கழுதைகள் மீது புத்தகப்பொதிகள் போல

கழுதைகள் மீது புத்தகப்பொதிகள் போல

23 Sep 22
Stories


முற்போக்கான கல்வி என்பது வெறுமனே கருப்பொருளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது அன்று.

நடைமுறையில் அதைச் செயல்படுத்தும் விதமும் முக்கியமானது என்று கருதுகிறேன்.

அந்த வகையில், பள்ளி மாணவர்கள் எல்லோருக்கும் புத்தகமூட்டையிலிருந்து விடுதலை வேண்டும்.

கனத்த புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் உண்மையிலேயே மாணவர்களைக் கழுதைகளாக்குகின்றன.

இந்தக் காலத்திலும் அதாவது இணைய காலத்திலும், இப்படி புத்தகங்களைச் சுமத்தும் கல்வி முறை அபத்தமான

இலட்சியப்பூர்வமற்ற ஒரு கல்வியாகத் தோன்றுகிறது.

மாணவர்கள் மட்டுமல்லாமல் அவர்களின் தாய்மார்கள் தான் பல வேளைகளில் அப்பொதிகளைத் தூக்கிச் செல்வதைப் பார்க்கமுடிகிறது.

விரல் எழுத்துப் பயிற்சியைத் தொடரவேண்டுமானால், அதற்கு மட்டும் ஒரே ஒரு வகுப்பை வைத்துகொள்ளலாம்.

தமிழ்மொழியை எழுதிப்பழகுவதற்கு மட்டுமே உரிய வகுப்பாக அதை வைத்துக்கொள்ளலாம்.

வகுப்பு, பள்ளி வேறுபாடின்றி எல்லோருமே கணினி மயக்கல்விக்கு மாறும் நற்காலம் இது.

இப்படி நிகழ்ந்தால் உண்மையிலேயே நம் சிந்தனையிலும் வாழ்வியல் முறையிலும் பெரிய புரட்சி நிகழும்.

ஒரு கணினி போதும். வாசிக்க, பயில, எழுதிப்பழக, தேர்வெழுத என எல்லாமும் கணினி மயமாகும்.

இத்தகைய நவீன வகைக்கல்வி நம்மை  மற்றெல்லா நாட்டு மக்களையும் விட முன்னவராக நிறுத்தும்..

தமிழ்நாடு அரசு, இதைத்தீவிரமாகப் பரிசீலிக்க விரும்புகிறேன்.

இதைச் செயல்படுத்துவதில் பெரிய நடைமுறைச் சிக்கல்கள் ஏதும் இல்லை என்பதாயும் நான் அறிந்துகொள்கிறேன்.

புத்தகப் பொதிக் கல்வியில் எந்த அர்த்தமும் இருப்பதாயில்லை.

சரியான இணையக் கட்டுப்பாட்டு முறைகள் வழியாக இன்றைய இணைய எல்லையின்மையையும் அவற்றின்

மேதைமையையும் கூட மாணவர்களிடம் சென்று சேர்க்கமுடியும்.

இப்படியாகப் புத்தகமூட்டைகளைச் சுமந்துகொண்டு மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதை இன்றும் நியாயமென்று கருதுவது

ஏதோ கற்கால யுகத்தில் திரிவது போலும், மூடநம்பிக்கையின் ஒருவகை போலும், பழைமைவாதம் போலும் தோன்றுகிறது.

தமிழ்நாடு கல்வித்துறை இத்தகைய நவீன, முற்போக்குத் திசையை நோக்கி நகர்வது அவசியம்.

Write To Author

About

Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.

Get in touch

Enquiries welcome for poetry, translations, film, and literary events.

Site: Kutti Revathi