காது

காது

08 Oct 19
Stories


(சில ஆண்டுகளுக்கு முன் ஆனந்த விகடனில் வெளியான சிறுகதை. ஆணவக்கொலை பற்றிய கதை)

வீட்டின் முன்னால் இருக்கும் வாகை மரத்தில் அடைந்திருந்த காகங்கள் கலைய யாரும் எதிர்பாராத காலையில் அம்மா வாசலில் வந்து நின்றாள். வந்தது முதலே ஏதும் பேசாமல் அல்லது குறைந்த அசைவுகளால், வார்த்தைகளில் பதில் அளித்தபடியே உட்கார்ந்திருந்தாள். சேவியரின் அம்மா கொடுத்த புகைப்பட ஆல்பத்தைத் தொட்டுக்கூடப்பார்க்கவில்லை. சேவியரின் அம்மா, 'இவ்வளவு நாள் பிரிந்திருந்த துக்கமா இருக்கும். விடு. சேவியர், போய் நாட்டுக்கோழி வாங்கிட்டு வா. சூப்பும் கறியும் வச்சிருவோம்.' சேவியர் நிழலாய் வாசலில் மறைந்ததும் நான் அம்மாவின் அருகில் சென்று அமர்ந்தேன். அம்மா அதற்காகவே காத்திருந்தது போல், தன் பையிலிருந்து புத்தக அளவிலான நகைப்பெட்டி ஒன்றை எடுத்தாள். மரகதக்கல் பதித்த டாலருடன் தங்கச்சங்கிலியும் முத்து பதித்த கம்மல்களும் இருந்தன. அம்மாவை மகிழ்ச்சிப்படுத்த தங்கச்சங்கிலியை நானே எடுத்து அணிந்து கொண்டேன். எழுந்து சென்று கண்ணாடியில் பார்த்தேன். இந்த நெடிய தனிமை நிறைந்த நாட்களில் என் முகம் அம்மாவினுடையதைப் போலவே மாறி இருந்தது. திரும்பி அம்மாவைப் பார்த்தேன். கண்ணாடியில் தெரிந்த முகத்தை விட இளமையாகவும் இரத்தம் ஓட்டம் பொங்கும் செழுமையான களையுடனும் இருந்தாள். மீண்டும் அம்மாவிடம் வந்து உட்கார்ந்தேன். காதில் இருந்த தங்க வளையங்களைக் கழற்றிவிட்டு, முத்துக்கம்மல்களை மாட்டிவிட்டாள். சமையலறையில் பாத்திரங்களின் சத்தமும் சமைக்கத்தொடங்கும் அசைவுகளும் தெரிந்தன. நான் அம்மாவின் அருகிலேயே பேசாமல் உட்கார்ந்திருந்தேன். என் மீது இருளும், அம்மாவின் மீது ஒளியும் விழுந்து நான் அவளின் நிழல் என நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தோம்.

முதல் சந்திப்பில் எனக்கு சேவியரைப் பிடிக்கவே இல்லை. நூலகத்தின் புத்தகங்களை எடுத்துக் கொடுக்கும்போது, தேவைக்கு அதிகமாகச் சிரித்தான் என்று தோன்றியது. எப்படி எடுத்த எடுப்பிலேயே அயல் மனிதர்களிடம் அன்னியோன்யமாக இருக்கமுடியும் என்று தோன்றியது. அந்த ஹாலின் ஓரத்தில் இருக்கும் நாற்காலியில் அவன் உட்கார்ந்திருந்தால், அதிகமான அவசியம் இன்றி அவன் பார்வையில்படுவது போல் நடந்துகொள்ளவே மாட்டேன். அலுவலகம் மூன்று நாட்கள் தொடர்விடுமுறை. ஊருக்கு வரச்சொல்லி தங்கை வற்புறுத்தினாள். பேருந்து பதிவுசெய்து முழு இரவு பயணத்திற்குப் பின் ஊர்ப்போய்ச் சேர மறுநாள் காலை பத்து மணி ஆகிவிடும். அந்த வேளையில் ஊரில் மனதிற்குப் பிடிக்காத வெப்பக்காற்று வீசிக்கொண்டிருக்கும். வீட்டில் இருந்து பழகிவிட்டால், அதுவும் தங்கையுடன் ரகசியங்களைப் பேசி இருந்துவிட்டால் வீட்டிலேயே இருந்துவிடவேண்டும் என்று தோன்றிவிடும். அந்த ஆசையை அடக்கிக் கொண்டு வேகமாகக் கரைந்து விடும் இருநாட்களில் மீண்டும் அலுவலகத்திற்குக் கிளம்பிவரவேண்டும் என்பது அலுப்பாக இருக்கும்.

