தூய்மை எனப்படுவது யாதெனின்

தூய்மை எனப்படுவது யாதெனின்

05 Oct 22
Stories


நண்பர் முனைவர் இல. அம்பலவாணன் அவர்களின் நூலுக்கு நான் எழுதிய அணிந்துரை:

 

நம் நாடு ஒவ்வொரு நாளும் தூய்மையாக இருப்பது யாரால். அன்றாடம் நம் தெருக்கள், ரயில் நிலையங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், அரசு பணியிடங்கள், தனியார் பணியிடங்கள், கோயில்கள் என எல்லா இடங்களும் தூய்மையாக இருப்பது எங்ஙனம். சட்டென்று ஒரு காலை தூய்மையான காலையாக மலருவது எப்படி. இந்திய நாட்டிற்கு மட்டுமுள்ள விசித்திரமான அனுபவம் இது.

 

அண்டை வீட்டின் உயர்மாடிக் குடியிருப்பில் வாழ்பவர்களை விட எனக்கு நெருக்கமானவர்களாகத் தோன்றுபவர்கள், அதிகாலையிலேயே எங்கள் தெருவினைத் தூய்மை செய்ய வருபவர்கள்.  கோடையோ, இலைகளை எல்லாம் கொட்டித்தீர்த்த மரங்களின் இலையுதிர்காலமோ, மழை பெருகும் காலமோ சூரியனைப் போல இவர்களும் ஓய்ந்ததே இல்லை. சூரிய ஒளிக்கற்றையினூடே புழுதி எழும்பி அடங்க ஒவ்வொரு தெருவாய்த் தொடங்கி முழு நகரத்தையும், மாநிலத்தையும், நாட்டையும் தூய்மை செய்து தருகின்றனர். ஒவ்வொரு நாளும் இந்த உழைப்பு தொடர்கிறது. அன்றாடம் என்பது முழுமையான அர்த்தத்தில் இந்நாட்டைத் தூய்மை செய்பவர்கள் நமக்கு வரையறுத்துத் தருவதே.  அவர்கள் இதைச் செய்யவில்லையென்றால் இன்னொரு புதிய நாள், புதிய அன்றாடம் நம் வாழ்வில் இல்லை. ஆனால், உண்மையிலேயே இப்பணிகளுக்காக அவர்கள் மதிக்கப்படுகிறார்களா? அவர்கள் விரும்பிச் செய்யும் பணிகள் தானா இவை? உழைப்பிற்கான ஊதியம் உண்டா?

 

இந்தியத்திருநாட்டைத் தூய்மை செய்வதற்கு என்றே நிறுவப்பட்ட சாதியினத்தவரும், மக்கள் தொகையினத்தவரும் இருக்கின்றனர். நம் நாட்டில் நாம் குப்பைகளைத் தெருவில் பொறுப்பின்றி வீசி எறிவது முதல், ரயில் நிலையங்களிலேயே கழிவறையை உபயோகிப்பது முதல், பொதுக்கழிப்பிடங்களைப் பயன்படுத்திவிட்டு அவற்றைத் தூய்மை செய்யாமல் தப்பிப்பது வரை என்ன காரணம் என்றால், அவற்றைத் தூய்மை செய்வதற்கு என்று ஒரு தனித்த சாதியினர் இருக்கின்றனர், தானே பயன்படுத்தினாலும் ‘தூய்மை’ செய்வது மட்டும் நம் பணி இல்லை என்பது போல தறுதலைத் தனமான ஓர் இந்திய மனநிலை நம் ஒவ்வொருவரிடமும் உண்டு. அரசு ஒரே நாளில் இதைத் தடுத்து நிறுத்த முடியும். சரியான தண்டனை கொடுத்தால் நாட்டைத் தூய்மையாக வைத்திருப்பது எல்லோரின் பணியும் என்றாகும். ஆனால், சாதி மனநிலையை ஆழ நீட்டிப்பதே எல்லோரின் ஆழ்மனத் திட்டமும். தூய்மை செய்வது அரசாங்கப்பணி என்று வந்துவிட்டால், தங்களின் ஆதிக்கச்சாதியை மறைத்துவிட்டுக்கூட இந்தப்பணியைத்தேடி விண்ணப்பிப்பார்கள்.

