மருத்துவர் பிரியங்கா வன்புணர்வுக் கொலையும்
சமூகத்தின் மந்தை மனநிலையும்!
‘ஜல்லிக்கட்டு’, என்ற மலையாளத் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு நண்பர் ஒருவரிடம் உரையாடிக்கொண்டிருக்கும்போது சொன்னேன், ‘மனிதன் தனியாக இருக்கும்போது கூட அவனுடைய நல்ல தன்மைகளைத் தொடர முடிபவனாக இருப்பான். ஆனால், நான்கு பேருடன் சேர்ந்து ஒரு மந்தையாகிவிட்டால், குழுவாகிவிட்டால் போதும் எல்லா மிருகத்தனங்களும் வெளிப்பட்டுவிடும்’, என்று.
ஜல்லிக்கட்டு படத்தில், எருமையைத் தேடிச் செல்லும் கூட்டம் ஒரு கட்டத்தில் தம் அடிமன விடயங்கள் எல்லாம் வெடித்துக் கிளம்ப ஒரு காட்டுமிராண்டித்தனமான வேட்டைக்காரர்களாக மாறுவார்கள். இதே மனநிலை தான், பெண்களை வன்புணர்வு செய்வதிலும் மனித மந்தை இயங்குகிறது எனக்குத் தோன்றியது. அந்தப்படம் பார்த்துவிட்டுத் திரும்பும்போதும், இப்படியான குழு வன்புணர்வு மனநிலையொட்டிய சமூகச் சம்பவங்கள் மனதில் தோன்றித் துன்புறுத்திக் கொண்டே இருந்தன.
வாச்சாத்தி நிகழ்வை மனதில் வைத்து தான் இதைச் சொன்னேன். ‘நிர்பயா’, விடயத்திற்கு இணையான நிகழ்வுகள் இந்தியத் திருநாட்டில் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. மருத்துவர் பிரியங்கா நிகழ்விற்குப் பின் நேற்று இரவு முழுக்க உறக்கமில்லை. இதை யாரிடமாவது உரையாட வேண்டும் போல இருந்தது. யாரிடமாவது பேசினால் மனம் ஆறுதல் அடையும் போல் இருந்தது. ஆனால், எல்லோரும் இதே கொந்தளிப்பில் தான் இருந்தனர்.
பெண்ணைக் கூட்டமாய் வன்புணர்வு செய்து கொலை செய்யும் கும்பலுக்கு, தாம் சட்டத்தின் பிடியில் சிக்கிக்கொள்வோம், தண்டனை பெறுவோம், சிறை செல்வோம் என்பது தெரியாததல்ல. ஆனால், அதில் இயங்கும் குழு மனநிலையும் அப்பொழுது வெளிக்கிளறிவரும் மிருக மனநிலையும் தாம் வன்புணர்விலும் கொலையிலும் ஈடுபடுத்துகிறது. அந்த மனநிலை தான் அவர்களை வெல்கிறது.
மதம், சாதி, பாலியல் விடயங்கள் எல்லாமே அடிமனதில் உறங்கிக்கிடக்க, இது போல் சுவிட்சைத் தட்டினால் அத்தனை மிருகத்தன்மைகளையும் கொண்டு தாம் மனிதர்கள் தம்மை வெளிப்படுத்திக்கொள்வார்கள் போலும்.
இந்த மனநிலையை பல சமயம் என் வாழ்விலும் பொது வாழ்விலும் உணர்ந்துள்ளேன். தனியாக இருக்கும்போது எவரும் நல்லவர் போல. நினைவில் மட்டுமன்று, வாழ்விலும் மிருகங்களாய் வளர நம் சமூகம் முற்றிலும் தயாராகிவிட்டது. நாம் செய்யவேண்டியது என்ன? எல்லோரும் பதறிப்போகிறோம், இதயம் சில்லிட்டுப்போகிறோம். ஆனால், உண்மையில் நாம் செய்யவேண்டியது என்ன?
ஆண்கள் தாம் இதில் களமிறங்கி வேலை செய்யவேண்டும் என்று தோன்றுகிறது. அதிலும், பெண்ணுரிமைகள் பற்றிய விழிப்புணர்வு கொண்ட ஆண்கள், தம் சக ஆண்கள் இப்படியான இழிவான செயல்களில், கொடூரமான செயல்களில், மானுடமற்ற செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க உழைக்கவேண்டும்.
இல்லையெனில், இத்தகைய வன்புணர்வு கொலைச் செயல்களில் நமக்கும் பங்கு இருக்கிறது, உங்களுக்கும் பங்கு இருக்கிறது என்று தான் அர்த்தம். இந்தக் குற்றவுணர்வு தான் என்னையும் நேற்று இரவெல்லாம் வாட்ஸ் அப்களில் செய்தியாக்கிக் கொந்தளித்த பெண்களையும் நண்பர்களையும் தூங்கவிடாமல் செய்தது.
இந்தியாவின் எல்லா நாட்களும் ஒரே நாள் போல தொடர்கிறது. எவருடைய பாதுகாப்பிற்கும் உறுதியில்லை. அரசு இயந்திரம் சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டு வரும் என்று காத்திருக்காது, நம் பாதைகளையும் நம் சூழல்களையும் நம் பெண்களையும், நாம் தான் பாதுகாக்க முன்வரவேண்டும். வன்புணர்வுக் கொலை என்பது அந்த ஜல்லிக்கட்டு போலவே மந்தையாக இயங்கும் காட்டுமிராண்டித்தனம் தான்!
இந்த மந்தை மனநிலையிலிருந்து நாம் வெளியே வரவேண்டும், நண்பர்களே!

Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.
Enquiries welcome for poetry, translations, film, and literary events.
Site: Kutti Revathi