95 வயது நண்பர்

95 வயது நண்பர்

17 Aug 22
Stories


மீண்டும் அந்த 95 வயது நண்பரைச் சந்தித்தேன்.   இந்திய ஆட்சிப்பணியிலிருந்து ஓய்வு பெற்று தன் முதுமையையெல்லாம் கடந்து இளமையை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கும் எஸ். பி. ஆம்புரோஸ் அவர்கள். வாழ்வின் மேலெழுந்து வரும் நினைவுகளையெல்லாம் தொகுத்து, “Brief Memoirs”, என்ற நூலையும்  எழுதிக் கடந்த மாதம் வெளியிட்டிருக்கிறார். சாதனை தான்.    

அறுபது வயதிலேயே ஓய்வையும் சோர்வையும் அலுப்பையும் எட்டிவிடும் மனிதர்களுக்கு இடையே ஊக்கத்தின் உருவம் இவர். குறிப்பாக, ஆபிரகாம் பண்டிதர் ஆவணப்படத்தை உருவாக்குவதில் இவரின் முனைப்பும் ஈடுபாடும் அதிகம். அடுத்தடுத்த பணிகளை நோக்கி என்னையும் உந்தித்தள்ளும் இவரைச் சந்திப்பதை எந்த நிலையிலும் வழக்கமாக்கியிருக்கிறேன். ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம் ஆவணப்படத்தை இவருக்கான தனித்திரையிடலாக ஏற்பாடு செய்திருக்கிறோம். மறைந்துவிட்ட தன் மனைவி, ஆபிரகாம் பண்டிதரின் பேத்தி பத்மினி அவர்களின் கனவைச் செயல்படுத்தும் முகமாகத் தான் இந்த ஆவணப்படப் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். ஆவணப்படத்திற்கான அவ்வளவு தரவுகளையும்  மீட்டுக்கொடுப்பதில், ஆய்வுக்குறிப்புகளைத் திரட்டித் தருவதில் சளைக்காமல் ஈடுபட்டார்.  ஒரு பொறுப்பை அவரிடம் ஒப்படைத்துவிட்டு வேறு பணியை நாம் ஈடுபடலாம். அவரே அதைச் செவ்வனே நிறைவு செய்துவிடுவார்.

பொதுவாக, முதுமை எய்த எய்த குழந்தைமையை நோக்கி எல்லோரும் நகர்ந்துவிடுவார்கள். அது தன்னிரக்கத்தால் உருவாவதோ என்று இவரைப் பார்க்கும் போதெல்லாம் தோன்றும். ஏனெனில், ஆம்புரோஸ் அவர்களிடம் அந்த மாதிரி குழந்தைமைக்கான இயலாமையெல்லாம் இல்லை. எனக்குச் சமமாக, தனக்குச் சமமாக  என இரு புறமும் இணையான நிலையில் தான் எல்லா உரையாடல்களும் செயல்பாடுகளும். முதுமையின் குறிகுணங்கள் உடலை வாட்டாமல் இல்லை. அது குறித்த விழிப்புடனேயே அவர் தன் பணிகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். என்னையொத்தவரிடம் எம்மாதிரியான பணி எதிர்பார்ப்பைக் கொண்டிருப்பேனோ அப்படித்தான் ஆம்புரோஸ் அவர்களிடமும் பணியாற்றுகிறேன்.

முதுமை பற்றிய நோய்கள் பற்றிய எல்லா முன்னபிப்ராயங்களையும் கட்டுமானங்களையும் உடைத்துப் போடுபவர் இவர். கிடைக்கும் மேடைகளில் எல்லாம் இவரைப் பற்றிப் பேசிவிடுவேன். இது போல் வயது முதிர்ந்த ஆளுமைகள் பலரைச் சந்தித்திருக்கிறேன். ஆனால், இவருடன் தான் என் வாழ்வின் அடிப்படையான தொழிலான சினிமாவிற்காகப் பணியாற்றும் பணி கிடைத்தது. இந்தப்பயணத்தில் எவ்வளவோ சிரமங்கள். இவரைச் சந்தித்துவிட்டால் சிரமங்கள் பொடிப்பொடியாய்த் தகர்வதை உணர்வேன். அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் என்னை அழைத்து நிகழ்வுகள் பற்றி விசாரித்தார். உரையாடலின் முடிவில், ‘நான் உங்களுக்காக ஒரு நூல் வைத்திருக்கிறேன்’, என்றேன். அவர், ‘நானும் ஒரு நூல் வைத்திருக்கிறேன். வாருங்கள், வந்து பெற்றுக்கொள்ளுங்கள்’, என்று தன்  “Brief Memoirs” பிரதி ஒன்றை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

 

*

Write To Author

About

Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.

Get in touch

Enquiries welcome for poetry, translations, film, and literary events.

Site: Kutti Revathi