நாட்பட, ஊருக்குச் செல்வதின் சுவாரசியம் குறைந்து போனது. ஊரில் இருந்த ஒரே தோழியும் சென்ற மாதம் திருமணமாகிச் சென்றுவிட்டாள். இந்த மூன்று நாட்களைக் கடக்க சில நூல்கள் மட்டும் கையில் இருந்தால் போதும் என்று தோன்ற நூலகம் வந்தேன். சேவியர், பளிச்சென்று வெள்ளை சட்டையும், கன்ன மேட்டில் ஒளிவீசும் சிரிப்பும் என அமர்ந்திருந்தான். படர்ந்த காது. துல்லியமான சத்தத்திற்கும் தலையை நிமிர்த்திப் பார்ப்பான். என் கையில் இருந்த நூல்களை மேசை மீது வைத்துவிட்டு, அவன் பேசத்தொடங்கும்முன்னே அங்கிருந்து நகர்ந்து புத்தக அடுக்குகளை நோக்கி நடந்தேன். புத்தகங்களைத் தேடும்போது, சற்று தூரத்தில் இருந்தே, புத்தக அடுக்குகளுக்கு இடையே அவனையே தேடித்தேடிப் பார்த்தேன். மொபைலில் யாரிடமோ மரியாதையான அசைவுகளுடன்  பேசிக் கொண்டிருந்தான். சற்று நேரம் கழித்து, மேசைக்கு வரும் புத்தகங்களின் மடிந்த காது மடல்களை நிமிர்த்திக் கொண்டிருந்தான். அவன் அசைவுகள் என்றும் இல்லாத அளவிற்கு வசீகரமாகவும் மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டும்படியும் இருந்தன. நூலகத்திலேயே  அமர்ந்து வாசிக்கும் சாக்கில், ஒரு நூலை கையில் எடுத்துக்கொண்டு எதிரே இருந்த நீளமேசையின் மூலைப்பகுதியில் இருந்த நாற்காலியில் வந்து அமர்ந்தேன். படிக்க மனம் ஓடவில்லை. அவன் அசைவுகளையும் அவன் சிரித்துப் பேசுவதையும் நூலகத்திற்கு வருபவர்களை விசாரிக்கும்  துடிப்பான முறைகளையும்  என் மனம் ஓவியங்களாகப் பதிந்து கொண்டே இருந்தன. என்னிடம் சிரித்துப் பேசியது போலவே தான் எல்லோரிடமும் அவன் சிரித்துப் பேசினான்.  அவன் முழு நிலவாய் , கள்ளங்கபடமற்றுச் சிரிப்பதைப் பார்க்கும்போதெல்லாம் என் உடலெங்கும் சுண்டிவிட்டாற்போன்ற பேரின்ப உணர்வு படர்ந்து அடங்கியது. காதுமடலில் வெப்பம் பரவியது புதிய உனரவாய் இருந்தது. நூலைப்பதிவேட்டில் எழுதி பதிவு செய்துவிட்டு, கையில் எடுத்துக் கொண்டு வெளியே வர, கோடை மழை பெருஞ்சத்தத்துடன் வீசியது. புத்தகத்தைப் பாதுகாப்பதற்காக அதை மார்புடன் அணைத்தபடி, நூலகத்தின் வாசல்கூரையின் கீழ் ஒதுங்கி நின்றுகொண்டேன். அன்று, மழையின் பரவசப்பொழிவும் பார்க்கப் பார்க்கத் தீரவொண்ணாததாக இருந்தது.

