
சமீபத்தில், ஹொராசியோ கிரோகா ((Horacio Quiroga) என்ற உருகுவே எழுத்தாளரின் சிறுகதைகளை வாசிக்கத் தொடங்கினேன். சிறுகதை எழுத விரும்புபவர்கள் வாசிக்க வேண்டிய எழுத்தாளர். காடுகளையும் காட்டு விலங்குகளையும் பற்றி நிறைய எழுதியிருக்கிறார். அவர் கதைகளை வாசித்து அப்படியே அவருடைய வாழ்க்கை வரலாறு வாசிக்கத் தொடங்கினேன். அவரைப் பற்றிய தனித்துவம் என்னவென்றால் காட்டு வாழ்க்கை மீது மிகுந்த நாட்டம் மிக்கவராக இருந்திருக்கிறார். எந்த அளவிற்கு என்றால், தன் குழந்தைகளை மிக இளம் வயதிலேயே காட்டு வாழ்க்கையில் ஈடுபடுத்தினார். இன்னும் தீவிரமாகப் போய், காட்டிலேயே சில நாட்கள் குழந்தைகளைத் தனியாக விட்டுவிடும் அளவிற்கு காடுகள் மீதான ஈடுபாடு. அவருடைய காதல் மனைவி இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் குழந்தைகளையும் காட்டிற்கு நெருக்கமான மாற்றுபவர்களாக இருந்திருக்கிறார்.
அவருடைய நோக்கம் என்னவென்றால், தம் குழந்தைகள் தம் சூழல்களைத் தாமே கையாளத் தெரிந்தவர்களாக வாழவேண்டும் என்பதே. வாழ்க்கை என்பதே சவால்கள் நிறைந்தது. ஒவ்வொரு மனிதரும் தான் தோன்றிவரும் தனது தனிப்பட்ட வாழ்வின் சவால்களை எந்த அளவிற்குக் கையாள்பவராக இருக்கிறார் என்பதே அவரது மேன்மையைக்காட்டுகிறது என்பது என் எண்ணம். சிறு வயதில் மிகவும் செல்லம் கொடுத்து, குழந்தைகளின் ஒவ்வொரு செயலுக்கும் தான் முன் நின்று தானே தீர்வு கொடுத்து வளர்க்கும் குழந்தைகளால் தாம் வளர்ந்த பிறகு, வாழ்க்கை தன் மீது வீசும் சவால்களைக் கையாள முடியாமல் போகிறது. பிரச்சனை என்றாலே அதற்குத் தீர்வு இருக்கிறது என்ற சிந்தனை போய், தன் கையாலாகாத் தன்மையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இவர்கள் தாம் தம் பால்யத்தைக் கொண்டாடுபவர்களாக இருக்கிறார்கள். ஒவ்வொரு மனிதரும் தம் வாழ்வின் பின்னணியில் போராட்டங்களை எதிர்கொண்டே தான் இருப்பார்கள் என்பதை இவர்கள் விளங்கிக் கொள்வதில்லை. ஆக, சவால்களை சந்திக்கும் வழக்கம் இளமையிலேயே ஏற்படவேண்டும். சவால்களைத் தன்னால் சந்திக்கமுடியும் என்ற எண்ணமும் திண்ணமாய்த் தனக்கு வேண்டும்.
இன்னொன்று, இன்றைய இளம் தலைமுறை முற்றிலும் வேறுபட்டது. வளர்ந்த முதிர்ந்த தலைமுறைகளால் புரிந்துகொள்ளவே முடியா சிக்கலான உலகத்தில் இளைய தலைமுறை உழல்கிறார்கள். அவர்களுக்கான பிரச்சனைகளை ஒருபொழுதும் நம்மால் கையாளவும் முடியாது, புரிந்துகொள்ளவும் முடியாது என்பதும் என் அழுத்தமான எண்ணம். அவர்களுக்கு இருக்கும் சிக்கல்கள், இன்றைய நவீன வாழ்கை திணிக்கும் சமூக ஊடகத்தனிமையும், எலெக்ட்ரானிக் கேட்ஜட்ஸ் அளிக்கும் தனிமையும். இந்தத் தனிமைகளில் நுழைந்துவிட்ட குழந்தைகளை ஒருபொழுதும் தங்களால் மீட்க முடியவில்லை எத்தனையோ பெற்றோர்கள் கண்ணீர் விட்டிருக்கின்றனர். அவர்களுக்கு நெருக்கமானவராக இருக்க, நாம் நம் நம்பிக்கைகளை, பிடிவாதங்களை, நான் இப்படித்தான் என்ற தனித்துவங்களைக் கூட நிறைய சமயங்களில் விட்டுவிட வேண்டும். நான் எப்படி வாழ்ந்தேன், வளர்ந்தேன் தெரியுமா, எனக்கு இவையெல்லாம் பிடிக்கும் தெரியுமா என்று தான் தன்னுடையவற்றைக் குறிப்பிடுகையில், இவற்றிற்கும் இன்றைய தலைமுறைக்கும் உண்மையில் எந்தப் பொருத்தப்பாடுமே இல்லை என்று சொல்வேன்.
இளைய தலைமுறையைச் சார்ந்தவர்களிடம் தொடர்ந்து பேசுகிறேன். அவர்கள் சவால்கள் மிகவும் சிக்கலானவை. அவர்கள் மீதான கனிவும், நம் முதிர்ச்சியும், நம்மை அவர்களுக்கு ஒப்படைப்பதும் மிக மிக அவசியம். இவர்கள் காலத்தில் இருக்கும் தேவைகளும் பிரச்சனைகளும் நம் பால்யத்தில் இருந்தனவா என்ன சொல்லுங்கள். ஹொராசியோவின் மனைவி, ஹொராசியோவின் பிடிவாதம் தாங்காமல் அவருடைய புகைப்பட லேப்பில் இருந்த ஒரு வேதியியல் பொருளை முயற்சித்து இறந்து போனார். பின்னாட்களில், ஹோராசியோவும் தன்க்கு ஏற்பட்ட புற்று நோய் வலி தாங்க இயலாமல் சயனைட் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். மனிதர்கள் மனதில் எழும் நுண்ணர்வுகளுக்கு இங்கே இலக்கியமோ, சினிமாவோ, கலைவடிவங்களோ, உரையாடல்களோ போதவே இல்லை என்று சொல்வேன்.
இன்று அவர்களுக்கு நாம் உருவாக்கி வைத்திருக்கும் உணவுமுறைகளும், உலகின் தன்மைகளும், வன்முறைத் தூண்டல்களும் சொல்லி மாளாதவை.
Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.
Enquiries welcome for poetry, translations, film, and literary events.
Site: Kutti Revathi