
சோறு மிகவும் பிடித்தமான உணவு. காரணம் அதன் சுவையும் அது எதனுடனும் சேரும் பக்குவமும் என்று நினைக்கிறேன். எங்கள் வீட்டில் நான் சிறுவயதாய் இருந்தபோது, நெல் வரவழைத்து அவித்து, காயவைத்து அதை அரைத்து வந்து பயன்படுத்தும் வழக்கம் இருந்தது. அந்த முழு நடவடிக்கையிலும் நான் மேற்பார்வை பார்ப்பேன். அவிக்கும் போது, மேலே கோணிப்பையை வைத்து மூடிவைப்பார். அம்மா தான் நெல் அவிந்திருக்கிறதா என்று பதம் பார்த்துச் சொல்வார். நெல் காயப்போடும் போது கோழி கொத்திச்சாப்பிடாமல் இருப்பதற்குக் காவல் காக்கவேண்டும். அதை அரைத்துக் கொண்டுவரப்படும் அரிசி, பொங்கல் அல்லது வேறு பண்டிகை வரை காத்திருந்து உணவாக்கப்படும். என்றாலும் இன்று சப்பாத்தி பிடிக்காது. சோறு தான் பிடித்த உணவு.
ஆனால், அவ்வப்பொழுது உணவு முறை பரிசோதிப்பது பிடித்தமான உணவு. வெளிநாடுகளுக்குச் சென்றால், இட்லி, சாம்பார், சோறு தேடாது அந்தந்த உணவை, கிடைக்கும் உணவையே சாப்பிடுவது என்று பிடிவாதமாக இருப்பேன். உணவிற்குப் பெரிய தொகையெல்லாம் செல்வழிக்க விரும்பமாட்டேன். அது ஒரு காரணம். மருத்துவர் என்பது இன்னொரு காரணம். எளிய உணவு முறையில் தான் உடலின் நல்வாழ்வு இருக்கிறது என்பதை நான் அறிந்து வைத்திருக்கிறேன்.
இந்த வெள்ளை அரிசி கொஞ்சம் கொஞ்சமாய்த் தன் பழுப்பு நிறத்திலிருந்து தூய வெள்ளை நிறத்திற்குச் சென்ற வளர்ச்சியும் உணவுப் புரட்சியும் இருவகையில் பெண்களின் உடல்நலத்தைப் பாதித்தது. ஒன்று, நிறைய பேர் குழந்தை பிறப்பதில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கின்றன. அவ்வாறு நண்பர்கள் சொல்லும் போது, நான் சொல்லும் முதல் ஆலோசனை, இந்த வெள்ளை அரிசியிலிருந்து செயற்கை உரமிடாமல் விளைவித்த அரிசியை உண்ணச்சொல்வது. அரிசியின் மீது தோடு நீக்கப்பட்டிருந்தால், அரிசியிலிருந்து பெண்களுக்குக் கிடைக்கும் இரும்புச்சத்து கிடைக்காமல் போகிறது. இந்தியாவில் அதிக அளவில் பெண்களுக்குத் தேவைப்படுவது மேல்தோல் நீக்கப்படாத அரிசி தான். தூய வெள்ளை அரிசியினால் எந்த நலனும் விளைவதில்லை. இரண்டாவது, கர்ப்பப்பை தொடர்பான நோய்களுக்கும் இந்த அரிசியைத் தொடர்வது தான் காரணம். அதுமட்டுமில்லை, கருப்பையில் கருவைத் தாங்கிப்பிடிக்க முடியாமைக்கும் நாம் இப்பொழுது சாப்பிடும் இந்தத் தூய வெள்ளை அரிசி தான்.
நாங்கள் சில மாதங்களாக பூங்கார் என்ற அரிசி பயன்படுத்திவருகிறோம். கொஞ்சம் செங்கருப்பான நிறத்தில் இருக்கும். சமைப்பதற்கு முன் ஒரு மணி நேரமேனும் நீரில் ஊறவைத்துச் சாப்பிடவேண்டும். சுவையானது. ரசாயண உரங்களிட்டு விளைவிக்கப்பட்ட அரிசி, சாப்பிடத்தொடங்கினால் நில்லாமல் உள்ளே சென்று கொண்டிருக்கும். காரணம், அதிலிருந்து உடலுக்குக் கிடைக்கும் சர்க்கரையினால் தான். நாம் குழம்பு, காரக்குழம்பு, ரசம், மோர், தயிர் என்று வகைவகையான கலவையாகச் சாப்பிட்டுமுடிக்கையில் ஒரு கிறக்கமும் மந்தமும் தாக்கித் தூங்க வேண்டும் போல் இருக்கும். ஆனால் வழக்கமாக நமக்குத் தேவையான உணவின் அளவு, நாம் சாப்பிட்ட அளவு இல்லை. அளவிற்கு அதிகமாக, இன்னும் இன்னும் என்று மனது அதன் பால் ஈர்க்கப்படுவதற்குக் காரணம் அதன் கேடான தன்மை தான்.
தானிய வகை உணவுகள் எல்லாமும் முயற்சி செய்துவிட்டு பேலியோ உணவு வகை தான் உடலுக்கு நலன் கூட்டும் உணவு என்பதை அறிந்திருக்கிறேன். அதையும் சிக்கனமாக எப்படிப் பயன்படுத்துவது என்பதில் கைதேர்ந்துவிட்டால், உடல் நலன் பற்றி அதிகம் கவலைப்படவேண்டியதில்லை. ஒவ்வொரு வேளை உணவு குறித்தும் அதிக அக்கறையும் ஈடுபாடும் கொண்டு வாழ்வது ஒரு பண்பாடு என்றே நினைக்கிறேன். கிடைத்ததை, கிடைத்தபோது சாப்பிடுவதில் எந்தப்பொருளும் இல்லை. அதற்காக, வகை வகையான உணவைத் தேடி உண்பதும் அவசியமில்லை என்று நினைக்கவேண்டாம். நேற்று செய்யாறு அருகே ஒரு செட்டி நாட்டு மெஸ்ஸில் நாட்டு அவரைக்காய் கொஞ்சமாய் மசாலா சேர்த்து வதக்கி வைத்திருந்தார்கள். அந்தச் சுவையில் அவரைக்காய் சாப்பிட்டே நீண்ட நாட்களாகிவிட்டது என்பது நினைவில் வந்தது. சுவை நினைவில் நிற்கக்கூடியது.
Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.
Enquiries welcome for poetry, translations, film, and literary events.
Site: Kutti Revathi