தமிழ் மருத்துவம்

தமிழ் மருத்துவம்

22 Mar 20
Article


சமூகத்தின் பொறுப்பான இடங்களில் பதவிகளில் இருப்பவர்கள் கூட, இந்த நெருக்கடியான காலகட்டத்தை வாய்ப்பாகக் கொண்டு, தமிழ் மருத்துவம், மரபு மருத்துவம், மாற்று மருத்துவம் குறித்து மோசமான இழிவான பதிவுகளை இடுகிறார்கள்.

ஒன்று, நூற்றுக்கணக்கான தமிழ் மருத்துவ நூல்களில் ஒன்றைக் கூட இவர்கள் வாசித்து இருக்கமாட்டார்கள்.
இரண்டு, சமூகத்தில் மாற்று மருத்துவம் என்ற பெயரில் ஓங்கிய கருத்துகளைப் பேசுபவர்களையும், பொத்தாம் பொதுவான கருத்துகளை முன்வைப்பவர்களையும் இந்தத் தமிழ் மருத்துவத்துடன் இணைத்து எல்லோரையும் பொதுமைப்படுத்தும் மந்தை மனநிலை.
மூன்று, ஆங்கில மருத்துவத்தின் எந்தச் சமூகச் சீர்கேட்டையும் இப்படி பொதுமைப்படுத்தும் துணிவை இன்னும் அடைவதில்லை. ஏனெனில், அவர், டாக்டர். இவர், மருத்துவர்.
நான்கு, தமிழ் மருத்துவத்தின் அடிப்படையான இயங்கியல் எவ்வளவு அறிவியல்பாற்பட்டது என்பதை அறியாத மூடத்தனத்தை வெளிப்படுத்துவதில் எந்தச் சமூக இழிவையும் சுய அவமரியாதையையும் உணர்வதில்லை.
ஐந்து, இதே தமிழ் மொழி என்றால் நம் பிழைப்பிற்கும் சமூக கெளரவத்திற்கும் உரிய இடங்களில் உயர்த்திப் பேசுகிறோம். இந்த பிழைப்பின் மதிப்பும், கெளரவமும் தமிழ் மொழியின் ஆழமான அறிவியல் சார்ந்த அறிவுமரபு இல்லாமல் வந்ததில்லை என்பதை நாம் எங்குமே உணர்வதில்லை.
ஆறு, முதலாளித்துவ சந்தையின் வைரசே நவீன மருத்துவச்சிந்தனை தான். நாமெல்லோரும் பரிசோதனை எலிகள்.

இல்லையென்றால், தயாரிப்பில், உருவாக்கத்தில் இன்றும் மக்களிடையே புழக்கத்தில் இருக்கும் மருத்துவம் பற்றி, ஒவ்வோர் ஆண்டும் தமிழக அரசாலேயே அத்தனை நீண்டகால கல்வித்திட்டத்துடன் உருவாக்கி அனுப்பப்படும் சித்த மருத்துவர்களான தமிழ் மருத்துவர்கள் பற்றி இழிவாகக் கொஞ்சமும் கூச்சமின்றி, குற்றவுணர்வுமின்றிப் பேச இயலுமா?

இங்கே, நவீனத்தின் பெயரால் எந்தச் சமூகச் சீர்கேட்டையும் செய்யலாம். ஏனென்றால், வெள்ளைக்காரன் பொய்சொல்லமாட்டான் என்பது போன்றது தான் இதுவும்

Write To Author

About

Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.

Get in touch

Enquiries welcome for poetry, translations, film, and literary events.

Site: Kutti Revathi