அழகின் ஒரு பகுதி

அழகின் ஒரு பகுதி

11 Aug 22
Stories


கொரோனா உலகடங்கல் காலத்தில் ஒரு குறும்படம் எடுக்கவேண்டியிருந்தது. அதிலும் சவால் என்னவென்றால் ஒரு ஐஃபோனிலேயே முழுப்படத்தையும் எடுத்துத்தரவேண்டும். உலகளாவீய நவீனத்தரத்தில் தொழில் நுட்பத்திலும் கருப்பொருளிலும் கதைக்களத்திலும் இருக்கவேண்டும் என்பன கூடுதல் சவால்கள்.  “விரல்கள்”, என்ற என்னுடைய சிறுகதைத்தொகுப்பில் இடம்பெற்றிருந்த ‘அழகின் ஒரு பகுதி’, என்ற கதையையே குறுக்கி இச்சவால்களுக்கு உடன்படுத்தினேன். சுவையான அனுபவம். கலை தோய்ந்த அனுபவம். இது போட்டிக்கு அழைக்கப்பட்ட பின்னணியெல்லாம் இப்பொழுதில் பதியக் கூடாது என்பதால், இக்கதையினை மட்டும் உங்கள் வாசிப்பிற்குப் பகிர்கிறேன்.  முதலில் கதையை வாசித்துவிடுங்கள். பின்பு, அக்குறும்படம் பற்றிய விவரங்களை இங்கே பகிர்கிறேன்.

 

அழகின் ஒரு பகுதி

குட்டி ரேவதி

 

 

அரண்மனை போன்று விரிந்து பரந்து கிடந்த வீட்டில் தனியாக வாழ்ந்து கொண்டிருந்த சுகந்திக்கு இன்றுடன் முப்பத்தைந்து வயது. நிறைய அறைகள், நீண்ட தாழ்வாரங்கள், இருளும் கொஞ்சம் கொஞ்சம் வெளிச்சமும் நிரம்பிய பெரிய படுக்கையறைகள் என அந்த வீட்டின் பகுதியில் சொந்தக்காரியான அவளையே பாதுகாவலுக்கும் உரியவளாக்கிவிட்டு, வேறு ஊர்களுக்கு நகர்ந்து விட்ட உறவினர்களும், வேறு நாட்டிற்கு குடியேறிவிட்ட உறவினர்களும் அவர்களை நம்புவதற்கு இரண்டு காரணங்கள், முழுவதும் முற்றிவிடாத பைத்திய நிலையில் இருப்பதும், திருமணமாகாமல் இந்தச் சொத்தில் எல்லா உரிமைகளும் இருந்தும், அதை அபகரிக்கும் உரிமையை அவளுக்கு நினைவூட்டும் அக்கறை உடையவர்கள் யாரும் அவளுடன் இல்லாததும் அவளை அங்கே முழு நேர விடுதலையான பெண்ணாக ஆக்கியிருந்தது. சுகந்தியின் முழு நேர வேலை, கவிதைகள் எழுதிக்கொண்டே இருப்பது. நூற்றுக்கு மேற்பட்ட நோட்டுப்புத்தகங்களில் எழுதி, அவற்றை வரிசைக்கிரமமாக எண்ணிட்டு, அடுக்கி வைத்து, அவள்

