ஒவ்வொரு நொடியும் குமிழ் போல ஒரு வாழ்க்கைமுறை. எல்லோரின் வாழ்க்கையும் ஒரு நொடி முள் மீது, நொடி நொடியாக நகர்வது போல் தான் இருக்கிறது என்பதை எல்லோரின் வாழ்க்கையையும் பார்க்கும் போது தோன்றுவது. தன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தால் குமிழுக்குள் இருப்பதை உணரமுடியுமா என்று தெரியவில்லை. ஒரு தனிமையின் பலூனுக்குள் இருப்பது போல் தோன்றலாம். பொட் பொட்டென்று சுற்றிலும் யார் யாரோ மரணித்துப்போவதைப் பார்க்கையில் வாழ்க்கையின் நிலையிலா தன்மை இன்னும் வீறு கொள்கிறது.
உண்ணும் உணவின் தன்மை, மனிதர்கள் சிந்திக்கும் விதம், பெறும் மகிழ்ச்சியின் மீதான அக்கறையின்மை, நன்றிவுணர்வைப் பயிலாமை என நீளம் பெறுகிறது அதற்கான காரணங்கள். யாரும் யாருடனும் இல்லை. திரை இயக்குநர் வெர்னர் ஹெர்சாக் சொன்னார், இருபத்தியோராம் நூற்றாண்டின் ஒரே சவாலாக இருக்கப்போவது, மனிதர்கள் அருகருகில் வாழ்ந்தாலும் ஒரு தீவின் தனிமை உணர்வார் என்பதே. இதே பொருளில் அவர் ஒரு திரைப்படத்தைக் கூட இயக்கினார். ஜப்பானின் வாழ்வியலைக் களமாக வைத்து, Family Romance,LLC என்ற படம்.
கருத்தியலும் வாழ்வியலின் அறங்களும் சென்று சேரும் புள்ளிகள் தாம் அந்நொடிகளாவும் இருக்கின்றன.
இந்த முறை என் சொந்த ஊருக்குச் சென்றிருந்த போது, நிறைய உறவினர்கள் மறைந்து போயிருந்தனர். ஓர் இரவு முழுக்க மறைந்தவர்கள் பற்றிய கதைகளையே என் அண்ணனும் மயினியும் பகிர்ந்துகொண்டிருந்தனர். பழைமை பீடித்திருந்த ஊர் அழிந்துபோய், அன்னியமானதோர் ஊர் என் கண் முன்னே விரிந்திருந்தது. அந்த ஊருக்குள் நீண்ட நேரம் தங்கமுடியாமல் திகைப்புடன் வெளியே வந்து கொண்டே இருந்தேன். எல்லோரும் நொடிக்குமிழில் சிக்கிப் போய் உடைந்திருந்த அந்த ஊர் நகரமாகியிருந்தது. முதியவர்கள் என்று யாரும் இல்லை. 45 வயதில் நிறைய ஆண்கள் திருமணமாகாமல் இன்னும் காத்திருக்கின்றனர். மேற்படிப்பைத் திறம்பட முடித்த பெண்கள் எல்லோரும் இருபத்தைந்து வயதிலேயே திருமணமாகி வெளியுலகை நாடிச் சென்றிருந்தனர். நொடிக்கணக்கில் வாழ்க்கை நகர்கிறது.
Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.
Enquiries welcome for poetry, translations, film, and literary events.
Site: Kutti Revathi