என் அப்பா, ஒரு மகிழ்ச்சியற்ற மனிதராக இருந்தார். அப்பா என்னிடம் எப்பொழுது  கடைசியாகப் பேசினார் என்பது கூட நினைவில் இல்லை. பத்தா, பதினொன்றா, அல்லது பன்னிரண்டுவயதா.  அம்மாவிற்கு வலது காது கேட்காது. பிறப்பிலேயே குறைபாடு. அம்மாவின் மூத்த அக்காவிற்கு விசித்திரமான பழக்கம் இருந்ததாக அம்மா சொல்வாள். பக்கத்து அறையில் பேசுபவர்களை ஒட்டுக்கேட்பது, அல்லது யார் இரண்டு பேர் பேசினாலும் சற்று தூரத்தில் நின்று காதைக் கூர்மையாக்கி அவர்கள் பேசுவதை ஒட்டுக்கேட்டு சிரித்தபடியே இன்னொருவரிடம் சொல்வது. அம்மா, காது கேட்கும் மெஷின் அணிந்து கொள்வதற்கு வெட்கப்பட்டாள். அப்பா, அம்மாவுடன்  சிரித்துப்பேசி நான் பார்த்ததே இல்லை. அம்மாவிடம் வெறும் ஆணைகளை இடுவார். அம்மா, இயந்திரம் போல் ஓடியோடி அவர் ஆணைகளை நிறைவேற்றுவார். இதனாலேயே அம்மாவிற்கு காது அவசியமற்றுப் போனது. அம்மா, அப்பாவை விட சில விரற்கடை உயரம் அதிகம். என்றாலும், அம்மா கூன் விழுந்த நடையுடன் அப்பாவின் உயரத்தை விடத்தன்னை குறைத்துக்காட்டுவது போல் நடந்துகொள்வாள்.  சமீபத்தில் அப்பாவிற்கு இரத்த அழுத்தம் அதிகமாகி பக்கவாதம் தாக்கியது. அம்மாவின் ஓட்டங்கள்  தறியின் இன்னும் அதிகமான கதிக்கு மாறியது. இப்பொழுது, அப்பாவின் முறைப்பும் கையசைவுகளும் அம்மாவை இயக்கத் தொடங்கின. தங்கைக்கு அப்பாவைச் சுத்தமாகப் பிடிக்காது. அதனால், அவர் சம்பந்தமான எதையும் செய்யமாட்டாள். அவர் இருக்கும் பக்கம் கூடப் போகமாட்டாள். அம்மா அப்படி அடிமைத்தனமாக நடந்துகொள்வதற்காக எரிச்சலைக் காட்டிக்கொண்டே இருப்பாள். அம்மாவை அந்த எரிச்சல் துன்புறுத்தும் என்று நான் எத்தனைமுறை கண்டித்தாலும் அவள் பொருட்படுத்தமாட்டாள்.

சேவியரின் அம்மா வைத்திருந்த சூப்பையும் அம்மா குடிக்கவில்லை. சில நிமிடங்கள் அதையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். சோற்றில் கோழிக்கறிக் குழம்பை ஊற்றி விரலால் அளைந்து கொண்டே இருந்தாள். சேவியரின் வீட்டில் அப்படி அமைதி நிலவிப்பார்த்ததே இல்லை. வழக்கத்திற்கு மாறாக, சேவியரும் மெளனமாக இருந்தான். அவன் அருகில் சென்று, 'என் அம்மா வந்தது பிடிக்கவில்லையா' என்று கேட்டதற்கு, 'இப்படியெல்லாம் நான் யோசிப்பேன்னு எப்படி உனக்குத் தோனுதோ' என்பதையும் என் காதுக்கு மட்டும் கேட்கும்படிச் சொல்லிவைத்தான். பதில் சொல்லிவிட்டு நகர்ந்த அவன், மீண்டும் பின்பக்கமாக வந்து என் தலையைத் தன் இருகைகளால் பிடித்து, சமாதானமாய் கழுத்தில் முத்தமிட்டு நகர்ந்தான். அம்மா வீட்டில் இருந்த நேரம் முழுதும் மழைக்காலத்தில் உலர்த்த போட்டிருந்த துணி உலராமல் இருந்ததைப்போல கனத்துக்கிடந்தது. மாலையில் ஷாப்பிங் போகலாம் என்று கிளம்பிய அம்மாவை யாரும் தடுக்கவில்லை. 'நீயும் கூடப்பொறேல்ல' என்று என்னிடம் கேட்ட சேவியரின் அம்மாவிடம் ஒரு தாயின் பரிவு முழுமையாக வீசியது. சேவியர் அம்மா, ஒரு கார்ப்பரேஷன் பள்ளியில் ஆசிரியர். சேலையை மடிப்புக்குலையாமல் கட்டி இடதுபுறம் மார்பின் மீது அம்பேத்கர் புகைப்படம் ஒன்றை ஊக்கினால் குத்திதான் பள்ளிக்குச் செல்வாள். அவள் இன்முகத்தையும் திடமான மனதையும் எவரும் குலைக்காதபடிக்கு இன்பமும் நிறைவும் கொண்ட வாழ்க்கை என்று சொல்வாள். மாலையில் சேவியர் வீடு, இருபதுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவியர், மாணவர்களால் நிறைந்திருக்கும். அந்தத்தெருவில் இருக்கும் பள்ளி மாணவ மாணவியர் எல்லோரும் படிக்க வந்துவிடுவார்கள். அது ட்யூஷன் போல இருக்காது. ஒன்றாக இருந்து படிக்கும்போது, அலுப்பில்லாமல் படிக்கலாம் என்பது  தான் சேவியர் அம்மாவின்  திட்டம். சிலநாட்களில் படிக்கவும் மாட்டார்கள். கேரம் போர்டை வீட்டின் மத்தியில் வைத்து சிலர் விளையாடிக்கொண்டிருக்க, எல்லோரும் வேடிக்கை பார்த்து ஆரவாரித்துக்கொண்டிருப்பார்கள். சில நாட்களில் தொலைக்காட்சியில் ரஜினி படம் பார்ப்பார்கள். எப்பொழுதாவது, அம்பேத்கரைப் பற்றி நீளமாகப் பேசுவாள் சேவியர் அம்மா. அன்று கலைந்து செல்லும்போது எல்லோரின் கண்களிலும் இலட்சிய உணர்வு வீசும். 

