கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

16 Mar 20
Article


வைரசுக்கு நிகர் வைரஸ் தான். பாக்டீரியாக்களைப் போன்று அவ்வளவு எளிதாக வைரஸ்களைக் கொன்றுவிட முடியாது. அவற்றின் மாதிரியால் தான் வைரசுகளைப் பொதுவாகக் கொன்றழிப்பது. மனித இன வரலாற்றில் காலந்தோறும் நிறைய வைரசுகள் தோன்றிப் புகழ்பெற்றிருக்கின்றன, மனித இனத்தை மிரட்டியிருக்கின்றன. ஹெச் ஐ வி போல. உயிரிகளில் ஓர் உருவகம் போன்றது தான் வைரஸ். ஓர் உயிருக்குள் சென்று தன் பல பிரதிகளை உருவாக்கிக்கொள்ளும் வீர்யம் கொண்டது. தன்னந்தனியான ஓர் உயிரியாகத்தான் செயல்பட முடியாதே தவிர ஓர் உயிர் மீது ஏறி உட்கார்ந்து கொண்டால், தன் இனம்பெருக்கி வாழ எல்லா வாய்ப்பையும் எடுத்துக்கொள்ளும் ஒரு நவீன உயிரி என்று தான் சொல்லவேண்டும். மரபுப்பண்புகளுக்குக் காரணமாக இருக்கும் ஓர் உயிர்மத்தைத் தன்னகத்தே கொண்டது. ஆகவே, அதன் மரபார்ந்த கட்டமைப்பு அறிந்து போலியான அதே மரபார்ந்த கட்டுமானத்தொகுதிகளைக் கொண்டு வேண்டுமானால் இந்த வைரசுகளைத் தகர்க்கலாம். ஓர் ஆயுதத்தயாரிப்பு பாணியில் இந்த வைரசுகளைக் கொல்லும் வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும். இது மாபெரும் அறிவியல் துறை.

இம்மாதிரியான வைரசுகளின் செயல்பாடுகளைப்பற்றி அறிந்துகொள்வது போர்ஹேசின் கதைவெளிக்குள் நுழைவது போன்றது. இவற்றைக் கையாண்டு வெல்வது என்பதும் உலகமயமான ஓர் அறிவார்ந்த செயல்பாடாகும். இம்மாதிரியாக புதிது புதிதாகத் தோன்றி அச்சுறுத்தும் வைரசுகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாது, உடலின் வலிமை மற்றும் எதிர்ப்புசக்தியை நிலைப்படுத்திக்கொள்வதே போதுமானது என்று தமிழ்மருத்துவர்களான சித்த மருத்துவர்கள் அந்நாளிலேயே வலியுறுத்தியிருக்கின்றனர். உடல் நலன் குன்றியோரின் முதுகில் தான் ஏறி உட்கார்ந்து கொண்டு தம் அதிகாரத்தைக் காட்டக் கூடியவை இத்தகைய வைரசுகள். உலகமெங்கும் இப்படியாகத் தோன்றும் நவீன வைரசுகளைக் கண்டு அச்சுறாத மருத்துவ முறைகள் எப்பொழுதும் புழக்கத்தில் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.

நம்முடைய நாட்டின் முக்கியமான பிரச்சனை என்பது, தூய்மையின்மை தான். மற்ற மேலை நாடுகளை ஒப்பிட்டுக் கூட நான் இதைக் கூறவில்லை. தூய்மை செய்வதை, தூய்மையாக வைத்திருப்பதைத் தாழ்வாகக் கருதுவதும், அதைச் செய்ய துப்புரவாளர்கள் இருக்கிறார்கள் என்ற அடிமை மனநிலையும் தான் நாம் அழுக்குகளுக்கு இடையிலேயே வாழப்பழகிக் கொள்வதற்குக் காரணம். இந்த அழுக்கு தான் வைரசைப் பரப்புமோ என்ற எண்ணம் மக்களிடத்தில் இன்று அதிகமாய் இருக்கிறது.

Write To Author

About

Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.

Get in touch

Enquiries welcome for poetry, translations, film, and literary events.

Site: Kutti Revathi