தன் படுக்கையறையை ஒட்டிய அலமாரியில் வைத்து அழகு பார்ப்பது. சுகந்தி எழுதும் கவிதைகள் மீது அவளைத் தவிர எவருக்கும் நம்பிக்கை இல்லை. கொஞ்சம் ஊதிப்பெருத்த உடம்பும், கருத்த நிறமும் கொண்ட சுகந்தி தன் உருவத்தைத் தானே ஒருபொழுதும் கண்டதில்லை. நீரின் பரப்பிலோ, முன்னறையில் இருக்கும் ஆள் உயரக்கண்ணாடியிலோ, சன்னல் கண்ணாடியிலோ தன் பிம்பம் தட்டுப்பட்டால் அவசரமாக அந்தப் பிம்பத்திலிருந்து கவனத்தை உதறிவிட்டு அந்த இடத்திலிருந்து நகர்ந்துவிடுவாள். தன் பிம்பத்தைக் காணநேர்ந்தாலே, அங்கே தேனீக்களைப் போல தான் அறிந்த சொற்கள் எல்லாம் கூட்டமாய் மொய்த்து இரைச்சலிடுவதைப் போன்ற ஓர் உணர்வு தோன்றும். அது, சொல்லொணா வலியைக் கொடுத்துத் துன்புறுத்தும். அதிகாலையில் குளித்து, எண்ணெய்த் தேய்த்து வாரிய தலையைப்பின்னி சிகப்பு ரிப்பனால் முடிந்து, அழுத்தமாய் மையிட்டு, திடமான நிறங்களில் உள்ள புடவைகளையே அணிந்து, குருவம்மா வருவதற்காகக் காத்திருப்பாள். எல்லா அறைகளையு ஒரே நாள் தூய்மை செய்யமுடியாமல் ஒவ்வொரு நாளும் முறைவைத்து அறைகளை மேலோட்டமாகப் பெருக்கி, தூசி துடைத்து, கொஞ்சமாய் ஆங்காங்கே இருக்கும் பொருட்களை ஒழுங்கு செய்துவிட்டுக் குருவம்மா போகும் வரை அவளை பார்த்தபடியே சுகந்தி சற்றுத் தள்ளி அமர்ந்து இருப்பாள். அந்த முழு நேரமும், குருவம்மாவின் புலம்பல்கள் கணவனிடம் அடி வாங்கும் தன் மகளைப் பற்றியும், தன் மீது கொஞ்சமும் அக்கறை கொள்ளாமல் மனைவியின் பேச்சைக் கேட்கும் தன் மகனைப் பற்றியும், இப்படி அரண்மனை போன்ற வீட்டைப் பெருக்கி வாழும் கடைசிகால வாழ்க்கையை வெறுத்தும், புத்தி சுவாதீனமில்லாத சுகந்திக்கு இவ்வளவு பெரிய வீட்டில் வாழும் விதி அமைந்த வாழ்வின் முரணையும் ஒன்றுவிடாமல் பேசி முடிக்கும் வரை அவளையே பின்தொடர்ந்து அவளுக்குக் குடிக்கத் தேநீர் குடித்து, வீட்டுக்காம்பவுண்டை விட்டு அவள் வெளியேறும் வரை காத்திருந்து பெருத்த தலைவாயில் கதவை இழுத்து அடைத்துவிட்டு, பின்பக்கம் தோட்டம் பார்த்த சன்னல்கள் இருக்கும் தன் அறைக்குச் சென்று சன்னலைப் பார்த்த நாற்காலியில் அமர்ந்து கவிதைகள் எழுதத் தொடங்கிவிடுவாள். கவிதை எழுதும்போது மட்டும் உலகத்தையே புறக்கணித்துக் கிடப்பாள்.

சுகந்திக்கு கவிதை எழுதுவதன் மீது வெறித்தனமான ஈர்ப்பு இருந்தது. சொற்கள் சுழன்று சுழன்று ஒன்றுடன் ஒன்று இரசவாதம் கொண்டு வேறு வேறு அர்த்தங்களுடன் வண்ணத்துப்பூச்சிகளைப் போல தன் தலைக்குள்ளிருந்து வெளிப்பட, அவற்றை லாகவமாய்த் தன் கைகளில் பற்றிக் காகிதத்தில் அறைந்து விடும் விளையாட்டு சுகந்திக்கு உவகையானதாக இருந்தது. எல்லோரும் சொல்வது போல் தனக்கு ஒன்றும் மூளை கலங்கிவிடவில்லை, கலங்கிவிட்ட கபாலத்திலிருந்து எப்படி இவ்வளவு அழகான சொற்கள் வெளியே வரும் என்று தனக்குத் தானே நினைத்துக் கொண்டாள். தன்னைப் பார்த்து புத்தி குழம்பியவள் என்று சொல்பவர்கள் தாம் புத்தி அற்றவர்கள் என்று தனக்குத்தானே அழுத்தமாய்த் தனியறையில் நூறுமுறைகள் சொல்லிக் கொண்டாள். அவள் தற்பொழுது எழுதிக்கொண்டிருக்கும் கவிதைத் தொகுப்பின் பெயர், "நட்சத்திரங்களின் விதி”. மேகம், நட்சத்திரம், சூரியன், கிரகணம் கொள்ளும் நிலா, வானத்தில் நிலவும் விசித்திரங்கள், தன் விசித்திரக்கற்பனைகள் என எல்லாவற்றையும் ஒவ்வொரு சொல்லாகக் கோர்த்து எழுதிக்கொண்டிருந்தாள். கரும் இரவுகளும் தனிமையும் அவளுக்கு ஒரு பொழுதும் அச்சத்தைத் தந்ததில்லை. சிறுவயதில் இப்படி இல்லை. ஒரு தாழ்வாரத்தின் முழு நீளமும் நடந்து செல்வதற்குள் பல முறை பின்னால் திரும்பிப் பார்த்துக் கொள்வாள். கையில் ஏந்திச் செல்லும் விளக்கு உருவாக்கும் சுவர் நிழல்கள் அவளைக் கடுமையாக அச்சுறுத்தும். இப்பொழுதெல்லாம், வானத்தைப் பார்க்க வேண்டும் என்று தோன்றிய கணத்திலேயே, கையில் காண்டா விளக்கை எடுத்துக்கொண்டு இரண்டு தளங்களையும் மாடிப்படிகள் வழியாக ஏறி, வெட்டவெளியாகிக் கிடக்கும் மொட்டைமாடிக்கு வந்து பல மணி நேரம் தரையில் படுத்து வானத்தையே பார்த்துக் கிடப்பாள். அந்தக் கட்டிடத்தில் மாடியில் விளக்குடன் அவளைப் பார்த்த பலர், பைத்தியம் முற்றிய இரவில் அவளின் நடவடிக்கை என்று கதைகதையாக

