ஹீராக்ளீட்டஸின் நதி

ஹீராக்ளீட்டஸின் நதி

03 Oct 19
Article


நீள்கவிதை

இந்த நீள்கவிதை மூன்று ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது. “ஹீராக்ளீட்டஸின் நதி” என்ற இந்தக் கவிதையும், “பேரரசியம்” என்ற நீள் கவிதையும் மட்டுமே அடங்கிய தொகுப்பாய், என் பத்தாவது கவிதை நூலைக் கொண்டு வரும் திட்டமிருந்தது. மொத்தத் தொகுப்பு திட்டத்திற்குப் பின் அந்தத் தனித் தொகுப்பு முயற்சி கைவிடப்பட்டது. என்றாலும், “பேரரசியம்”, என்ற நீள் கவிதை ‘புறநடை’ இதழில் வெளியானது.  ஒவ்வொரு மனிதருக்கும் காலக்கோடு மாறுபடும் என்ற கருத்தியல் அடிப்படையில் உருவான கவிதை. அதுமட்டுமன்று, காலத்தின் நீர்மையைத் தன்னளவில் உணர்ந்து வெளிப்படுத்திய கவிதை எனலாம்.


எந்த ஒரு மனிதனும் 

ஒரு முறை கால் வைத்த நதியில் 

மீண்டும் கால் வைக்க முடியாது

என்றார், ஹீராக்ளீட்டஸ் 

(கி.பி. 544 - 483)

அந்த சூப்பர் நிலவு ஒரு பெரிய குமிழ் போல 

இரவும் பகலுமான பூமியின் மீது 

நழுவுகிறது

என் கைவிரலுக்குக்கிடையே 

பிதுங்கி வெளியேறிய குமிழ் போல

என் கருத்தின் கவனத்துடன் 

தைக்கப்பட்டு இயங்குகிறது

எந்த வீதியில் திரிந்தாலும் 

என்னுடன் நூலால் கட்டப்பட்டுள்ளது போல் 

வானத்தில் மிதக்கிறது


காலத்தின் கடிகாரம் முட்களாலும் 

அவற்றை எச்சரிக்கும் எண்களாலும் 

துரத்தப்படும் வேளைகளில் இருந்து 

அந்தக் குமிழ் என்னை வெளியேற்றுகிறது

வானத்தில் கால எல்லை மீறி

சரசரக்கச் செய்கிறது


ஊளையென வீசும் காற்று

அந்த நிலவிலிருந்து புறப்பட்டது

பூமியிலிருந்து மேலெழும்பும் 

மந்திரவித்தையின் செயல்திறனை

நிலவு என்னுடலில் இருந்து 

குருதியாய்க் கக்குகிறது

கண்ணீராய்க் கொப்பளிக்கிறது

அலையாய்க் காற்றைத் தள்ளுகிறது. 


