அமைதியாக இருத்தல்
~ பாப்லோ நெரூதா
இப்போது நாம் ஒன்றிலிருந்து பன்னிரெண்டு வரை எண்ணுவோம்
அனைவரும் அசையாமல் இருப்போம்
இந்த ஒரு முறை பூவுலகோடு
எந்த மொழியிலும் பேசாதிருப்போம்
ஒரு நொடி அனைத்தையும் நிறுத்துவோம்
நம் கைகளையும் அவ்வளவு அசைக்க வேண்டாம்
இது ஓர் ஆச்சரியமான தருணமாக இருக்கும்
அவசரம் இல்லாமல் இயந்திரங்கள் இல்லாமல்
அனைவரும் ஒன்றாக இருப்போம்
இந்தத் திடீர் விந்தைமையில்
திமிங்கலங்களுக்குத் தீங்கு விளைவிக்காதிருப்பார்கள்
குளிர் கடலில் மீனவர்கள்
தனது காயமுற்ற கைகளைப் பார்ப்பான்
உப்பு விளைவிக்கும் மனிதன்
இயற்கையை ஆயுதமாகக் கொண்டு போர் தொடுப்பவர்கள்
வாயுவுடன் போர் நெருப்புடன் போர்
உயிர் பிழைத்தோர் யாரும் இல்லாத வெற்றியோடு
தூய உடைகளை அணிந்து
சகோதரர்களுடன் நிழலில் நடப்பார்கள்
ஒன்றும் செய்யாமல்
செயல்படாமல் இருப்பதை
நான் விரும்புவதோடு
குழப்பிக் கொள்ளக்கூடாது
வாழ்க்கை என்பது இதுதான்
மரணத்துடன் இதை இணைத்துப் பேசாதீர்
நம் வாழ்க்கையை நகர்த்துவது பற்றி
நாம் ஒருமித்த எண்ணம் இல்லாதவர்களாக இருந்தால்
ஒன்றும் செய்யமுடியாமல் போகலாம்
ஒருவேளை இந்த பிரமாண்டமான மெளனம்
நம்மை நாமே ஒருபோதும் புரிந்து கொள்ளாத
நம்மை நாமே
மரணத்தால் அச்சுறுத்திக் கொள்ளும்
துயரத்தைக் குறுக்கிடக்கூடும்
எல்லாம் இறந்துவிட்டதாகத் தோன்றுவதையும்
பின்னர் உயிர்த்திருப்பதையும்
ஒருவேளை இப்பூவுலகு நமக்கு கற்பிக்கக்கூடும்
இப்போது நான் பன்னிரெண்டு வரை எண்ணுவேன்
நீங்கள் அமைதியாக இருங்கள் நான் செல்வேன்

Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.
Enquiries welcome for poetry, translations, film, and literary events.
Site: Kutti Revathi