ஊரெல்லாம் சொல்லித் திரித்தனர். சுகந்திக்கு வானம் பார்த்துக் கொண்டிருப்பது, ஓர் ஊக்கமான செயல். கவிதை எழுத, தன் மனதின் குப்பைகளை எரித்துவிட, சிந்திக்கும்போது ஒரு சிந்தனையில் விழும் சிக்கலான முடிச்சை எந்த அவசரமும் இல்லாமல் அவிழ்த்து எடுக்க அந்தப் பரந்து விரிந்த வானம் தேவைப்பட்டது. மின்னும் நட்சத்திரக்கூட்டங்களும், திட்டுத் திட்டாய் மேகப்பொதிகளும் வானத்தின் நிறமாற்றங்களும் அவளுக்கு அத்துப்படி. ஊரே தன்னைப் பார்த்து பயந்ததும் புறக்கணித்ததும் அவளுக்கு விடுதலையைத் தந்தது.

 

சுகந்தியைப் பைத்தியமென்று சொன்னது, அவளின் சித்திப் பையன் கமலக்கண்ணன் தான். அந்த வீடே இரைச்சலுடன், கூட்டம் கூட்டமாய் மனிதர்களுடன் நிறைந்து கிடக்கும் ஒரு காலம் அது. வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஜோதி என்ற பதினாறு வயதுப்பெண்ணை, இரண்டாம் தளத்திற்கு ஏறிச் செல்லும் படிகளுக்குக் கீழே இருந்த அரை இருட்டில் வைத்து, அவள் புடவை, பாவாடையெல்லாம் உரிந்து போட்டுவிட்டு, முழுக்க முழுக்க நிர்வாணமாய் வைத்து கமலக்கண்ணன் புணர்ந்து கொண்டிருந்தான். சுகந்திக்கும் ஜோதியின் வயது தான் இருக்கும். ஜோதியின் நிர்வாணமும், ஆண் உடல் பெண் உடல்மீது நிகழ்த்திக்கொண்டிருந்த வன்முறையும், சற்றுத்தள்ளியிருந்த தன் அறை சன்னல் வழியாகப் பார்க்க நேர்ந்த சுகந்திக்கு உடல் முழுக்க அதிர்ந்து குரல் எழுப்ப முடியாத ஒரு கனவைப் போல இருந்தது. இரு கைகளாலும் தலைமுடியைக் கொத்தாக அள்ளி இழுத்தபடி ஒரு வேகத்துடன் அந்த இருவரின் செய்கைகளையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். ஜோதி சிரித்தாளா, அழுதாளா, மறுத்தாளா என்று தெரியவில்லை. கமலக்கண்ணன் ஆவேசமாக இருந்தான். தீராத கோபத்தின் செய்கை போல அவன் உடல் மொழி இருந்தது. இதையே உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்த சுகந்தி ஒரு கட்டத்தில் தொண்டையின் அடைப்பு திறந்து அறை அதிர, வீடு அதிரக் கத்தினாள். அப்பொழுது தான் சுகந்தி பார்த்துக் கொண்டிருந்ததை உணர்ந்த கமலக்கண்ணன் அருகில் இருந்த கட்டையை எடுத்து ஜோதியின் உடலை ஆவேசமாகத் தாக்கினான். ஜோதி சில நாட்கள் தீவிர வைத்தியத்திற்குப் பின்னும் இறந்துபோனாள். உடலைப் பெற வந்திருந்த ஜோதியின் அம்மா தன் புடவைத் தலைப்பால் வாயைப்பொத்தியது போல, மரணத்திற்கான காரணத்தையும் பொத்திக்கொள்ளச் செய்தார்கள். செய்தார்கள். அந்த நிகழ்வைப் பார்த்திருந்த சுகந்தி சில நாட்களுக்கு அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாத படிக்குக் காய்ச்சல் கண்டிருந்தாள். கமலக்கண்ணன், அந்த சில நாட்களுக்குள் அந்த வீட்டில் இருந்த ஐம்பது பேருக்கும் சுகந்திக்கு மூளை கலங்கிவிட்டதாக, சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசுவதாகக் கூறினான். உண்மையில், சுகந்தியைப் பாதித்திருந்தது வன்முறைக்கு முன்பான நிர்வாணமும், அந்தக் காட்சியின் கண்கூசும் தன்மையும்.