 

உண்மையில் காலங்காலமான இரு பிரிவினருக்கு இடையிலான போர் தான் இப்படியாக ஒருசாராரைத் தாழ்த்தியது. ஏற்றத்தாழ்வுகளை மனிதருக்குக் கற்பித்து, நிறுவும் பார்ப்பனீயத்திற்கும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சித்தாந்தத்தைத் தன் அகமாகக் கொண்ட பெளத்தத்திற்கும் இடையிலான போரில் பொளத்த பகுத்தறிவுச் சிந்தனைகளைக் கொண்டோர், ஊருக்கு வெளியே சமூகத்திற்கு வெளியே எல்லோருக்கும் வெளியே நாட்டின் இறையாண்மைகளுக்கு வெளியே இப்படி நைந்துபோகும் ஒரு வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டனர். இது இன்றுவரை தொடர்கிறது.

 

இந்த நாட்டைப் பொறுத்தவரை, எம் மலத்தை அகற்றித் தூய்மை செய்வதே சம நீதி கேட்கும் உனக்கு நாங்கள் நீட்டும் சமூகநீதி எனத் தூய்மை செய்வது தண்டனை.கலையையும் அறத்தையும் சிந்தனையையும் போற்றுபவரை ஏற்றத்தாழ்வின் ஏணியைக் கொண்டு நிறுவுவதற்காகவே, மனித மலம் அள்ளும் கீழ்மை மனிதருக்கு இங்கே இன்னும் அளிக்கப்படுகிறது. இத்தகைய கீழ்மை, வேறெங்கும் இந்தப்பூமியில் யார்மீதும் திணிக்கப்படவில்லை. புரட்சி வெடிக்கும் காலங்களில் எல்லாம் கடுமையாக நசுக்கப்படும் ஆதிக்கமனங்களுக்கு இடையே சிக்கிச் சின்னாபின்னமாகிக்கொண்டிருக்கும் வேளையில் தான் கீழ்மையை நீக்க அண்ணல் அம்பேத்கர் தோன்றினார்.

 

“தூய்மை”, நாவலுக்கு வருவோம். எளிய நடையில், அன்றாட நடைமுறையில் திருச்சியின் ஒருபகுதியில் வாழும் தூய்மைப்பணியாளர்களைப் பற்றிய மனதிற்கு நெருக்கமானதொரு பதிவு. ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். நாடகார்த்த தருணங்கள் என்று ஏதும் இல்லாமல், நம் எதிர்பார்ப்புகளைத் தாண்டிப் பயணிக்கிறது நாவல். கதாபாத்திரங்கள் நேரடியாக நம் மன்தில் பதிந்துவிடுகின்றனர். அவர்களின் மனதை எந்த மேல் பூச்சும் இன்றி, உணர்பவர்களாக அவர்களுடனேயே நாம் பயணிக்கிறோம். அவர்களின் மனச்சித்திரங்கள், இந்த நாவலின் மையச்சித்திரங்கள்.

 