அந்த வனாந்திரத்திற்குள் 

எப்படி அது ஊளையிட்டிருக்கும்

மலையின் உச்சியில் 

எப்படி அது தனித்திருந்திருக்கும்

கடலில் இருந்து மேலெழ 

எப்படி தன்னை உந்தியிருக்கும்

அமனித சாயலை எதிர்க்கும் 

ஒரே  முகம் அது

முகமூடிகளை அகற்றி அகற்றி 

இலட்சோப இலட்சம் வருடங்கள் 

அசல் முகம் நோக்கிய வீரச்செயல் 

அதற்குள் நுழைந்து விடும் துணிவை 

அது வா வாவென

வேட்டைக்கு அழைப்பது போல் 

சவாலிடுகிறது

அதன் காலவெளிக்குள் 

நுழையும் தீவிரத்தில்

கண்ணயர்ந்து 

மயக்கத்திற்குள் நுழைய

மயக்கம் உறக்கமாகிறது 

உறக்கம் கனவின் எதிரே 

விரித்து நிறுத்துகிறது

கனவிலிருந்து நிலவின் கோளம் அருகில்

என்றாலும் அங்கிருந்து 

நிலவுக்குப் பாதை இல்லை

அகழி ஒன்று 

கால்களின் வெகு அருகில் திறக்கிறது


கண்களின் இமைகளை 

எப்படிச் சுழற்றிக் கவர்கிறது

அந்த நிலவு வெளி

தகதகக்கும் பார்வையை அகற்றவொட்டா 

மூடவொட்டா

உயிர்த்துவ அழகு

நேற்று மரித்தவரின் கண்கள் 

எப்பொழுதுக்கும் காணவொண்ணாமல்

போன நிலவு நீ 

ஒளியின் பெருஞ்சுழற்சி நீ

உன்னை அவர் இழந்துவிட்டது 

பெருந்துயரம்


காலத்தின் வெளியில் நடையாய் நடந்து 

களைக்காத

புதிய உயிர் என்னிடம் இருக்கிறது

கனவின் விளிம்பில் 

வெகு அருகில் கண்ட 

உனது உருவம் நோக்கி 

நனவில் நடையாய் நடக்கிறேன்

காதலின் மறுப்பில்

முகம் தொங்கிப்போகும் 

அசட்டுப்பெண் இல்லை நீ

தனிமையின் தருணங்களிலும்

திகுதிகுவென

நிலைதிரியாது எரியும் 

கடுந்தணல் வெளி நீ


காவிய நிலவே

சுழலும் வெண்புத்தகம் நீ

மண்ணின் எல்லா மொழிகளிலும் 

பக்க எண்ணிக்கையின் முடிவு இல்லாத

திறந்த ஏடுகளின் வெளி

மூளையின் மடிப்புகளில் சேகரமாகி

பொலிவிழந்த மங்கிய கவிதை வரிகளின்

சொல் தேடிக் கொடுக்கும் 

வெண் பக்கம் நீ

என் மூதாதைக் கிழவி 

மறந்திருந்த கனவுகளை

உன்னிடமிருந்து வாசித்துக் கொண்டாள்


எந்த அரூப வெளிகளுக்குள்ளும் 

நுழைவதற்கு

தனித்து விடப்படவேண்டும் முதலில்

தனிமையில் கிட்டும் அரிய திறவுகோலால்

எந்த அரூபவெளியின் வாயில்களையும் 

தொட்டுணரமுடியும்

குருட்டுத்தன்மையை இழக்கமுடியும்

கண்கூசும் வெளிச்சத்திற்குள் 

பிரவேசிக்கையில் 

உடலே கண்ணாகிறது

உடலே விரல் முனையின் கூர்மையாகிறது

எத்தனை திரைகள் கிழிந்திருக்கின்றன

கடந்து கடந்து கடந்து 

எத்தனை ஆழமான வெளிக்குள் 

விழுந்திருக்கிறேன்

தரை மோதாமல் 

தரை இறங்கியிருக்கிறேன்


கண்மூடிய ஆழப்பெருமகிழ்வில்

உடலே ஒரு வெளியாகியது

சிறகுகள் உள்நோக்கி முளைத்தன

உடல் மிதந்தது

தன் ஊக்கத்தின் சீரிய அசைவில்

உடல் மிதந்தது உடல் மிதந்தது

வானம் தொட்டது

விண்ணில் அலைந்தது 

நிலவை ஊதும் பெருங்காற்று 

விண்ணெங்கும்

பேய்க்காற்றடித்ததில் நிலவும் 

விண்ணில் அலைந்த குமிழி

நானும் ஊதற்காற்றில் துகள்


கண்மூடினால் நிலவு இல்லை

உடல் வெளிக்குள் உலவும் நிலவை

கைப்பிடிக்க வாய்ப்பில்லை

அகவெளிக்குள் நிலவின் தீவிரம்

வெளிச்சமாய் 

நிலவின் எல்லை உடலுக்குள் இல்லை

கண்திறந்தால் விழி நிரம்பும் நிலா

கண்மூடினால் நிலவு இல்லை 

இல்லவே இல்லை


நீர்வெளியில் உள்ளிறங்கி அளம்புகிறது

எல்லாம் நகல் வெளி

நீர்த்திரை உள்ளிருக்கும் பிம்பமொழி

கண் நகலூடே காண்கையில் அது அரூபம்

நகல் அரூபமில்லை

நகல் என்பது அசலின் எதிர் இல்லை

நிலவைத் தனதாக்கிக் காட்டும்

தருணத்தால் 

நீர்வெளி நகலாகியது

நிலவைத் தனதாக்காத தருணங்களில்

நீர்வெளி அசலான ஒரு வெளி

காலம் கலைந்து கலைந்து நீள்கிறது

நரையின் வழியே நானோ நேர்க்கோட்டில்

முதுகில் ஒட்டிய காட்சிகள்

காணவியலா சாபமாய்ப்  

பரிணாமப் பாதையில் முன் விரைகிறேன்

அல்லது பின்னாய் நடக்கிறேன்


காலம் முணுமுணுப்பதில்லை

வெளியின் தாழ்கள் 

எப்பொழுதாவது கிறீச்சிடுகின்றன

அல்லது ஒவ்வொரு மனிதரின் 

மரணத்தின் வழியாகவும் 'கிறீச்'

