திருவனந்தபுரத்தில் நிகழ்ந்த Kazhcha திரைப்படவிழா!

திருவனந்தபுரத்தில் நிகழ்ந்த Kazhcha திரைப்படவிழா!

14 Dec 19
Article


திடீரென்று தான் அழைத்தார்கள், KAZHCHA திரைப்படவிழாவில் கலந்து கொள்ள. திரைப்படங்களைப் பார்வையாளர்களுடன் சேர்ந்து பார்த்துத் தரமிடும் குழுவில் கலந்து கொள்ள முடியுமா என்று கேட்டார்கள். நான்கு நாட்கள், பன்னிரெண்டு படங்கள். ஏற்கெனவே, அனுப்பப்பட்டிருந்த முப்பது படங்களில் இருந்து பன்னிரெண்டு படங்களைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தார்கள், இயக்குநர்கள் சணல் குமார் சசிதரனும், ஜிஜு ஆண்டனியும் உள்ளிட்ட குழு. சவாலான பணி. ஏற்கெனவே இளம் வயதிலிருந்தே ஒரு நாளுக்கு ஐந்து திரைப்படங்கள் பார்த்த வழக்கம் உண்டு என்றாலும், அரங்கில் தொடர்ந்து திரைப்படங்கள் பார்க்கும் வழக்கத்தை நிறுத்திக் கொண்டேன். காரணம், அது ஒரு போதை. இன்னொன்று, சிறகு திரைப்படத்தின் பணிகள் என் முழு இருப்பைச் சென்னையில் கோரின.

நிகழ்விற்கு ஒத்துக்கொண்டதற்குப் பல காரணங்கள். என்றாலும், முதன்மையான காரணம், இக்குழு கொண்டிருக்கும், தரமான நியாயமான சினிமாவின் மீதான முழு நம்பிக்கையும் சமரசமின்மையும். இச்சமரசமின்மையை, தம் படங்களை ஒப்படைக்கும் இயக்குநர்களிடமும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை நேரடியாகக் காண முடிந்தது. Biriyani, Paraiah, Humania, Aamis, Gamak Ghar, Domestic Dialogues, Bitter Chestnut, Ka Kha Ga Gha Nga, Nimtoh, Eeb Allay Ooo, Runanubandha, Oru Rathiri Oru Pagal பன்னிரெண்டு படங்கள் கலந்து கொண்டன. பெரும்பாலும், இளம் இயக்குநர்கள், முதல் முறை இயக்குநர்கள், வெகு குறைந்த தயாரிப்புச் செலவில் தயாரிக்கப்பட்ட படங்கள், பரிசோதனைப் படங்கள் இன்றைய இந்தியாவின் மனநிலையை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தன.

திரைப்படங்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில், ஜானி, சஞ்சய் மற்றும் என்னுடன், பழங்குடிப் பெண்ணான பதினாறு வயது மைதிலியும் சேர்ந்து கொண்டது சிறப்பாக இருந்தது. கலைச் செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டிருந்த அவர், அதற்கான பயிற்சிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருந்த அவர், எங்களுடனேயே சேர்ந்து எல்லாப்படங்களையும் பார்த்தார். எந்தப்படத்திலும் இடைவேளை இல்லை. ஒவ்வொரு படத்திற்குப் பின்பும் அப்படம் தந்த அனுபவத்தைச் செரித்துக் கொள்ளமுடியாத கனம் இருந்தது. மொத்தப்படங்களையும் தொகுப்பாக பார்த்து வந்தது, இன்றைய சமூகத்தின் குறுக்குவெட்டுக் காட்சியைக் கண்டு களத்தது போல இருந்தது. சில படங்கள், சமூகச்சிக்கலுக்கு ஆண் பார்வையில் முன்வைக்கும் தீர்வுகள் ஆணாதிக்கச் சிந்தனை உடையவையாக இருந்தாலும், அதே சமயம் இன்னொரு பக்கத்திலிருந்து பெண்களின் இருப்பைக் கனிவுடன், பரிவுடன் நோக்குகிற ஆண் இயக்குநர்களின் முதிர்ச்சியையும் உணரமுடிந்தது. ஆனால், காட்சி ஊடகமான சினிமா என்பதில் எங்கெங்கும் புரையோடி இருக்கிற வன்முறை உணர்வையும் உணரமுடிந்தது.

படங்களைத் தேர்ந்தெடுப்பது வழக்கம் போலவே சவாலான ஒன்றாக இருந்தாலும், மகிழ்ச்சியான ஒன்றாகவும் புத்தெழுச்சி தருவதாகவும் இருந்தது. எங்கள் முடிவில் யாருடைய குறுக்கீடும் இல்லாமல், நான்கு நாட்கள் திரைக்கலையின் பல்வேறு படைப்புகளின் ஆழ அகலங்களை உணர்ந்து வரும் அனுபவமாகவே இருந்தது. மனிதம் நோக்கிய தீவிர திசையையும் சில படங்களில் உணரமுடிந்தது. இறுதியில், படத்தின் சமூக அக்கறையையும், அது முன்வைக்கும் நவீன புரிதலையும், செயல்படுத்திய பாணியையும், அந்தப்படம் முன்வைக்கும் அரசியலையும் அழகியலையும், சமரசமின்மையையும் கருத்தில் கொண்டு Riddhi Majumdar என்ற வங்காள இயக்குநரின் “Pariah”, (Out Caste) என்ற படத்தை வெற்றிப் படமாகத் தேர்ந்தெடுத்தோம். விருதை அறிவித்த பின்பு, அந்த விழாவில் போட்டியில் பங்கெடுத்த பிற இயக்குநர்களே எங்களிடம் வந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தப் படமே அவர்களின் சிறந்த படமும் என்று கூறியது மகிழ்ச்சியளித்தது. ஒட்டுமொத்த விழாவையும் கண்டுணர்ந்து வெளியே வரும் போது, உண்மையாகவே சமூகத்தின் ஒட்டுமொத்த மனநிலையையும் பிரதிபலிப்பதாகவே ஒரு திரைப்படவிழா இருக்கிறது. Kazhcha - வில் கலந்து கொண்டது நரம்புகளுக்கெல்லாம் கலை உரமேற்றியது போல் இருக்கிறது.

ஒட்டுமொத்த விழாவின் எளிமையும், கலந்துகொண்டோரின் சமரசமின்மையும் கலைஞர்களின் தீராப்போராட்ட உணர்வும் சொல்லில் அடங்காதது. அதுவே, மனதில் ஆழமாக எப்பொழுதும் பதிந்திருக்கும் என்று தோன்றுகிறது. அடுத்த ஆண்டும் இவ்விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று இருக்கிறேன், ஒரு பார்வையாளராக! நீங்களும் Kazhcha Film Forum - யைப் பின் தொடருங்கள்!

 

Write To Author

About ME

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book.

Get In Touch

Address: 262 Milacina Mrest.

Phone: +91 3333 6789.

Tax: +91 3333 6789.

Email: support@kr.com

Website: www.kr.com