 

காலச்சுழற்சியில், நிறைய இடப்பெயர்வுகள் நிகழ்ந்தன. கமலக்கண்ணன் தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்துவிட்டு மேற்படிப்புக்கு அமெரிக்கா சென்று அங்கேயே ஓர் அயல்நாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான். ஒவ்வொரு குடும்பமாய் நகரங்களுக்கும், வேலை வாய்ப்பு களுக்கும், திருமணங்களாலும் நகர்ந்துவிட, சுகந்தி ஒரு சில மாடுகளுடன் அந்த வீட்டில் தனியே விடப்பட்டாள். சுகந்திக்கு இரண்டு தங்கையர் உண்டு. சுகந்திக்குப் பைத்தியம் பிடித்தது ஊரில் எல்லோருக்கும் தெரிந்திருந்ததால், மிகுந்த யோசனைகளுக்கும் காலம் தாழ்த்துதல்களுக்கும் பின் தான் அவள் தங்கையருக்குத் திருமணம் ஆனது. சுகந்தியின் அம்மாவும் அப்பாவும் சுகந்தி பற்றிய கவலையெல்லாம் மனதில் தேக்கி வைத்துக்கொள்ளாமலேயே இறந்து போனார்கள். அந்த மாடிப்படிகளுக்குக் கீழே நடந்த கண்கூசும் காட்சி எப்பொழுதாவது தனக்கு நினைவிற்கு வரும். உடலெல்லாம் விதிர்க்கும். வியர்த்து ஒழுகும். காய்ச்சல் எடுக்கும். கஷாயம் குடித்துவிட்டு உறங்கிப்போவாள். காலையில் எழுந்தால் என்ன நடந்தது என்பதே மறந்து போனது போல் இருக்கும். பெருத்த இடுப்பு, சற்றே திமிர்ந்த இரு கால்களின் நடை, கூர் நாசி, சடை நுனியில் சிவப்பு ரிப்பன் முடிச்சு, அழுத்தமான கண்மை, எண்ணெய் பூசிய தலைமுடி, அடர்த்தியான கெட்டியான துணிகளால் ஆன புடவையால் உடலை மூடிக்கொள்வது என அவள் தோற்றம் அவள் மனநிலையைச் சொல்வது போலவே இருந்தது. மனிதர்கள் இல்லாத சூழலில் இருக்கும் வசதியும், இயல்பும் இணக்கமாய் இருக்க, சுகந்தி தனிமையிலேயே கழித்தாள். உணவு சமைப்பது, கவிதை எழுதுவது இவற்றைத் தவிர அவள் செய்யவேண்டிய வேலை ஏதும் இல்லை.