காலம் முணுமுணுப்பதே இல்லை

வடக்கு தெற்கு கிழக்கு மேற்கு 

இடது வலது மேல் கீழ்

எந்த முகமும் இல்லாத உருள்கோளம்

நிலவு 

காலம் மூடும் 

கைவிரல்களுக்குள்ளிருந்து பிதுங்கி 

வெளியேறிய காலக்குமிழ்

என் தலைக்குள் ஒரு காலக்கணினி

உங்கள் ஒவ்வொருவர் தலைக்குள்ளும் 

ஒரு காலக்கணினி

கணம் யுகமாக யுகம் நொடியாக

பயணிக்கும் சவாலிலிருந்து 

தப்பிக்கவே முடியாது


இளம்காதலைப் போல் நுண்ணரம்புகளின்

தீவிரச்செயல்பாட்டின் வழியே வழி

ஏறி நின்ற இடத்திலேயே 

நின்றது போல் நிற்கிறேன்

நகர்த்திச் செல்லும் மின் காலப்பட்டை

உடலைக் கவர்ந்து செல்கிறது

நின்ற இடத்திலேயே நிற்கிறேன்

காட்சிகள் மாறுகின்றன

முகத்தில் கோடுகளும் 

கூந்தலில் நரைத்தீற்றல்களும்

மூளையின் வெளியில் பிளவின் வெளிகளும்

வெளியின் சீற்றத்துடன் வெப்பத்துடன் 

காற்றுடன் தீயுடன்

நீர்மையுடன் குளிர்தலுடன் கொதிப்புடன் 

அமைதியுடன் பேரமைதியுடன்

உடல் உராய்கிறது 

எண்ணங்கள் தீப்பிடிக்கின்றன


கற்பனை வெளி விரிகிறது 

அப்படி ஒருவெளி ரூபமும் இல்லை 

அரூபமும் இல்லை

எங்குமே இல்லை

எனக்கு மட்டுமே தெரிகிறது 

கண்ணுக்குத் தெரிந்தாலும்

கைவிரலால் தொட்டுணராத 

கண்கவர் காட்சிகள் கற்பனைகள்

அசாதாரண அசைவுகள் 

என்னிலும் உரு பெரிதான காதலரைக் 

குழந்தையாக்கி மடிசாய்த்தது போல் 

உருவத்தைப் பிறழ்த்தும் 

சாகசங்களின் நிகழ்வெளி


ஒரு காதல் 

என்னைப் பிணைத்து வைத்திருக்கிறது

காதலைக் கிழிக்க இயலாது

பிணையே காலமாகி இயங்குகிறது

கனவு ஒரு தொலைநோக்கியின் லென்ஸ்

உறங்கிட அதனாலேயே சம்மதிக்கிறேன்

லென்சின் வழியே 

காலத்தை நோக்கிட நோக்கிட 

அதன் தூர பாரங்கள் மாறி

காட்சி மட்டும் துல்லியமாய்

மின் ரப்பர் பட்டை 

கொண்டு செல்லும் வேகத்தில்

காற்றின் கீறல்கள் தீயின் கைகள் 

நீரின் பாய்ச்சல்கள்

சுடுநாவுகள் எண்ணத்தின் கொடும்விரல்கள்

காலம் அப்படியானதொரு பிரபஞ்ச மறை


இந்தப் பிரபஞ்சத்தின்

எந்தெந்த மூலங்களின் கூட்டுத்தொகை

நாவின் அரும்மொழி

மரபின் வழி சுமந்த நெஞ்சின் தீரம்

இரண்டாயிரப் பதினாறு 

என்ற குழப்பமான யுகம் 

நா தடித்த கண் தீய்ந்த மனிதர்களின் உளவு 

அவ்வன்மங்களின் உரமேறிய உள்ளம்

தாய் என்றான மூர்க்கம்

தந்தை என்றான கனவு

அகன்ற பாதங்களால் 

வெப்ப மலையேறிய நூற்றாண்டுகள்

தொழுநோய் காலரா 

பிளேக் தாண்டிவந்த தோல்

சூரியக்கதிர்களின் ஒளி ஆண்டுகளை 

ருசித்த பித்தம்

மனித மூளையின் 

அமிலம் ஏறிச்சுவர்ந்த கவிதை

குப்பி குப்பிகளாய்ப் புளித்துப்போன 

நினைவுகளின் வினிகர் கூழ்மம்

திற திற என்று அன்றாடம் மன்றாடும்

சிறகுகள்

