எழுத்து ஓர் உரையாடல்

எழுத்து ஓர் உரையாடல்

07 Oct 19
Article


ஒரு வானொலி ஒலிபரப்பிற்காக அழைத்துசில கேள்விகளைக் கேட்டார்கள். எல்லாமே முக்கியமான கேள்விகள். ஏன் நீங்கள் எழுதத்தொடங்கினீர்கள்? முதன்முதலாக உங்கள் எழுத்து வெளியான போது எப்படி உணர்ந்தீர்கள்? இன்றைய சூழ்நிலையில் எழுத்து என்பது பெருமிதமா, சவாலா? நீங்கள் எழுதுவது, வாசகர்களுக்காகவா, காலத்தின் பதிவாகவா, சமூக மாற்றத்திற்காகவா? நீங்கள் அதிகமும் எதை எழுத விரும்புகிறீர்கள்? இப்படியாக, தனிப்பட்ட சிந்தனைக்கான கேள்விகளாக இருந்தன. 


நான் எழுத வந்தது நோக்கமற்றது. ஆனால், எழுத வந்த பின்பு,  எழுத்தின் முக்கியத்துவம் உணர்வது போல நிறைய சம்பவங்கள் நிகழ்ந்தன. இப்படியான முக்கியத்துவமான நிகழ்வுகள், எழுத்தாளர்கள் எல்லோருக்கும் பொதுவாக நிகழ்பவை தான். பல விதமான கலைகளைக் கற்க முயன்று அவற்றில் நிறைவு கொள்ளாமல் தான் எழுத்தை எட்டினேன் என்று நினைக்கிறேன். இளம்பருவத்தின் தொடர் வாசிப்புப் பழக்கம் தீவிரமாகக் கைகொடுத்தது. அப்பொழுது வாசித்த எழுத்தாளர்களை வெகுவாக ரசித்தேனே தவிர, அவர்களைப் போல் ஆவதும் என் நோக்கமில்லை. ஆனால், முதல் சில கவிதைப் பதிவுகளிலேயே என் தனிப்பட்ட சிந்தனை வலிமை அதிகமாவதை உணர்ந்தேன். சிக்கல்கள் எல்லாம் அவிழ்ந்து ஓர் இளைப்பாறலும் ஆறுதலும் அமைதியும் எட்டியதை உணர்ந்தேன். 

இன்றளவும் எழுத்து என்பது பெருமிதமாகவோ சவாலாகவோ இல்லை. அதை ஒரு பலமாகத் தான் உணர்கிறேன். பல ஆயிரம் ஆண்டுகள் விரல்கள் இல்லாதிருந்து, சட்டென்று விரல்கள் முளைத்ததைப் போன்ற விடுதலை உணர்வும் கூடவே. தொடர்ந்து எழுதுகையில், ஓர் எழுத்தாளராக அறியப்படுகையில், எழுத்து என்பது எல்லாமுமாக இருக்கிறது. வாசகர்களின் கனிவான பரிசீலனைக்கு உட்படுவதாகவும், காலத்தின் பதிவாகவும், சமூக மாற்றத்திற்காகவும். ஒருவரின் எழுத்து இது எல்லாமுமாக இல்லாமல் இருந்தால் அதனால் பயனில்லை. 

மேற்கண்டவற்றுடன் இன்னும் ஓர் கேள்வியும் வைக்கப்பட்டது. இன்று யாருக்குமே ஒரு பக்கம் கூட சரியாக எழுதத்தெரியவில்லையே, அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள். அவர்கள் பிழையற்ற எழுத்தைக் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தால், அது கல்வித்திட்டத்தில், அதிலும் மொழியைத் தலைமுறைகளிடம் கொண்டு சேர்க்கும் கடமையில் இருக்கும் சமூக அக்கறையின்மை அல்லது சமூக அமைப்பில் உள்ள குறைபாடு என்று சொல்லவேண்டும். சமூக ஊடகங்களைப் பொறுத்தவரை, இன்று எல்லோருமே எழுதத் தெரிந்தவராக ஆகிவிட்டோம், எல்லோருமே எழுத்தாளராக ஆகிவிட்டோம் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால், எதை எழுதவேண்டும், நாம் எழுதுவதன் நோக்கம் என்பது என்ன என்பதைச் சிந்திக்காமல் எழுதுகிறோம் என்று தான் கொள்ளவேண்டும்.  எழுத்து ஓர் உரையாடலாக மாறிய ஒரு நவீன காலகட்டத்திற்கு நாம் எல்லோருமே வந்து சேர்ந்து விட்டோம்!

Write To Author

About ME

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book.

Get In Touch

Address: 262 Milacina Mrest.

Phone: +91 3333 6789.

Tax: +91 3333 6789.

Email: support@kr.com

Website: www.kr.com