 

அலை போல் எழும்பும் சொற்களின் அலைகளுக்குள் மூழ்கி மூழ்கி எழுவது சுகந்திக்குப் போதை போல இருந்தது. சொற்களால் தன்னால் இயன்ற கற்பனையெல்லாம் உருவாக்கிக் கொள்ளமுடிந்தது. சுற்றி எழும்பும் சத்தம், வெளிச்ச அசைவுகள், தனக்கு ஏற்படும் அசாதாரண கற்பனைகள், வானம், மரங்கள், செடிகள், பறவைகள், விலங்குகள், சிறு சிறு உயிர்கள், கவனிக்காமல் புறக்கணிக்கப்பட்ட அறைகளில் நுழையும் நுண்ணுயிர்கள், அவற்றின் நடவடிக்கைகள், இரவில் எழும் விநோத சத்தங்கள், இரவுகளில் யாரோ வந்து மறைந்திருந்து அவளைப் பார்த்துவிட்டுப் போவது போன்ற பிரமை என எல்லாமும் கவிதைகளாயின. தன் கவிதை நோட்டுகளைப் பார்த்துப் பார்த்துப் பெருமிதம் கொள்வாள். பென்சில்களைச் சீவிச் சீவி அவற்றின் கூர்முனைகளால் வெள்ளைக் காகிதத்தில் எழுதுவது போல போதையூட்டும் பழக்கம் வேறு இல்லை என்ற சுகந்தியின் மனநிலை பற்றிய மற்றவர்களின் கருத்தையும் வதந்தியையும் அப்படியே காற்றில் அலைய விட்டாள்.

 

வழக்கம் போல, ஞாயிற்றுக் கிழமையின் ஊமை மௌனம் அந்தப் பெரிய கட்டிடத்தில் பரவியிருந்தது. இறக்கைகளை விரித்தபடி தரையிறங்கிய பறவையைப் போல இரண்டு பக்கமும் அடுத்தடுத்த அறைகளுடன் நீண்டு கிடந்த வீட்டின் சில அறைகளை மறந்து போயிருந்தாள். அந்த அறைகளின் கனத்த தேக்குமரச் சாமான்கள் திட உயிர் கொண்டவை போல் கானலேறிக் கிடந்தன. வீட்டின் பின்புறம் இருந்த கிணற் றிலிருந்து நீர் இறைத்து, எண்ணெய் தேய்த்திருந்த தலையில், சீகக்காயைப்பொடியைச் சோற்றுக்கஞ்சியில் குழைத்து தலையில் நன்றாகத் தேய்த்துக் குளித்துவிட்டு விரலி மஞ்சளைத் தேய்த்து முகப்பூச்சுப் பூசிக் குளித்து உற்சாகமாய், தலைமுடிக்கு சாம்பிராணி தூபம் காட்டி உலர்த்திவிட்டு தயாராகி முடிக்கவும், தலைவாசல் கதவு தட்டும் ஓசை கேட்டது. ‘அம்மா...சுகந்திம்மா’ என்று குரல் ஓங்கிக் கேட்க, ஓட்டமும் நடையுமாக வந்து கதவைத் திறந்தாள். எதிரே நின்றிருந்த இருபத்தைந்து வயது பையன், 'நான் குருவம்மா பையன். ஞாபகமில்லையா. அம்மா வேலைக்கு வர ஆரம்பிச்சதும் இங்க வரதவிட்டுட்டேன். எங்க அம்மா நேத்து ராத்திரி தூங்கும் முன்னையே மயக்கம் வந்து விழுந்து இறந்துட்டாங்க. இன்னிக்கு ராத்திரி எடுக்கிறோம். இனி வேலைக்கு வரமாட்டாங்க. சரியா’, என்று ஒரு குழந்தையிடம் சொல்வது போல, வழக்கத்திற்கு மீறிய உரத்த குரலில் ஒரு பைத்தியத்திடம் சொல்வதாக எண்ணிக்கொண்டு சொன்னான். சுகந்திக்கு எல்லாம் அரைகுறையாகக்கேட்டது போல் இருந்தது. அந்த வாசலில் வேப்ப மரக்கிளைகளினூடே வந்து அந்த இடத்தில் வந்து விழுந்த வெளிச்சம், அவன் மீது விழுந்து அவன் பொன்னுரு கொண்டது போல சுகந்திக்குத் தோன்றியது. அதே வெளிச்சம், அவள் மீது விழுந்து சிற்பம் உயிர்பெற்றதைப் போல அவனுக்குத் தோன்றியது. வந்த வேகத்திலேயே, சொல்லவேண்டிய செய்தியைச் சொல்லிவிட்டது போல அங்கிருந்து விலகினான். கட்டியிருந்த வேட்டிக்கு இடையே கட்டுப்பட்டு நடந்த அவன் நடைகளையே, துல்லியமான வடிவுடைய கால்களையே அவன் காம்பவுண்டை விட்டு வெளியேறும் வரை பார்த்துக் கொண்டிருந்தாள். பின், தன் அறைக்கு ஓடிச்சென்று புதியதொரு நோட்டுப்புத்தகத்தை எடுத்து, அழகின் ஒரு பகுதி என்று நோட்டுப்புத்தகத்திற்குத் தலைப்பிட்டாள். ஆணைப் பற்றி, மனித உடலின் வசீகரம் பற்றி, தன்னுடன் சுண்டி இழுத்துச் செல்லும் உடலின் மர்மவிசைகள் பற்றி தொடர்ந்து எழுதினாள்.