கானகம் போல் 

எல்லைகளை விரிக்கும் 

மனப் புலியின் ஆட்சி


ஆகவே கவிஞராகினேன்

பல நூற்றாண்டுகள் கடந்து 

மின் ரப்பர் பட்டைக்கு

சொற்களை கொண்டு செல்வேன்

சொல்லைத் தீட்டி 

தொன்மத்தின் பொருளாக்குவேன்

வேதனையின் நொதியிலிருந்து 

புதிய சொற்களை உருவாக்குவேன்

மின்னும் தேன் படிகங்களைப் போல் 

உங்கள் ரகசியங்களின் நாவில் ருசிக்கும்

இரவின் தனிமைச் சுவர்களில் 

அருகில் பதுக்கும் 

வாய்ப்போ வசதியோ இன்றி

வானில் எறிந்து தூரம் வைத்து  ரசிப்பீர்கள்

பல தொடர் ஆண்டுகள் 

குதப்பித்துப்ப மறந்த சொற்களில் இருந்து

உருவாக்கிய சொல் 

உறங்காத கனல் தகிக்கும் எரிமலை கொப்பளிப்பு

நீங்களே வதைக்க விரும்பும் 

உங்கள் பிறப்புறுப்புகளின் மீது

பிளேடைப் போல் இறங்கி குருதியைப் பீச்சும்

தன் மீதான அடக்குமுறையின் விபரீதமாய் 

அந்த பிளேடாகிய சொல் கீறும் சொல்


போர்ஹே கண்டறிந்த காலப்புதிர்களிலும் 

மரண சர்க்கசிலும்

நில்லாது விரையும் 

கனவாகனத்தின் மீதமர்ந்து எழுப்பும் 

கூக்குரல்களால்

உங்கள் மாடங்களை 

அலங்கரிக்கும் அகராதிகளை 

உருவாக்குகின்றீர்

சுயக்குரல் தொலைத்த வேளையில்

இடதுபக்கம் விரித்து வைத்த 

அகராதிகளிலிருந்து

வலது கரத்தால் சொற்களைப் பிரதியெடுப்பீர்கள்


இப்பொழுது நான் இறக்கப்போவதில்லை

நட்சத்திரத்துகளிலிருந்து 

தீயின் உக்கிரத்துடன் பிறந்தது வந்தேன் எனில்

மீண்டும் நட்சத்திரத் தூசியாகும் 

பொழுதை நோக்கி

விரையும் நுண்வேகப்பட்டையில்

ஏறி நிற்கிறேன்

ஒரு நூற்றாண்டின் தடைநிவாரண நெம்புகோலை

நுண்வேகப்பட்டை விடுவிக்கிறது

எட்டி எட்டிச் செல்கிறது நிழல்

நிழலற்ற அசல் போல 

என் தலைமீது சூரியன் நின்று சுழல்கிறது

எப்பொழுதும் சூரியன் என் தலை மேலே


ஆகவே கடவுள் இல்லை

நானே வந்தேன் நானே போவேன்

நான் எழுதும்

நிழல் பிம்பங்கள் உருக்கொண்டு

நானே பேருரு கொள்கிறேன் என்னுள்

நான் எழுதும்

நிழல் பிம்பங்கள் உருக்கொண்டு

நான் பல திரியாய் திரிந்து 

நூறு நாவுத் தழல்களாய் ஆவேன்


எனக்கு மட்டுமே எல்லாமே நிகழ்ந்தது

காலத்தின் தொடர்ச்சியை நானே அறுத்தேன்

துண்டிக்கப்பட்ட காலம் 

கனவுகளாய் என்னை நோக்கி

புயலாய் வரும்

தூக்கத்திலும் பீடிக்கும் 

அவற்றின் சுருள்கள் 

பகலில் முடங்கும் வெயில் வீதிகளில் 

சில நேரம் எதிர்வருவோரின் விழிகளில்

பல நேரம் அத்துண்டிக்கப்பட்ட காலம்

சொற்களாய்ப் பின்மண்டையிலிருந்து

சீறிப்பொங்கும் கவிதையாகும்

ஒளிப்புள்ளியிலிருந்து பீய்ச்சியடிக்கும்


நிலவின் உழுதலன்பு தொடுகிறது 

கடைசி மூச்சைப் போல

நெருக்குவதில்லை

ஒரு வீணையின் இசையை எழுப்புகிறது

