சோறு முக்கியம் அமைச்சரே

சோறு முக்கியம் அமைச்சரே

15 Sep 22
Stories


அண்ணாவைப் பற்றிய இந்த 10 சுவாரஸ்யங்கள் தெரியுமா..? | 10 Interesting bits  about C.N.annadurai!

 

பேரறிஞர் அண்ணாவை அறிந்தபிறகு, நவீன இலக்கியத்தின் அடி நீரோட்ட அரசியலும் புரியவந்தது எனக்கு.

படைப்பாற்றலும் அறிவுத்திறமும் கொண்ட அண்ணா மைய நீரோட்டச் சமூகத்தின் தலைவனாக இருந்தார்.

இருளிலிருந்து மக்களை அகழ்ந்தெடுத்து எந்த ஒளியைப் பாய்ச்சுவதென தெளிவு பெற்றிருந்தார்.

பெரியார் அண்னாவின் ஊடல்கள் சுவாரசியமானவை. அறிய அறிய இருவர் மீதும் நாட்டமும் ஈடுபாடும் தோன்றும்.

இன்றும் ஆங்காங்கு இளைஞர்கள் அண்ணாவின் தீவிர ரசிகர்களாக இருப்பதை அறிவேன். அண்ணாவின் அத்தனை வரிகளையும்

கருத்துகளையும் மனனமாகக் கொண்டிருப்பவரையும் தெரியும். அண்ணாவை மையமாக வைத்து என் நண்பன் ஒருவன்

வெப் சீரிஸ் ஒன்று எழுதியிருக்கிறான். நாடகார்த்த பாய்ச்சலுடன் இருந்தன அண்ணாவின் நகர்வுகள் என்பதால், அவன்

இத்தகைய சீரி ஸ் எழுதியதாகச் சொன்னான். தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்டுதல் கால வரலாற்றில் அண்ணாவின் பெரிய முன்னகர்வு.

அண்ணாவை அறிந்துகொண்ட பின்பு தான், நான் தமிழில் கையெழுத்து இடத்தொடங்கினேன். அண்ணா நீண்ட காலமாகவே என்னில் இயங்கிக்கொண்டிருக்கிறார்.

எழுத்தின் ஆற்றலையும் திரை ஊடக ஆற்றலையும் ஒருசேர உணர்த்தியவர், தமிழ்ச்சமூகத்திடம் சேர்த்தவர் அண்ணா. 

ஒரு குறிப்பிட்ட ஆளுமையாக தலைவராக உருவெடுத்த பின், இவர்கள் எல்லாம் அவர் தோன்றிவந்த சாதியவாதிகளின் கைகளில் சிக்கிக்கொள்வது அவலம்.

என்றாலும் அண்ணாவை அப்படியான குப்பியில் அடக்கிவிடமுடியாத வீர்யமும் தீவிரமும்.

 

இன்றைய நாளில், நம் முதலைமைச்சர் காலை உணவுத்திட்டத்தைக் கொண்டுவந்திருந்திருக்கிறார். இதை ஒரு பெண்ணிய முடிவு என்று சொல்வேன்.

எத்தனையோ இலட்சம் வீடுகளில், காலை உணவுப் போராட்டங்களாலேயே  குழந்தைகள் இளமைக் கல்வியைப் பெறமுடிவதில்லை.

இன்றும் நடுத்தரக் குடும்பங்களில் காலை உணவைத் தயார் செய்து குழந்தைகளைப் பள்ளிகளுக்கு அனுப்புதல் என்பது போராட்டம் தான்.

இயக்குநர் வசந்த் அவர்கள், சிவரஞ்சனியும் சில பெண்களும் படத்தில் இந்தச் செக்குமாட்டுச் சித்திரத்தை அழகாகக் கொண்டு வந்திருப்பார்.

காலை உணவு மட்டுமிருந்தால் எவ்வளவு வீடுகளில் கல்வி என்னும் வெளிச்சம் எவ்வளவு காலத்திற்கு முன்பே புகுந்திருக்கும்.

ஒரு நூறாண்டு நம் நாகரிகம் உறுதியாய் முன்னகர்ந்திருக்கும். வீடு, குடும்பம், பெண், கல்வி என்ற சங்கிலிகளுக்கு இடையே முண்டியடித்துப் போராடி

சாதிய ஏற்றத்தாழ்வுகளால் மண்டியிருக்கும் வறுமையை எதிர்த்து நிச்சலடிப்பதற்கு நிச்சயம் இந்தக் காலை உணவுத்திட்டம் உதவும்.

Write To Author

About

Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.

Get in touch

Enquiries welcome for poetry, translations, film, and literary events.

Site: Kutti Revathi