என்றும் சொல்லலாம்

என்றும் சொல்லலாம்

13 Nov 19
Poems


சினிமாவில் எதுவுமே மரித்துப் போவதில்லை

ஏன் அப்படியான எவருமே கூட

உண்மையில் மரணத்திற்குப் பின் தான் 

அவர்கள் பித்தமாய்க் கொண்டிருந்த கனவுகள் வழியாக 

நம்மை அதிகமாய்ப் பீடித்துக் கொள்கின்றனர்

சினிமாவைக் கனவுகளாக்கி யாருமே செத்துப்போவதில்லை

அசையும் பிம்பங்களிடையே அவர்கள் அன்றாடம் வாழ்கின்றனர்

அருண் மொழி போல காற்றிலே இறகாய்த் திரிந்து வாழ்ந்தனர் 

என்றும் சொல்லலாம்

மற்றோரெல்லாம் தம் மூச்சடக்கித் 

தாமே தமக்குள்ளேயே மூழ்கிப்போய்விடுகையில்

அசையும் பிம்பங்கள் காலமாய்ப் பெருக்கெடுக்கும் நதியில்

விசையுடன் நீச்சலிடுவது ஒரு பலம் ஒரு வலிமை ஒரு பித்தம் 

ஒரு சூரியன் உறங்காத இரவு உறக்கம் தேவையில்லா இரவு

ஒரு பெண் தேவையில்லா இரவு 

பெண்ணுக்கு ஆண் தேவையில்லா இரவு 

எல்லாம் அவர்கள் செய்த விளைச்சல்கள்

முடிவுறாத ஒரு கவிதையும் அதுவே

சினிமாவின் நதி தன்னைக் காலமாக்கிக் கொண்ட பின்

எத்திசையில் எங்கே பாய்கிறது என்பதை அதில்

நீச்சலடித்துக் கொண்டிருப்பவரினும

யாரும் அதைக் கணிக்க முடியாது கரையேற முடியா குளியல்

சினிமாவிற்கு வெளியே எல்லாம் பொய் பொய்ப் பிம்பங்கள்

பாயும் பிம்பங்களிடையே வாழக் கிடைத்தவன்

தன் ஒவ்வொரு நொடியையும் யாரிடமும் கையளிக்காது 

மிச்சமில்லாது வாழ்ந்து செல்கிறான்

எடிட்டர் லெனினிடம் காலம் ஒரு பெருநதியாகி ஓடுவதையும்

ஒவ்வொரு நாளும் ஒரு சூரியனை அதிலிருந்து  

அவர் மேலே எழுப்பி வருவதையும் கண்டிருக்கிறேன்

பித்தம் மகத்துவமான கவர்ச்சி புன்னகை வெளிச்சம் 

அவமானம் உணரா பெரு வாழ்வு 

மிகை உணர்ச்சி மின்னும் செதில்கள்

இன்னும் சொல்லப்போனால்

ரித்விக் கட்டக்கின் ஒளிச் சிதறல்கள் போல வாழ்ந்த அவர்களின் துணிச்சலின் ஒரு சிலிர்ப்பைக் கூட வேறு எவரும் உணர்வதில்லை

நகரத்தின் பரபரப்பிற்குத் தன் பாதங்களை இழக்காமல்

தன் பாதையில் திசைகளை வரைந்து கொண்டவர்கள்

வெற்றி தோல்வி எந்த இலக்கணத்திற்கும் தம் வாழ்வை இழக்காமல்

மூச்சை இழக்காத ஒரு கவிதையைப் போல வாழ்ந்து தீர்க்கின்றனர்

மனதிலும் வெளியிலும் பாயும் பிம்பங்களின்காலப் பாய்ச்சலுக்கு

ஆயுள் ஏது மரணம் ஏது 

என்றும் சொல்லலாம்

 


புகைப்படம்: ஆண்ட்ரியாஸ் ஃபைனிங்கர்

Write To Author

About

Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.

Get in touch

Enquiries welcome for poetry, translations, film, and literary events.

Site: Kutti Revathi