அமெரிக்காவிலிருந்து தோழி ஒருவர் அழைத்திருந்தார். ‘குவாரண்டைன், சலிப்பா இருக்கு, தோழி. என்னையே என்னால தாங்கிக்கமுடியல’, என்றார். நான் சொன்னேன், ‘தன்னையே தன்னால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை என்றால், தனக்குத்தானே இவ்வளவு சலிப்பான ஒருவராக இருக்கிறோம் என்றால், இப்படியான ஒருவரைத்தானே சமூகம் இவ்வளவு காலம் தாங்கிக்கொண்டது. சமூகத்திற்கு நம்மைத் தாங்கிக்கொள்வது எவ்வளவு சிரமமாக இருந்திருக்கும்!’, என்றேன் நகைச்சுவையாக. ‘உண்மை தான்’, என்று சிரித்தார்.
தோழி என்பதால் இந்த நகைச்சுவையை நகைச்சுவையாகவே எடுத்துக்கொண்டார். ஆனால், அதில் நகைச்சுவை இல்லை. உண்மை இருக்கிறது. எப்பொழுது என்னை முதன்முதலில் சந்தித்தீர்கள் என்றொரு விடயம் முகநூலில் உருள்கிறது. எப்பொழுதும் நாம் சீரியசாக இருக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால், தனிமை தான் ஒருவரின் எல்லாமே என்பதை உணர்வதற்கு இன்னும் ஒரு நூற்றாண்டிற்கு இந்த வாய்ப்பு கிட்டாது என்று நினைக்கிறேன்.
எப்பொழுதுமே தனிமையான வாழ்வைத் தன் வாழ்வாகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட என் அம்மாவிற்கு இந்த வாழ்க்கை முறை சிரமமாக இல்லை. தனிமை, ஆளுமையின் ஓர் அழகான பகுதி. மனிதத்துவத்தின் அர்த்தமுள்ள ஒரு பகுதி.
நம் நவீன வாழ்வை, ஒருவரிடம் இருந்து ஒருவர் தப்பித்து ஓடும் வாழ்வாகவே நினைத்துச் சிரித்துக் கொள்வேன். தெரிந்தவர்களைத் தெருவில் பார்த்தாலே எத்தனை முறை ஒளிந்து கொண்டிருக்கிறோம். இப்பொழுது தான் புரிகிறது. எல்லோரும் தன்னிலிருந்தே ‘தான்’ தப்பித்து வெருண்டு ஓடிக் கொண்டிருக்கின்றனர் என்று.
தனிமையில் ஒருவர் தனக்குத்தானே செய்து கொள்ள வேண்டிய, தன்னைத்தானே நேர்த்தியாக்கிக் கொள்ள அற்புதமான ஆயிரம், ஆயிரம் விடயங்கள் இருக்கின்றன என்று நம்புகிறேன். அவை என்னென்னவென்று இங்கே நான் சொல்லவிரும்பவில்லை. ஏனெனில், ஒவ்வொருவருக்கும் அவை மிகவும் மாறுபட்டவை, தனித்துவமானவை.
நிறைய பேரை நிறைந்த தனிமையினூடே நான் பார்த்திருக்கிறேன், அதிசயித்திருக்கிறேன். தனிமையில் என்ன செய்வது ஒருவர் என்று கண்டுகொண்டுவிட்டால், தனிமையை என்ன செய்வது என்று கண்டுகொண்டு விட்டால் உலகமே அழகாகிவிடும். மாறாக, தனிமையில் நம்மால் வன்மத்தை உற்பத்தி செய்யமுடியாமல் தான் நாம் கூட்டத்தைத் தேடுகிறோம். வன்மத்தை, வன்முறையை, வெறுப்பைச் செயல்படுத்தக் கூட்டம் வேண்டும், மந்தை வேண்டும். கூட்டாளி வேண்டும்.
பொழுதைப் போக்குவது என்ற ஒன்றே இல்லை. பொழுதைக் கொண்டாடுவது என்று வேண்டுமானால் சொல்லலாம். எவ்வளவு மக்கள் இன்றைய பொழுதை, காலத்தை, சூரியனைக் காணும் வாய்ப்பின்றி என்றோ சென்றுவிட்டனர்.
தனிமையில் நம்மை முழுமையாகப் பொறுமையாகக் கண்டுணர்வதற்கு, எப்பொழுதோ நாம் செய்யவிரும்பிச் செய்யமுடியாமல் போனவற்றை மீள் யோசனை செய்வதற்குத் தகுந்த காலம். இது வரை நாம் புரிந்துகொண்டிருந்த உலகம், சிந்தனை, தத்துவம் எல்லாம் தவிடுபொடியாகி இருக்கிறதே, இது ஏன் என்று கண்டுணரவும் ஒரு காலம்.
நாம் இதுவரை வாழ்ந்து வந்த வாழ்க்கை முறை, மருத்துவ நம்பிக்கைகள், உணவு முறை, உடலின் ஆரோக்கியம் பற்றிய கோட்பாடுகள், மேலைநாட்டின் சர்வாதிகாரம் என்று எல்லாமே நொறுங்கிப்போயின இன்று. மறுசுழற்சிக்குத் தயாராகி இருக்கிறது பூமி.
சற்றும் எதிர்பாராத ஒரு காலகட்டத்தில் கண்ணுக்குப் புலனாகாத ஒரு கிருமி எப்படி இது வரை வாழ்ந்து வந்த நம் வாழ்வையெல்லாம் கற்பனையானதாக்கி நம்மை இயல்பு நிலைக்குக் கொண்டுவந்திருக்கிறது. இந்நிலையில், சலிப்பை நாம் கொரோனாவைப் போன்றதொரு தொற்றுநோயாக்காது இருப்போம். பெரியார் சொல்வார், ஓய்வும் சலிப்பும் தற்கொலைக்கு நிகரானவை என்று.
பகடியாக, குடும்பம் என்பது எவ்வளவு பெரிய சிறை என்பதை உங்களில் பலர் உணர்ந்திருக்கக் கூடும். ஆனால், இன்று முதல் குவாரண்டைன் காலம் முடிவுக்கு வந்துவிட்டது என்று அறிவித்துவிட்டால், ‘யாருக்கு வேண்டும் இந்த சுதந்திரம்!', என்று மதிலுகள் வைக்கம் முகமது பஷீரைப் போலவே அலறுவேன் நான்.
ஓவியம்: ஜார்ஜியா ஓ கீஃப்

Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.
Enquiries welcome for poetry, translations, film, and literary events.
Site: Kutti Revathi