 

அறைகள் எங்கும் தாழ்வாரங்களெங்கும் புழுதி படிந்தது. விரிந்த கோடையின் புழுக்கம் எங்கும் தீவிரமெடுத்திருந்தது. வீட்டிற்கு முன் இருந்த எல்லா வேப்பமரங்களில் இருந்தும் பழுத்திருந்த வேப்ப இலைகள் பறந்து வந்து தாழ்வாரத்தில் கிடந்து புரண்டன. அந்த இலைகளையே பார்த்துக் கொண் டிருந்தவள் தன் அறைக்கு ஓடிச்சென்று கவிதைகள் எழுதுவதைத் தொடர்வாள். குருவம்மா வராததால் பாழடைந்த தோற்றத்தை வீடு அடைந்து கொண்டிருந்தது. அந்த வீட்டில் ஓங்கி விரிந்து நின்ற தனிமையை விட, இந்தப் பாழடைந்த தன்மை சுகந்திக்குக் கடுமையான அச்சத்தை ஊட்டியது. பாதங்களில் ஒட்டும் புழுதியும் தூண்களில், கைப்பிடிச்சுவர்களில் படிந்த தூசியும் வீட்டுச்சுவரிடமிருந்து விலகி நிற்கும் நிலைக்கு அவளைத் தள்ளின. குருவம்மாவின் மகனிடமே கேட்டிருக்கலாம், இனி யார் வந்து தூய்மை செய்வார் என்று. துக்கச்செய்தியைச் சொல்லவந்தவரிடம் இதையெல்லாம் எப்படிக் கேட்கமுடியும். வேறு மாநிலத்தில் வாழ்ந்த தன் இளம் சகோதரிக்கு, கடிதம் எழுதினாள். ஒன்றிரண்டு வரிகளில், குருவம்மா இறந்து விட்டதையும், வீட்டைத் தூய்மை செய்ய ஓர் ஆளை ஏற்பாடு செய்யும் படியும். அவள் தங்கை, குருவம்மாவின் மகனை அழைத்துத் துக்கம் விசாரித்தவள், யாரேனும் வீட்டைத் தூய்மை செய்யும் பொறுப்பை ஏற்கமுடியுமா என்று குருவம்மாவின் மகன், பீமனிடம் கேட்க, அவன் தானே அதைச் செய்யமுடியும் என்று கூற அத்துடன் பிரச்சனை முடிந்தது என்று சுகந்தியின் தங்கை நிம்மதியானாள்.

 

