகத்தைக் கொண்டு என்ன செய்வது? மனோவேகம் தன் குதிரைதிறன்களின் ஆதாயம் இல்லாமல் வீணாகிப் போவதை அனுமதிக்கலாமா? இன்றெல்லாம், மனோவேகத்தை அதிகப்படுத்தும் வாழ்வின் பிற வடிவங்கள் என்னென்ன என்று யோசிக்க நேர்ந்தது. இசை, காமம், விளையாட்டு, வேட்டை, பந்தயம் என வெவ்வேறு மூலைகளில் பாய்ந்து யோசித்துக்கொண்டே இருக்கையில் மனோவேகம் அதிகமும் பயன்படுவது, அல்லது தேவைப்படுவது கவிதை எழுதவே. பாடல் எழுதுகையிலும் கவிதை எழுதுகையிலும் இதே மனோவேகத்தில் தாம் சொற்கள் வந்து விழுகின்றன. ஊடும்பாவுமாக சொற்களும் உணர்வுகளும் வந்து விழும் தறிவேகமும் மனோவேகமும் ஏறத்தாழ ஒன்று. கவிதை என்றால் மனோவேகம் தான். வேண்டுமானால், தறிகெடாத மனோவேகம் என்று சொல்லலாம்.
என்றாலும், பழங்குடிகளின் மனோவேகத்தில் ஓர் அமைதி இருக்கிறது. அது அவர்களின் வாழ்வியலிலேயே அடிப்படையாக இருக்கிறது. நாம் எண்ணிக்கொள்வது போல நவீன வாழ்வின் மனோவேகம் மழுங்கடிக்கப்பட்டிருக்கிறது. அல்லது சீரமைக்கப்படுகிறது. என் உளவியல் நண்பர் சொல்வதை நான் கேட்கப்போவதில்லை.
**
Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.
Enquiries welcome for poetry, translations, film, and literary events.
Site: Kutti Revathi