
வெவ்வேறு தியானநிலைகளைக் கற்றிருக்கிறேன். சிலவற்றைத் தொடர்ந்து பயின்று வருகிறேன். சிலவற்றை அவ்வப்பொழுது எடுத்துப் புத்தகம் புரட்டிப் பார்ப்பது போல் பயன்படுத்திப்பார்ப்பேன். என் பருவத்திற்கு ஏற்றாற் போல என் ஈர்ப்புகள் மாறி இருக்கின்றன. வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலைமன்றத்தினுடன் இருந்த தீவிர ஈடுபாடு பிற்காலத்தில் ஏனோ குறைந்து போயிற்று. விபாசனா பெரிய அளவில் என்னைத் தன்னகப்படுத்திக் கொண்டது. சமீபத்தில் நண்பர் ஒருவர் வள்ளலார் தியான முறையைக் கற்றுக்கொடுத்தார். மனச்சமநிலை, சீர்மை, ஒருமையுணர்வு, உடலுக்கும் மனதிற்கும் இடையே தொடர்புநிலை, உடலுக்குள் விளங்கும் எண்ணற்ற அங்கங்களை ஒருமைப்படுத்தும் ஆற்றல் என என் வெவ்வேறு தேடல்களுக்கு ஏற்றாற் போல நானே முட்டி மோதி என் மனதைச் சல்லடை போட்டு அரித்திருக்கிறேன், அறிந்து வைத்திருக்கிறேன். இவற்றினால் எல்லாம் பரிணாமம் என்று ஒன்று இருக்கிறதே அன்றி, நிரந்தரச் சேமிப்பு என்று எதையும் தக்கவைத்துக்கொள்ளமுடியாது என்பது என் அறிதல்.
தொடர்ந்து நேரம் கொடுப்பதும், இன்றைய காலகட்டத்தில் வாழ்வின் முள்ளை இத்தகைய தியானம் நோக்கித் திசைதிருப்பி வைப்பதும் அவசியப்படும் ஒன்றே. நான் அறிந்த கலைஞர் ஒருவர் ஒரு நாளில் மூன்று மணி நேரம் வரையெல்லாம் தொடர்ந்து தியானம் செய்பவர். என்ன நிகழும் என்று கேட்டபோது, அலைகள் அவைபாட்டுக்கு வந்து போகும் என்று சொன்னார். அந்தந்த நிமிடங்களுக்கு உதவக்கூடியது தியானம். கட்டுச்சோறு போல கட்டிச்சுமக்கமுடியாது. மனதை இழைத்துச் சிற்பமாக்கும் பணியில் நான் கொண்டிருக்கும் ஈடுபாடே என்னைக் கவிதையும் எழுதத் தூண்டுகிறது என்று தோன்றியது. இத்தகைய தியானத்திற்கான என் வேட்கையில், நான் கண்டறிந்ததே ‘பார்த்துக்கொண்டிருத்தல்’, என்னும் தியான முறை. கடலை நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருத்தல், மலையை நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருத்தல், சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் நதியின் ஓட்டத்தைப் பார்த்துக்கொண்டிருத்தல், கொட்டும் பேரருவியின் பாய்ச்சலை ரசித்துப் பார்த்துக்கொண்டிருத்தல், வெவ்வேறு நிலக்காட்சிகள் நம்மை வசீகரிக்கும் ஒற்றைக் காட்சியை நம் மனம் தித்திப்பு கொண்டு நிறைவு கொள்ளும் வரை பார்த்துக் கொண்டே இருத்தல் நல்லதொரு தியானமுறை. மனம் சூழலின் இசைவான நிலைக்குத் தன்னை வனைந்து கொடுக்கிறது.
அப்படியாக ஒரு நாள், நண்டினைக் கவ்விக்கொண்டு அதை விட முடியாமலும் விழுங்க முடியாமலும் போராடிக்கொண்டிருந்த பாம்பினைப் பார்த்துக்கொண்டிருந்தேன். பூக்கள் மொத்தமாய்க் கொட்டி மலர்ந்திருப்பதைப் பார்த்துக்கொண்டே இருந்திருக்கிறேன். மலரில் உட்கார்ந்திருக்கும் வண்ணத்துப்பூச்சியைப் பார்த்தபடியே அது பறந்து செல்லும் வரை காத்திருந்திருக்கிறேன். வேலியில் தாடையை அசைத்து அசைத்துக் கண்களை உருட்டும் ஓணானைப் பார்த்திருந்திருக்கிறேன். மரத்தின் கீழே கொட்டிக்கிடக்கும் சருகுகளையே பார்த்துக்கொண்டிருந்தேன். அந்தந்த அழகியலின் துல்லியத்தை உணர்ந்துகொண்டிருக்கும்போதே, மனம் மறைபொருள் அறிவையும் அறிந்துகொண்டிருப்பது போல ஓர் உணர்வு. சித்தர்கள் என்னென்னவோ சொல்லிப்போனார்கள். அவர்கள் எழுத்தும் சொல்லும் பொருளும் உடல் நோக்கியே மனவிசையைச் செலுத்துதலே. இந்த அதிகப்படியான செயலுக்கு, பார்த்துக்கொண்டிருத்தல் என்பது மிக நெருக்கமானதொரு பாதை.
Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.
Enquiries welcome for poetry, translations, film, and literary events.
Site: Kutti Revathi