
இன்று காலை எழுந்ததுமே மனம் கொந்தளிப்பாக இருந்தது. மனதை ஆற்றுப்படுத்த அம்மாவை அழைத்துப் பேசினேன். அப்படியும் அமைதியாகவில்லை. விழுப்புரத்திலிருந்து சிஸ்டர் அழைத்திருந்தார். நீண்ட நேரம் பேசுபவர். வைரஸ் காய்ச்சல் போல இருக்கிறது என்றார். மருத்துவம் சொன்னேன். நேற்றுவரை உடன் இருந்தவர்கள் எல்லோரும் பூஜைக்கு ஊருக்குச் சென்றிருக்கின்றனர் என்றார். தனிமை வருத்துகிறது என்பதை உணரமுடிந்தது. ஃபோனை வைத்ததும் நண்பன் அழைத்தான். ‘சாரி, உங்க ஈகோவ காயப்படுத்திட்டேன் போல’. கொஞ்ச நேரம் புரியாமல் விழித்தேன். திடீரென்று சொன்னால் தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை. ‘ஈகோவா?’ என்றேன். ‘ஆமா. நீங்க கேட்டு மறுத்துட்டேனா. அதுக்கப்புறம் நீங்க மெசேஜ் பண்ணல. அதான் உங்க ஈகோவ காயப்படுத்திட்டது புரிஞ்சது’, என்றான். ‘ஓ’, இப்பொழுது தான் புரிந்தது. அது தான் ஈகோவா. ‘அப்படி ஒன்று நிகழ்ந்ததாகவே நினைவில் இல்லை என்றால் அதை எப்படி அழைப்பார்கள்’, என்று கேட்டேன். இப்பொழுது நண்பருக்குப் புரியவில்லை.
“இல்லை. நமக்கிடையே அப்படி ஒரு சம்பவம் நடந்ததாகவே எனக்கு நினைவில் இல்லை. நினைக்கவும் நேரமில்லை. அவ்வளவு வேலைகள் குழுமிக்கொள்கின்றன. இந்த நிலையில் ஒருவர் தன் ஈகோவை எப்படிப் போற்றிப் பாதுகாப்பது”, என்றேன். கொஞ்சமாய்த் தான் காயப்பட்டதுடன் சிரித்தார். ‘உண்மை தான் தோழர். என் ஈகோ என்பது உங்கள் கற்பனையின் திறன். அடுத்தடுத்த வேலைகள் முந்தைய இடத்திலிருந்து அடுத்த இடத்திற்கு வேகமாய் என்னை இழுத்துச் செல்கின்றன. ஆகவே எதையும் எவரையும் யோசித்து அவரைக் காயப்படுத்துவதோ, அவர் காயப்படுத்தியதாய் நினைந்திருந்ததை ஊதிப்பெருக்கவோ இங்கே இன்று அவகாசமே இல்லை என்று சொல்லிவிட்டு வைத்தேன். மனம் ஆறியிருந்தது. மரணம் எப்பொழுதும் காத்திருக்கும் ஒரு வாழ்வில் இயன்றவரை காற்றைப்போல், காற்றில் சருகைப் போல் வாழ்ந்து செல்வது தான் அந்தந்தக் கணத்தில் மரணத்தை வெல்ல எளிய முறை. அதுமட்டுமில்லை, எதையும் நினைத்துப்பார்க்கவே நேரமில்லா கருந்துளைக்குள் எல்லோருமே வீழ்ந்துவிட்டோம். இல்லையா?
Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.
Enquiries welcome for poetry, translations, film, and literary events.
Site: Kutti Revathi