மறுநாள், காலையில் கதவைத் திறந்த போது, பீமன் முன் விளிம்பில் இருந்த சுவரில், சுகந்தி கதவைத் திறப்பதற்காக உட்கார்ந்திருந்தவன், அதே அழகின் வடிவுடைய கால்கள் பூமியைத் தொட குதித்து முன் நடந்துவந்தான். சுகந்தியின் தங்கை அழைத்ததையும், தான் பொறுப்பேற்றுக்கொண்டதையும் கூறிவிட்டு, அவளைக் கடந்து அறைகளுக்குள் நடந்து வேலை களைத் தொடங்கினான். குருவம்மாவைப் போலவே இவனும் தொடர்ந்து ஏதாவது பேசிக்கொண்டே இருந்தான். பெயருக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் மெலிந்து கருத்து பளீரென்ற வெள்ளைப்பற்களுடன் இருந்தான். தன் திருமணத்தைக் கூடப் பார்க்காமல் அப்படி என்ன அவசரமோ அம்மா செத்துப்போக என்று பலமுறை அலுத்துக் கொண்டான். தன் அம்மாவிற்குத் தரும் சம்பளத்தைவிட அதிகமான சம்பளம் கொடுத்தால், தோட்டத்திற்கும் நீர் பாய்ச்சி மற்ற வேலைகளையும் பார்த்துக்கொள்வதாகக் கூறினான். ‘அதெல்லாம் தங்கச்சி தான் முடிவு எடுக்கனும்’, என்று கூறினாள். அவன் வேலை செய்யும் இடத்திலிருந்து சற்று தொலைவில் மறைந்து நின்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் உடலில் வழியும் வியர்வைத் துளி, அதை உதறிவிடும் பாவனை, வேட்டியை மடிக்காமல் வேலை செய்யும் லாவகம், கருத்த அவன் தோல் மீது விழும் ஒளி, அவன் பெருக்கும் போது அந்த வெளியில் பரவும் தூசியும் ஒளியும், சுகந்தியை அவ்வப் பொழுது எச்சிலை மென்று விழுங்கச் செய்தன. அந்த இடத்தின் அந்நியத்தன்மையைக் கொஞ்சம் கொஞ்சமாக அவன் அழித்துக் கொண்டே இருப்பதை சுகந்தி உணராமல் இல்லை. தானே சமையலறைக்குச் சென்று நீர் குடித்தான். பசித்தால், அவள் சமைத்து வைத்திருக்கும் உணவைத் தானே எடுத்துத் தட்டில் போட்டுச் சுவைத்து உண்டுவிட்டு பாராட்டிவிட்டுச் சென்றான். ஆனால், எல்லாவற்றையும் ஒரு வேலைக்காரனின் எல்லையிலேயே வைத்துக்கொள்ள பீமனுக்குத் தெரிந்திருந்தது. சுகந்திக்கு அவன் வருகையும், அவன் செய்யும் ஒவ்வொரு வேலையும் கடும் மிரட்சியையும் ஈர்ப்பையும் ஒரு சேர ஊட்டின.

 

ஒரு நாள், சுகந்தியின் அறைக்குள் நுழைந்தவன், அவள் அடுக்கிவைத்திருந்த கவிதை நோட்டுப்புத்தகங்களைப் பார்த்து அசந்து போனான். மேசையில் இருந்த அழகின் ஒரு பகுதி நூலை, சுகந்தி மறுத்தும் தடுத்தும் சொல்லச் சொல்லக் கேளாமல் மௌனமாய் தன் இரு உதடுகள் சேர்ந்து சேர்ந்து விலக வாசித்துக்கொண்டே இருந்தான். பீமனின் இந்தச் செய்கை, சுகந்தியின் உடலை ஏதோ உருவமற்ற விலங்கு வலியில்லாமல் கொஞ்சம் கொஞ்சமாய்க் கடித்துத் தின்று கொண்டிருந்ததைப் போல் இருந்தது. முகம், சிவ்வென்று சிவந்து வியர்வை கொப்பளித்தது. வாசித்து முடித்து நோட்டுப்புத்தகத்தை மேசையில் வைத்துவிட்டு, நாளை வந்து மீதி வேலையைத் தொடர்வதாகச் சொல்லிவிட்டு அவள் மீது தன் பார்வையை பதிக்காமலேயே வெளியேறினான். பொத்தென்று சுகந்தி படுக்கையில் விழுந்தாள். கழுத்து ஈரத்தால் நனைந்திருந்தது. கால்கள் துவண்டு கனத்திருந்தன. தான் எப்படி இருக்கிறோம் என்று தனக்குத்தானே பார்க்கவேண்டுமென்று தோன்ற ஓடிச் சென்று முன்னறையில் இருந்த ஆள் உயரக்கண்ணாடியின் முன் நின்றாள். வலது கண்ணிலிருந்து மை சற்றே கலைந்து இழுபட்டிருந்தது. முதல் முறையாக, தன்னையே நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். முகத்தையெல்லாம் இதுவரை மொய்த்துக்கொண்டிருந்த சொற்களின் இரைச்சல் சற்று விலகி மௌனமான பூக்கள் ஒன்றையொன்று இடுக்கிக்கொண்டிருந்த முகம் போல் இருந்தது. அழகின் ஒரு பகுதி நோட்டுப்புத்தகத்தை அட்டையைப்புரட்டி, அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிலவரிகளைத் தானும் வாசித்துவிட்டு, இருட்டும்வரைக் காத்திருந்து விட்டு மொட்டைமாடிக்கு விளக்குடன் சென்று வானத்தைப் பார்த்துக்கிடந்தாள். வானத்தில் மறுநாள் முழுமை யாகப் போகும் நிலவு சொல்லொணா வசீகர ஒளியுடன் தனக்குத்தானே தன் முகத்தைச் சுழற்றிக்கொண்டிருப்பது போல இருந்தது. அடுத்தடுத்த நாள்கள், பீமன் வேலைக்கு வரவில்லை. முழு நாளும் காத்திருந்து, நேரத்தைக் கரைக்க கவிதை எழுத முயற்சி செய்து அதிலும் தோற்றுப் போய், வாசல் பக்கமே கண்களை ஓட்டி ஓட்டித் தவித்துப் போனாள்.

