காலம் கொஞ்சம் நீளமாகியிருக்கிறது. இல்லை, நாம் அதை நீட்சியடையச் செய்திருக்கிறோம், தீநுண்மியால். இப்பொழுது நம் கையில் நாள் கணக்குத் தெரியாத காலம். எல்லாவற்றையும் எதையும் மெல்ல செய்யமுடியுமாவென்று பார்க்கிறேன். அதிகாலையில், செந்தில்குமார் நடராஜனின் ஒரு கதையை வாசித்தேன். ஒரு பித்த நிலையில் புனைவில் இயங்கிக்கொண்டிருக்கிறார். கவிதைகளையும் கதைகளையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து மென்று விழுங்கத் தரும் அனுபவம் எங்களிடையே உண்டு. அதைத்தாண்டி, அதே உற்சாகத்தில் பாப்லோ நெரூதாவின் ஒரு கவிதையை மொழியாக்கம் செய்தேன். அச்சு அசல் இந்த கொரோனா தருணத்திற்காகவே எழுதிய கவிதை போல் இருக்கிறது. இல்லை, இத்தருணத்திற்காகவே எழுதிய கவிதை தான். கவிஞன் தான் எல்லா காலங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அல்லது, வாழ வேண்டியிருக்கிறது. பின், சீனி எழுந்து வந்து உஸ்தாத் அமீர் கானை இசைக்க விட்டார். பின் இந்தத் தனிமையும் மெளனமும் அமைதியும் விபாசனா அனுபவத்தைக் கொடுக்கின்றன. இன்னும் இன்னும் மெதுவாக வாழவேண்டிய காலம் வந்தாலும் நல்லது தான். பின், சிறிய அளவில் மருத்துவம் போல ஒரு சமையல். எனக்கும் ரிஷிகாவிற்கும் மட்டும். பின், ஒரு நகைச்சுவை அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவென்றே தயாரிப்பாளரைச் சந்தித்துக் கண்ணில் நீர் கொப்பளிக்க நீளமாய் வெடித்துச் சிரித்து வந்தோம். அடுக்கடுக்காய்ப் புத்தகங்கள். மீள்வாசிக்கவென்றே போர்ஹேயும் பிரமிளும் புதுமைப்பித்தனும். The Mirror of Ink கதையை ஒரு தோழரிடமிருந்து வாங்கி மீண்டும் வாசித்தாயிற்று. இடையிடையே, வாசிப்பைத் துண்டித்துவிட்டு எழுதுவதற்கான மூர்க்கமான இச்சை. அதன் இடையிடையேயும் வாட்ஸ் அப் அழைப்புகளும் உரையாடல்களும், கவிதை குறித்தும், நூல்கள் குறித்தும், எல்லையிலா வாழ்வு குறித்தும். இந்த இடைவெளியில் நூல்கள் எவ்வளவு அதிகமாக நம்மை ஆக்கிரமித்து இருக்கின்றன என்பதை உணர்வதைப் போல் ஒரு நாள் இது. இன்னும் கொஞ்சம் எல்லாம் தூரதூரமாய்ச் சென்று விட்டால் ஒரு சுற்று வாசிப்பையும் எழுத்தையும் நுகர்ந்துவிட்டு வரலாம். காலாற நடந்து மலையேறிவிட்டு வருவது போல. புதியதொரு கால இயந்திரத்தில் ஏறிக்கொண்டது போல. அவ்வளவு காலம் நம்மிடம் இருக்கிறது.
ஓவியம்: The Persistence of Memory
Salvador Dali

Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.
Enquiries welcome for poetry, translations, film, and literary events.
Site: Kutti Revathi