தலைக்குள் மட்டும் மெல்லிசையாய்க் கேட்கிறது

புறச்செவிகள் அவசியமில்லை

நிலவின் விரல்கள் 

நரம்புகளை மென்மையாக 

மிக மென்மையாகச் சுண்டிவிடுகின்றன

கொஞ்சம் கொஞ்சமாய்க் கண்ணீர் சுரக்கிறது

கால நீட்சியின் சோகம் புரியாமல்

நிலவின் திரைகளை

விலக்க வீசுகிறது காற்று

விண்வெளியின் பாதையில்

தூற்றிவிடுகிறது மேகங்களை 

அவை மழையின் புழுதியை அடிக்கின்றன

நட்சத்திரங்கள் அவிகின்றன

உலரப்போட்டிருந்த 

அடர்வண்ணத் திரைச்சீலைகளாய்க்

காட்சிகள் படபடக்கின்றன


எவ்வளவோ இலட்சம் ஆண்டுகள் நழுவிப்போன 

பல சிக்கலான தருணங்கள் தாண்டி

என் முறை வாய்க்க

பல பத்து வருடங்கள் அல்லது ஒரு நூற்றாண்டு

நான் சில உளிகளுடன் வந்திருக்கின்றேன்

ரசமணி செய்யும் வித்தையுடன்

மூலிகை ரசங்களில் 

மீண்டும் மீண்டும் தோய்ந்த ரசத்தை

பல்லாயிரம் முறைகள் 

கல்வத்தின் சக்கரத்தால் அரைத்து 

துளியாகத் துள்ளி ஓடும் ரசத்தை 

மணியாகக் கட்டும் வித்தை

கடைவாய்ப்பற்களின் இடையே 

அரைபடும் சொற்களை

கவிதையாகக் கட்டுதல் போல


காப்பிய நிலாவின் ஓலைச்சுவடிகள் 

தட்பவெப்ப பருவமாற்றமுற்ற மொழியை 

காலத்தின் கனத்த கால்களால்

எழுதிச்சுவடுகளாக்கிக் கொண்டது

பக்கம்பக்கமாய்ப் படபடத்துப் 

புரட்டிக் கொண்டேயிருக்கிறது

கனத்த காற்றின் கைகளால் 

வலுவான அதன் பக்கங்கள் புரளுகையில்

மொழி தரும் உரு அர்த்தங்களை

வாசித்து வாழ்ந்துமுடித்துக்கொள்கிறார்

மனிதர் என்போர்

இல்லையென்றால்

இலட்சோப லட்சம் ஆண்டுகளின் மலைகளை 

சூரியனை வளர்த்தபூமியில் 

காலத்தின் இடையில் வந்து விழும் ஒருவர்

எப்படி வாழ்வைக் கற்றுக்கொள்ளமுடியும்

நிலா வளர்ந்து மொழி கற்பிக்கிறது

தேய்ந்து கண்ணீரைத் தந்து அழித்து 

பொருள்மாற்றம் செய்கிறது

புனைவின் கவிதையின் உச்சத்தை

நிலா எழுதி எழுதிக் 

கெழுதகைமை வழங்குகிறது


எப்பொழுதும் இறக்கவிரும்பாதவள் நான்

இறக்காதவளும் நான்

மாயக்கொடியின் வழியாக 

இறங்கிவந்தவள் நான் நீங்களும்

பஞ்சுத்தூவியாகத் திரிந்த 

மனதைக்  கயிறாகத் திரித்த கொடி வழியே

அம்மாவும் அம்மம்மாவும் மூத்தம்மம்மாவும் 

இறங்கி வந்தக் கயிற்றின் வழியே

மாயக்கொடியின் வழியே


என் தேச உருவில் 

வளர்ந்தெழுந்து வந்தேன்

அதன் காலாகாலங்களின் 

வெற்றிகளுக்கும் இழப்புகளுக்கும் ஏற்ப

என் சொற்கவிதைகள் பெருகின

பின்னொரு நாளில் 

மலம் அள்ளியவர்களையும் 

தூர்வாரியவர்களையும்

மறந்த மனிதர்களால் தேசம் நலிந்தது

பெயரை இழந்தது

பூஞ்சைக்காளான்கள் விளைந்தன

அகண்ட காலவெளியை மறுத்து

என் காலத்தைத் 

தேசத்தின் காலமாக்கிக் கொண்டேன்

என் காலம் ஊசலாடும் நாவுடன்

