மனிதப்பூனை

மனிதப்பூனை

05 Oct 19
Stories


அந்தப் பூனை குட்டியாக வெளிவந்த சில கணங்களிலேயே அதன் தாயிடமிருந்து பிரிக்கப்பட்டு மனிதர்களுடன் வாழ்வதற்காக எடுத்து வரப்பட்டது. பிறந்து இன்னொரு பூனையைத் தன் கண்களால் கண்டிராத அதை அவ்வாறு பிரித்து எடுத்து வந்த சிறுமிக்குத் தன் வாழ்வின் தனிமையை நிரப்புவதற்கு அன்று அந்த ஒரு பூனை மட்டுமே தேவையாயிருந்தது. ஆகவே, அந்தப் பூனை கண் திறந்ததும் பார்த்த முதல் பூனையும் ஒரு மனிதர் தான். அது தன்னையொத்த பூனைகள் எல்லாம் அப்படித்தான் இருப்பார்கள் என்று மனிதர்களையே கூர்ந்து கவனித்து வந்தது. மனிதர்கள் போலவே கணிக்க முடியாத உணர்வுத் தளும்பல்களுக்கு ஆளாகியிருந்தது. மனிதர்களைப் போலவே வன்மங்களுக்குப் பழகிக் கொண்டிருந்தது.


இந்தச் சமயத்தில் அந்தச் சிறுமி, தெருவில் வாகனங்களுக்கிடையே நசுங்கக் கிடந்த இன்னொரு குட்டிப் பூனையைக் காப்பாற்றி எடுத்து வந்தாள். அந்தப் பூனை,  அளவில் குட்டியாக இருந்தாலும் ஏற்கெனவே தன்னையொத்த நிறைய பூனைகளைப் பார்த்திருந்தது.  தாய்ப்பூனை, சகோதரப் பூனைகள், தெருமுனையில் வசித்து வந்த தோழமைப் பூனை என எல்லா வகையான பூனைகளையும் பார்த்துப் பழகி ஓர் ஆளுமையாக வளர்ந்திருந்தது. இந்த அசல் பூனை முந்தைய மனிதப்பூனையைக் கண்டதும் உற்சாகமாகிவிட்டது. மனிதப்பூனை, அசல்  பூனையைப் போல பூனையின் பாலைக் குடிக்காது இருந்திருந்தாலும், தாய்ப்பூனையின் கதகதப்பை உணராமல் போயிருந்தாலும், செயற்கையான பூனை உணவை உண்டு மதமதப்பாக வளர்ந்திருந்தது. ஒரு பூனை பொம்மையைப் போலவே இருந்தது.


அசல் பூனை, நிறைய பூனை ஒழுக்கங்களைக் கற்று வந்திருந்தது. பாலை எப்படி நக்கிக் குடிக்கவேண்டும் என்பதையும், மீன் உணவை எப்படி முகர்ந்து கண்டறிவது என்றும், எச்சத்தை எப்படி மறைவாகக் கழிப்பது என்பதையும். அசல் பூனையைப் பார்த்து, எடுத்ததற்கெல்லாம் மனிதப்பூனை பொறாமை பட்டுக்கொண்டே இருந்தது. ஒரு பொழுதும் தன்னால் பூனையாக முடியாத அந்த மனிதப்பூனை உறக்கமே வராமல் தவித்தது. இரவின் ஆழ்ந்த உறக்கத்தில் ஈடுபட்ட அந்த அசல் பூனையை தன் வலது முன்னங்கால்களால் சீண்டிக் கொண்டே இருந்தது!

Write To Author

About

Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.

Get in touch

Enquiries welcome for poetry, translations, film, and literary events.

Site: Kutti Revathi