 

சுகந்திக்கு உண்மையில் புத்தி குழம்பிவிடவில்லை. சில நேரங்களில், தன் மனம் ஒட்டிக்கொண்ட காட்சியால் மண்டைக்குள் அந்தக் காட்சி குட்டையைப்போல் குழம்பிய எண்ணப்பரப்பில் தெரியும் பிம்பமாக இருக்கிறது. அவ்வளவு தான். பீமனின் முகம், மண்டை ஓட்டின் அடிப்பகுதியில் ஒட்டிய படம்போல் துல்லியமாய்த் தெரிய கவிதை எழுத முடியாமல், சொற்களை ஒன்றிணைக்க முடியாமல், ஏற்ற சொற்களைக் கண்டறிய முடியாமல் துடித்து தவித்தாள்.

 

அவன் வருவான் என்ற நம்பிக்கையெல்லாம் ஓய்ந்து போயிருந்த ஒரு நாள் வழக்கத்திற்கு முன்பான நேரத்திலேயே வந்து வழக்கம் போல வேலைகளைத் தொடர்ந்து செய்தான். ஏன் வரவில்லை என்று சுகந்தியும் கேட்கவில்லை. இருவருக்கும் இடையே மௌனம் முளையில் கட்டப்பட்ட கயிறு களைப்போல இருந்தன. இருவரும் சுற்றிச் சுற்றிவந்தார்கள். பீமன், கீழ்த்தளத்தில் இருக்கும் அறைகளை எல்லாம் தூய்மை செய்துவிட்டு, முதல் தளத்தில் மூடியிருப்பது போல் இருக்கும் சுகந்தியின் அறைக்கதவை தள்ளினான். படுக்கையில், விளக்கின் சுடரைப் போல உடல் கனன்று கொண்டிருக்க, முழு நிர்வாணத்தில் சுகந்தி அமர்ந்திருந்தாள். அவசரமில்லாமல், பீமனும் தன் உடைகளைக் களைந்தான். அவன் முழு உடலையும், நிர்வாணத்தையும் கண்கூச்சமின்றி அழகை மென்று தின்னும் உணர்வுடன் பார்வைகளை நகர்த்தினாள். அவன் உடலை விழுங்குவது போல புணர்ந்தாள். சுகந்தியின் மண்டையோட்டின் உட்புறம் ஒட்டப்பட்டிருந்த பிம்பங்கள் எல்லாம் வண்ண வண்ண எண்ணெய்க்கலவைகளைப் போல ஒவ்வொன்றாய்த் தோலுரிந்து அவர்கள் இருவருக்கும் மேலே எழும்பிக் காற்றில் பறந்தன. அன்றிலிருந்து கவிதை எழுதுவது என்றால் என்ன என்பதே சுகந்திக்கு மறந்துபோய்விட்டது.

 

 

**

Write To Author

About ME

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book.

Get In Touch

Address: 262 Milacina Mrest.

Phone: +91 3333 6789.

Tax: +91 3333 6789.

Email: support@kr.com

Website: www.kr.com