கனத்த வெற்றிடங்களின் அறைகளில் 

அவ்வப்பொழுது ஒலித்து

தன்னை நினைவூட்டிக்கொள்ளும் பணியைத்

தொடர்ந்து தொடர்ந்து 

பின்னொரு நாளில் 

துருப்பிடித்து கிறீச்சிட்டுக் காலத்தின்

திசைவெளிகளைப் புறக்கணிந்து

ஓய்ந்து போன கடிகாரக்காலையில்

என் கனவின் வெளியை

காலத்தின் தேசமாக்கிக் கொண்டேன்

அங்கு நிகழ்காலம்  இல்லை

எதிர்காலம் 

அல்லது வாழ்ந்து ஓய்ந்த எதிர்காலத்தின்

இறந்தகாலம்


எதிர்காலத்தை ஏற்கெனவே 

வாழ்ந்து வந்திருக்கிறேன் என்பதால்

இறந்தகால விதைகளை 

நிகழ்வுகளைப் பதியனிடுவதில்

எச்சரிக்கையான கவனம் 

வாழ்ந்திருந்த எதிர்காலம்

மிகவும் அழகானதாகவும் 

கற்பனைசெழித்துமிருந்ததால்

சிந்தனைகளின் நெய்வு

அவற்றிற்கேற்ப 

காலம் சரசரவென இழையாகி 

ஊடும் பாவுமாய் இளைந்து செல்கிறது

வாழ்க்கைக்குள் நிறைய 

மனிதர்கள் வந்து செல்கின்றனர்

மாடுகள் புறாக்கள் பாம்புகள் நதிகள்

கடும் இடைவெளி விட்டு உருளும்

இரண்டு சக்கரங்களான தேர் 

நானும் அந்த மூத்தக்கிழவியும் 

ஓட்டிச்செல்லும் கனவிலிருந்து

எவ்வளவோ உயரத்திலிருந்து 

காலத்திற்குள் குதித்தோம்

நீண்ட ஓட்டத்தில் 

அசுர கற்பனையில் சிதைந்த 

சக்கரங்களின் ஆரங்களும் 

சக்கர வளையங்களும் 

கிழவியின் கீறல்கோடுகள்

ஆறுகள் ஓடியடங்கிய தடங்கள் போல

கண்ட கனவைக் 

காலத்திற்குள் நீட்டிடும் முயற்சியில்

கிழவி மீண்டும் மீண்டும் விழுந்து எழுந்தாள்

விரையும் இரு சக்கரங்களையும் 

இணைத்து இயக்கினேன்

அதிரும் சேதங்கள் என்றாலும் 

நில்லாது ஓடிய நெடுந்தேர்


காலந்தோறும் நகரை எரிக்க ஏதுவாய்

கண்ணகியின் சீற்றம் புரியாத புதிர் வழிகள் அடங்கியதாய்

வழித்தடம் மறவாத வற்றிய ஆற்றினைப் போல

துலங்கிக்கொண்டே இருக்கிறது

எரிகிறது ஒரு நிலவெளி

கடும்பாறைகள் புதைந்த நிலக்காட்சியில்

சூரியன் அமர்ந்திருந்த பாறையைத்

தன் இதயத்தில் எடுத்து வைத்துக்கொண்டாளோ

என்னவோ


எத்தனை அடைமழைக்காலங்களை

நான் கடந்து செல்வேன் 

நூறு அல்லது இது தான் கடந்து செல்லும்

ஆயிரமாவது அடைமழைக்காலமா

அம்மழைக்காலங்களில் 

இறந்தகாலம் வெள்ளம்போல்

கழுத்தளவு நிறைய

ஏதேதோ அடைமழைக்காலங்களின் 

காட்சிகளும் தோற்றங்களும்

முக்காலமும் மழை பெய்துகொண்டேயிருக்க

நீர்த்திரையால் மனிதர்கள் பிரிந்து வாழ்ந்தனர்

சூரியன் என்பதை மனிதர் அறிந்திராத காலமது

இருளைக் கரையும் திரையாக்கியது மழை

மழை நிலவிலிருந்து பெய்ததாய்க் கண்டனர்

பெருகிய நீர்

கடலாகிக் கடலாகி

மனிதர்கள் கடல்பிராணிகளாகினர்

எந்தக் காலத்திலிருந்து தொடங்கிய மழை

எந்த வானத்தில் தொடங்கப்பட்ட மழை

நீர்க்கோடுகளால் ஆன வரலாறு

கண்ணகி அறியாதது

 