திருச்சி நான் வாழ்ந்த எனக்கு நெருக்கமான நிலப்பரப்பும் என்பதால், கதாபாத்திரங்களுடனேயே நானும் உலவும் அனுபவத்தை அடைந்தேன். ஒரு கட்டம் வரை தூய்மை செய்யும் சமூகத்தின் அன்றாட வாழ்வியலை விவரிக்கும் படைப்பாக இருந்து அதற்கு மேற்கட்டத்தில் அவர்களின் உறவு, நெறிமுறை, நாட்டார் வழக்கங்கள் என அவர்களின் எளிய வாழ்வியலுக்குள் செல்கிறது. மணிவண்ணன், தொழில் வழியாகத் தன் மீது படியும் அடையாளத்தைக் களைந்தெடுக்கப் போராடுவது போலவே ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு சிறிய கதாபாத்திரமும் வாழ்வின் நேர்மையான அற்நெறிகளுக்காக, அயராது போராடுகிறது. இந்தப்போராட்டங்கள் அவர்களுக்குக் கொஞ்சமும் சலிப்பூட்டுவதில்லை. அந்த அறநெறிப்போராட்டங்களே வாழ்வாக மலர்வது போல தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். ஆதிக்க சாதியினரின் பேராசையோ ஏமாற்றுவேலைகளோ அவர்களைப் பீடிப்பதில்லை.

 

ஒருவருக்கொருவர் எலும்புகள் போல உறுதுணையாக இருக்கின்றனர். வாழ்வின் ஏற்றத்த்தாழ்வுகளோ வேறுபாடுகளோ அவர்களுக்கு இடையே இல்லை. சமூகம் அத்தனை ஏற்றத்தாழ்வுகளையும் அவர்கள் மீது சுமத்தியுள்ளதாலோ என்னவோ, அந்தச் சுமையினால் விளைந்த வாழ்க்கை தான் கையளிக்கப்பட்டது என்பதாலோ என்னவோ, அமைதியாக நுகத்தடித் துயர் தாங்கி வாழ்க்கையை வெல்கின்றனர், மகிழ்ச்சியை ஈட்டுகின்றனர். ஒருவருக்கொருவர் அன்பைப் பகிர்ந்து கொள்கின்றனர். எல்லாவற்றிலும் தூய்மை வெளிச்சமாய்த் துலங்குகிறது.

 

தான் கண்ணுற்றவற்றைத் தாண்டிய ஒரு கண்ணாடியைக் கொண்டு கதாபாத்திரங்களை நம்மிடம் கொண்டுவந்திருப்பது நாவலாசிரியரின் மனத்தெளிவு. என்னை இந்த நாவலில் அதிகம் ஈர்த்தது, எல்லா கதாபாத்திரங்களும் ஒருவருக்குள் ஒருவராய் சீர்மையுடன் அடங்கிப்போவது. பொதுவாக, நாம் மனித வாழ்க்கையில் எதிர்நோக்கும் விதியின் நாடகார்த்த கணங்கள் என்று இல்லாமல், தாங்கள் நடந்து செல்லும் வாழ்க்கையே, சந்திக்கும் ஆதிக்க மனிதர்களே சவால்களைத் தருபவர்களாக இருக்க, தம் நெடிது பயின்று வரும் வாழ்நெறியால் அந்தச்சவால்களை எல்லாம் வெல்லத்துடிக்கும் தூய்மையான மனம் ஒவ்வொருவரின் பெயராலும் ஒளிர்வது வாசிக்கும் மனதிற்கு நல்லின்பத்தை ஊட்டுகிறது. தூய்மை எனப்படுவது யாதெனின், கதாபாத்திரங்கள் வழியாக வாசிக்கும் மனத்தைச் சுத்திகரிப்பது. சமூகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருக்கும் மனிதர்கள், நம் அகவெளியில் தீவிரமாய் நுழைந்து உறுதியான நடைபோடுகின்றனர். ஆசிரியர் உருவாக்கியிருக்கும் எல்லா கதாபாத்திரங்களும் நம் மனவெளியில் துல்லியமாக, பொன்மனம் மாறாமல் உலவிக்கொண்டே இருக்கின்றனர்.  இப்படியானதோர் உலகத்தை நம் கைகளில் கொண்டு வந்தமைக்காக தோழர் அம்பலவாணனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்.

 

குட்டி ரேவதி

சென்னை

 

Write To Author

About ME

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book.

Get In Touch

Address: 262 Milacina Mrest.

Phone: +91 3333 6789.

Tax: +91 3333 6789.

Email: support@kr.com

Website: www.kr.com