சென்னையில் குறைபாடுகள் அதிகம்!

சென்னையில் குறைபாடுகள் அதிகம்!

22 Aug 22
Stories


சென்னை மாநகரம், மாயம் நிகழ்த்தும் நகரம் தான்.

 

 

சென்னையின் வலிமையைக் கொண்டாடி இதற்கும் முன்னும் எவ்வளவோ எழுதியிருக்கிறேன். வானொலியில் நிறைய முறை பேசியிருக்கிறேன். பெண்களை வளர்த்துவிடும் நகரம். சிறகுகளைக் கிளைக்க விடும் நகரம். வந்தவரை வாழவைக்கும் நகரம். ஒவ்வொருவரின் ஆளுமையையும் காட்டிக்கொடுக்கும் நகரம். ஆனால்,  அன்றாடம் வாழும் ஒருத்தியாக, சென்னையில் குறுக்கும் நெடுக்கும் இரவும் பகலும் சுற்றி வரும் ஒருத்தியாக, சென்னை நம் சொற்களுக்குள் அடங்காத ஒரு நகரமும் கூட.

சில சமயங்களில் தாம் பெற்றதைச் சென்னைக்குத் திரும்பச் செய்ய இயலாத மக்கள் கூட்டத்திடை நானும் ஒருத்தர் என்ற எண்ணம் தான் ஏற்படும்.

குறிப்பாக, குடிசைகளை புல்டெளசரால் தூக்கி அந்தப்புறம் எரிந்திருக்கிறோம். அழகு என்ற பெயரில் காலங்காலமாக, பெருவெள்ள ஆற்றின் கரையில் புற்களைப் போல மண்ணில் வேரூன்றியிருந்தவர்களைத் தூக்கி எறிந்திருக்கிறோம்.

சென்னையை ஒண்டியிருந்த பழங்குடிகளை எல்லாம் கண்ணுக்குத் தெரியாத வெளிகளுக்கு நகர்த்திவிட்டோம்.

உலகம் முழுக்க, எவ்வளவோ நாடுகளை ஆறுகளை நாட்டின் வளங்களாக, அழகின் அடையாளங்களாகக் கருதித் தூய்மையாக வைத்திருப்பவர்களையெல்லாம் பார்த்தும்

கூவம், அடையாறு, கொசஸ்தலை ஆறுகளைக் காக்க மறந்திருக்கிறோம். கூவம் என்றால் முகம் சுளிக்கச் செய்திருக்கிறோம்.  இவ்வளவு கோடி செலவழித்து நேப்பியர் பாலத்தை செஸ் பாலமாக மாற்றும் அழகியல் மிக்கவராகிய நாம், அதன் கீழே ஓடும் கூவத்தின் அசுத்தத்தைக் கவனிக்க வசதியாக மறந்துவிட்டோம்.

 

சாலையில் செல்வோர் பயன்படுத்திவிட்டு பாலிதீன் காகிதத்தை சாலையிலேயே எறிந்து செல்வதை வழக்கமாக்கியிருக்கிறோம்.

கடற்கரையில் மது அருந்தியவர்கள், பாட்டில்களை உடைத்து கடற்கரை மணலில் புதைத்துவைத்து வருவோர் போவோர் பாதங்களைக் கிழிக்கச் செய்திருக்கிறோம்.

கொரோனாவிற்குப் பின்னும், சாலையில் காறி உமிழ்ந்து துப்பிச் செல்லும் முட்டாள்களாய் இருக்கிறோம்.

மெரீனா தான் சென்னையின் தாய்மடி. எல்லோருக்கும் மனவளம் ஈட்டித்தரும் மணல் மடி. என்றாலும் அந்த மணலின் தூய்மையை நாம் ஒரு பொருட்டாகக் கருதியதே இல்லை.

சாலையில் கார்களுக்குத் தான் முக்கியத்துவம். நடந்துசெல்வோருக்கோ, சைக்கிளில் செல்வோருக்கோ அவருக்குண்டான மரியாதை கொடுக்கத் தெரியாத ஆணவம் மிக்கவராக இருக்கிறோம்.

தன் நகர உக்கிரத்தால் புதிதாய் வருவோரை மிரளச்செய்து அடுத்த நாளே சொந்த ஊரை நோக்கி விரட்டிவிடும் நகரமும் கூட.

சென்னையில் குறைபாடுகள் அதிகம். சென்னை நாளைக் கொண்டாடும் இத்தருணத்தில்  குறைபாடுகளையும் கூறியாகவேண்டும். அவற்றைக் கவனிக்கத் தவறவிட்டுவிட்டு வேறுபக்கம் முகம் திருப்பிச் சென்னையைக் கொண்டாடுவது சுயநலம் மிக்கோர் செயலாகும்.

 

 

**

Write To Author

About

Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.

Get in touch

Enquiries welcome for poetry, translations, film, and literary events.

Site: Kutti Revathi