என் உடலில் எப்படி 

தீவிரமாகச் செயல்படுகிறது காலம்

அதை இன்னும் இன்னும் அனுமதித்தேன்

நூற்றாண்டுகளின் செயல்திறனை

தொடர்ந்து என்னுள் இயங்கவிட்டு

காலத்தின் சவால்களை 

என் முகத்தால் ஏற்கிறேன்

முகத்தை முன்னேந்தி

நீட்டப்படும் கண்ணாடிகளை எல்லாம்

உடைத்திருக்கிறேன்

முன் பின்னாய் காலக்கடிகாரங்களை 

முள் சுழற்றிவைத்து

ஏமாற்றியிருக்கிறேன்

சீற்றத்தின் உச்சியில்  

உடலின் உணர்ச்சியின்மையை 

வெளிக்கொட்டி

மீண்டும் நிறைத்திருக்கிறேன்

காலத்தின் கோலங்களை

மனத்தரையெல்லாம் வரைந்து


சுழற்பந்தென இயங்கும் 

காலத்தின் மேற்பரப்பில்

ஒட்டிக்கொண்ட தேனீ நான்

ஒட்டிக்கொண்ட இடமே

காலத்தின் மையம்

நாவை நீட்டி காற்றைக் குடிக்கும்

சித்துவேலையே கவிதை என்கிறேன்

உயிரால் காலத்தைச் சிறைபிடித்திருக்கிறேன்

உயிரால் மட்டுமே

காலத்தைச் சிறைபிடிக்கமுடியும்

கானகத்தின் வெளி ஒன்று

பெரும் ஊதலுடன் அசைவதை

நின்றுணரும் தருணங்களில்

விடுதலை எழுச்சியைத் தொடுகிறேன்

ஒரு வனவிலங்கைப் போல் 

அசைகிறது காலம்


ஒரு வாளைத் தீட்டும் சாகசம்

இந்த வாழ்வு

வாளை இயக்காது கூர்காக்கும்

சாதனை இந்தக் காலம்

பறவையை உடலுக்குள் அனுப்பிப் பார்க்கும்

பரவசம் இந்த வாழ்வு

பறவையாய் உடலிலிருந்து எழுந்து போகும்

கணம் இந்தக் காலம்

திசைக்காவலர்களை மீறி 

வெகுண்டெழும் தருணங்கள் 

பாலைவனத்தில் பாதச்சுவடுகள்

காற்றின் வீச்சில் மணல் வீசி 

நிரம்பும் பள்ளங்கள்

மீண்டும் மீண்டும் பதியும் பாதங்கள்

பதிந்தெழும் பதிந்தெழும் பாதங்கள்

நிரம்பும் நிரம்பும் பாதப்பள்ளங்கள்

காலம் எழுதி எழுதி அழிக்கும் 

எழுத எழுத அழிக்கும் 

அழித்து அழித்து எழுதும்

அழிக்க அழிக்க எழுதும்


கரையிலிருந்து 

கடலுக்குள் இறங்கிய ஆமை

கடலின் பரப்பை

கால வட்டமாக்கி

மூழ்கிப்போகிறது

வளர்கிறது சுழல்கிறது உழல்கிறது

எழுகிறது தவழ்கிறது ஒவ்வோர் அடியாய்

கடலை அளக்கிறது

எத்தனை உலகங்களைப் பார்த்துவர

அக்கடலில் மூழ்கியது

கடலில் மூழ்கி மாண்டுபோனாள் மூதாயி 

கரையொதுங்கிக்கிடந்தாள்

ஆமையைப் போல மல்லாக்க

காலத்தின் சக்கரம்

ஒரு கணம்

நிலைக்கு வந்தது போல 


இரண்டாயிரத்து எழுநூறு வருடத்தின்

முதல் சுட்டுவிரலில் பிறந்த தீவிரம்

நரம்பின் கதிகளில் எலும்பின் தீவிரத்தில்

மின்சார அதிர்வின் புத்துயிர் கொண்டு

எழுத்தால் சொல்லைப் பிரசவிக்கிறது

அதற்கு முன்பும் இருந்தது காலம்

அதற்கும் முன்னும் இருந்தது மொழி

மொழிந்து மொழிந்து கண்ட உணர்வுகளை

