கால போதம்

கால போதம்

08 Apr 20
Poems


வெகுநாள் கழித்து
அன்று தான் கண்டேன் காதலனை
முட்ட முட்டத் தாயின் பாலே
நுவுரக் குடித்து வளர்ந்த
வால் விடலையின் மீசைகள் உதிர்ந்து
வயதேறி இருந்தார்

என் உடலெங்கும் அவர் இட்டிருந்த முத்தங்கள்
கரையேறியிருந்தன நாணல்களாகி

பேராறு வற்றிப்போயிருந்த செய்தி
பருவமழையும் இழந்திருந்த பாலைப் பொய்கை

என் நிழல்களையே
வழியெங்கும்
சந்தித்தேன்

காலம் தாழிட்ட உலகிற்குள்
கழுகுகளே சுழன்று சுழன்று பறந்தன
தலையின் மேல்

அகாலம் விரிந்தது
காயம் மதர்த்து
எல்லோரும் இளமை கொண்டாற்போல்
எம் காதலும்
மீண்டும் ஓடையில் முத்தத்தின் மீன்கள்

கதவை முட்டித் திறந்த காலம்
எல்லா மதகுகளையும் உடைத்தது
மீன்கள் ஆழம் கண்டன
பொற்றாமரைக் குளத்தின் வற்றா ஆடியில்


Painting: Rene Magritte

Write To Author

About

Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.

Get in touch

Enquiries welcome for poetry, translations, film, and literary events.

Site: Kutti Revathi