மீண்டும் மீண்டும் மாமல்லபுரம்

மீண்டும் மீண்டும் மாமல்லபுரம்

06 Oct 22
Stories


 

 

பல முறை சொல்லியிருக்கிறேன், மாமல்லபுரம் தமிழ்நாட்டின் அவ்வளவு அழகான அதே சமயம் அவ்வளவு தொல்லியல் முக்கியத்துவம் மிகுந்த இடம் என்று. இருளர் பற்றிய களப்பணிகளின் போது தான் இருளர்களின் மிகவும் முக்கியமான பண்பாட்டு விழாவான மாசி மகம் திருவிழா பற்றிய அறிய நேர்ந்தது. ஆண்டுதோறு மாசி பெளர்ணமி அன்று மாமல்லபுரம் கடற்கரை கோயிலை ஒட்டி இருளர் எல்லோரும் ஒன்று கூடி கடல்கன்னியை வணங்கி வேண்டும் திருவிழா. எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாய் அவர்கள் இங்கே வந்து சங்கமிப்பதாய்க் கேள்விப்பட்டு, தொடர்ந்து அந்த விழாவை ஆவணப்படுத்தியிருக்கிறேன். முடிந்தவரை முழு இரவும் நடக்கும் அந்த விழாவில் கலந்து கொள்வதுண்டு. எப்பொழுதோ ஒரு முறை தேதியைத் தவறவிட்டதற்காக அவ்வளவு வருந்தியதுண்டு. இது எத்தகைய பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த திருவிழா என்று எவரும் ஆய்வு செய்திருக்கின்றனரா என்று தெரியவில்லை. சடங்கியல் பூர்வமானது. அப்படித்தான் மாமல்லபுரம் செல்ல நேர்ந்தது.

பல்லவர் காலமான ஏழாம் நூற்றாண்டிலும் இந்தத் திருவிழா நிகழ்ந்திருக்கவேண்டும்.

இப்பொழுது மாமல்லபுரம் சென்றாலும் ஏழாம் நூற்றாண்டிற்குள் சென்று குதித்த அனுபவத்தைப் பெறக்கூடும். முழு நாளும் உலவித்திரிந்தால், பல்லவர் குடைவரைக் கலையின் திறனை ரசிக்கலாம். அதை நுட்பமாக ரசிக்க குறைந்தது மூன்று நாட்களேனும் தேவைப்படும். அந்தக் கடற்கரை எல்லையின் அழகொடு பொருந்தியிருக்கிறது மாமல்லபுரம். ஒரு மொத்தமான பெரிய பாறையைக் கண்டால் போதும், அதில் கலைவண்ணங்களைத் தீட்டும் கற்பனையைப் பெற்றுவிடுகின்றனரோ என்று தோன்றும். ஒரு குட்டியானை குட்டிக்கரணம் போடும் நிலையில் சிற்பத்தையெல்லாம் பார்த்துப் புன்னகைத்தபடி இருக்கலாம்.  சுற்றுலாத்தலம் என்பதைத்தாண்டியது மாமல்லபுரம் என்று சொல்லவருகிறேன். வரலாற்றுத் தலங்களில் அதன் அரசின் அதிகார அமைப்பு தாண்டி, மக்களின் கலைப்படைப்புகளில் ஒளிந்திருக்கும் வாழ்வியலை நுகர்வது பெரிய அனுபவம்.

எத்தனையோ முறை சென்றும் இன்னும் முழுமையாகக் கண்டுகளித்திராத குறை இருந்து கொண்டே இருக்கையில் சமீபத்தில் அற்புதம் அம்மாவுடன் செல்லும் வாய்ப்பு நிகழ்ந்தது. முழு கடற்கரை, சிற்பப்பணிமனை, ஷீஷெல்ஸ் மியூசியம், கடற்கரை கோயில் என்று நீண்டு கொண்டேயிருந்தது. மாலை நேரம் முழு மலையையும் ஏறி இறங்கினோம். அந்த மலைப்பாறை பகுதியில் ஏறுகையில் கிடைக்கும் காட்சி ஆனந்தம் வேறு. சூரியன் மறையும் நேரம் அது புதிய நிலவெளியாகக் காட்சி தரும். காலை சூரிய உதயத்தைக் கடல்பகுதியில் கண்டோமானால், சூரிய மறைவை பாறைகளின் உச்சியில் இருந்து காணலாம். துவாரபாலிக்கைகள் காவல் இருக்கும் இன்னும் நிறைவு செய்திராத கொற்றவை மண்டபம் தனித்திருக்கிறது.

இப்பொழுது மாமல்லபுரத்தில் நண்பர்கள் அதிகமாகிவிட்டார்கள். அப்பொல்லோ புக்ஸ் குமரேசன், அவர்கள் குடும்பத்தினர் மற்றும் கடற்கரையினை ஒட்டி உணவு விடுதிகள் வைத்திருக்கும் பலர் சகோதரர் ஆகிவிட்டனர். ஆகவே, மாமல்லபுரம் இன்னும் நெருக்கமான இடமாகிவிட்டது. அரசு - கலைஞன் - மக்கள் - நெய்தல் நிலம் - வரலாறு என்று தொல்லியல் நடை பகிரும் ஒரு திட்டத்தை அரசு முன்னெடுக்கவேண்டும். ஏதோ சில பல காரணங்களால் துண்டிக்கப்பட்ட சிற்பங்கள் எல்லாம் போய் இன்னும் மிச்சமிருக்கும் இவற்றை வைத்து வரலாற்றை, வாழ்வை மீளாய்வு செய்ய ஓர் அரிய வாய்ப்பு என்றே நினைக்கிறேன்.

இந்நிலையில் இந்த ஆண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் அதிகம் விரும்பிப்பார்க்கப்பட்ட  இடங்களில், மாமல்லபுரம் சிற்பங்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளது ஆச்சரியமில்லை. நெய்தல் நிலத்தினர் பண்பாடும், அயல்நாட்டினர் பண்பாடும் எந்த சிராய்ப்பும் இல்லாமல் ஒன்று கலப்பதை இங்கே காணமுடியும். விடுமுறைக்கு மாமல்லபுரத்தைத் திட்டமிடுங்கள். அதிக நேரம் எடுத்துக்கொண்டு சுற்றிவாருங்கள். மதிய நேர வெயிலைத் தவிர்த்துவிட்டு அதிகாலையையும் மாலையையும் சுற்றுலாவிற்கானதாக மாற்றிக்கொள்ளுங்கள். அப்படியே அப்பொல்லோ புக்ஸ், ராஜா முகமது என்ற ஆய்வாளர் வடிவமைத்திருக்கும் கடல்சிப்பிகள் அருங்காட்சியகம் ஆகியவற்றிற்கும் அவசியம் சென்று வாருங்கள்.

Write To Author

About ME

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book.

Get In Touch

Address: 262 Milacina Mrest.

Phone: +91 3333 6789.

Tax: +91 3333 6789.

Email: support@kr.com

Website: www.kr.com