உணர்வுகளை மொழிய மொழிய

திரிந்த தருணங்களை

கணக்கில் எடுத்துக்கொள்ளா காலத்தோல்வி

கருந்துளையில் நழுவும் திராணியற்று

தூசியாக வெளிச்சத்துகளாகத் திரியும்

ககனமெல்லாம் ஒளித்துகளாய்

நாளை எதிர்நாளில்

பருவம் எய்தி 

முதல் உணர்வின் பரவசத்தேடலில்

என் பவளக்கொடி 

சொல் தேடி அலைகையில்

ககனமெல்லாம் ஒளித்துகளாய்

கண் உறுத்தும் கூசொளியாய்

அச்சொல் மிதந்து மிதந்து 

அவள் வெளியை நிரப்பும்

விடுதலையா வேட்கையா தேடலா காதலா

தனிமையா தவிப்பா இசையா 

எதையும் அச்சொல் கொண்டு 

பிரசவிப்பாள் பிரசவிப்பாள் பரவசிப்பாள்

போ போ என

சொல்லையோ உணர்வையோ விரட்டாது 

பின்னாலே ஓடி ஓடித்தேடி

பசும்புல்வெளியெங்கும் கால் எட்டிவைத்தோடி

சொல்லைச் சொல்லச் சொல்ல

தேடிப் பிடித்து வருவாள்

கூசொளியாய்த் திரிந்த சொல்

காற்றின் கயிற்றில்

கண்ணெதிரே கட்டுப்பட்டுத் திரியும்

வண்ணக்கோளமாய் உருவெடுக்கும்

இரண்டாயிரத்து எழுநூறு வருடத்தின்

தொடக்க வேகம் இல்லையா அது


இப்பொழுது போல் நடுங்கும்

எலும்புக்கூடுகள் இல்லை

தனித்த கூதிரில் 

3.75 மில்லியன் ஆண்டுகளாய்

நடந்து திரிந்து மயிர்போர்த்திய

இன்னும் விலங்கின் கூன் நிமிராத 

பாதங்கள் முழுதும் பூமியில் பதிந்த

இளம்பெண்

மழையின் சாட்டைகளை ஏற்று

காலத்தின் சாட்டைகளை

முதுகில் சுமந்த தனியிளம்பெண்

மரபணுக்களில் பதிந்தவற்றை

பிரித்துவாசிக்க மொழி கிட்டியது

மொழியில்லையென்றால் 

உணர்ச்சிகளை வாசிக்கக் கண்டறிந்த

காலவெளி எதிர்நீந்திய இளம்பெண்


விதிக்கப்பட்ட வரையறையைக்

காலமென்று எழுதாதீர்

வாழாதீர்

சூழலின் தாக்கங்களில் 

உருண்டு புரண்டோடும் கூழாங்கல்லின்

யதார்த்த பயணத்தைப்போல

எதிர்பார்ப்பின் தருணம் நோக்கித்

திரண்டு கிடப்பது சுகம் 

பளிங்கு ஒளியை வாங்கி 

ஆழநீரில் உருண்டு நடப்பதும்

குளிர்ந்து கிடப்பதும் சுகம்

கவிதையின் ஏதோ ஒரு கணத்தில்

நான் ஸ்டீஃபன் ஹாக்கிங் சொன்ன

பிளாக் ஹோலுக்குள் நழுவி

காலமற்ற காலத்திற்குள்

அகண்ட ஆறெனப் பாய்வேன்

இறந்தகாலமும் எதிர்காலமும்

ஒன்றுடன் ஒன்று இணைந்து உருவாகின

ஒரே சமயத்தில் இயங்குவதும் கூட

படகை இயக்கிப்பார்க்க 

ஆறு உண்டா எனப்

பரிசோதிப்பது போல

நான் கபாலியர்களைப் போல

Write To Author

About ME

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book.

Get In Touch

Address: 262 Milacina Mrest.

Phone: +91 3333 6789.

Tax: +91 3333 6789.

Email: support@kr.com

Website: www.kr.com