ரங்கநாதன் தெருவிலும் பாண்டிபஜாரிலும் அம்மா எந்த நோக்கமுமின்றி அலைந்தாள்.  சில   பிளவுஸ் துணிகள் வாங்கினாள். வித்தியாசமான நிறங்களில் ஆர்வம் கொண்டவள்.  'அப்பா, ஒங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணிவச்சிடனும்னு நினைக்கிறாரு.'. 'நாங்க தான் பண்ணிக்கிட்டோமே அம்மா'. 'நம்ம ஊர்ல எல்லாரும் நீ எவனோடயோ ஓட்டிப்போயிட்டன்னு தான் பேசிக்கிறீங்க. அவங்க வாய அடைக்கனும்ங்குறாரு அப்பா'. 'எப்பவும் இல்லாத அக்கறை இப்ப என்னத்துக்கு. ஊர்ல நாலு பேரு நாலுவிதமா பேசத்தான் செய்வாங்க. எல்லாத்துக்கும் நாம காதுகொடுக்கனுமா. வனஜாக்காவ வரதட்சணை கேட்டு மாமியாரே கொலை பண்ணினாங்க. இதே ஊரு அத தற்கொலைன்னு நம்பவைக்கலையா'. 'நாளைக்குக் காலையில என்னோட ஊருக்கு வா. வர வெள்ளிக்கிழமை அவங்க எல்லாரையும் குடும்பத்தோட வரச்சொல்லு. ஊர்க்காரங்க முன்னாடி மாலை மாத்தி தாலி கட்டிக்க'. 'தாலியெல்லாம் கட்டிக்கமாட்டேன்'.  அம்மா தடுமாறினாள். 'என் கண்ணில்ல. அப்பா அவமானம் தாங்கமாட்டாரு.' சொற்கள் கிடைக்காத வேளைகளில் அம்மாவிற்கு கண்ணீர் சுரக்கும். 'அந்த மனுசன் உன் உசிர எடுத்துருவாருன்னு சொல்லு….வரேன்.' இப்படி திடீரென்று சம்பந்தமில்லாமல், பேசி, அம்மா என் பயணத்தை ஒழுங்கமைத்தாள். சேவியரின் தம்பி மொபைலில் அழைத்தான். 'எங்க இருக்கீங்க. நைட்டுக்கு வீட்டுல தான் சாப்பாடு. அம்மா, பரோட்டாவும் பாயாவும் செய்யுறாங்க.' 'வேண்டாம். ஷாப்பிங் முடிக்க நேரமாகும். இங்க ஹோட்டல்ல சாப்பிட்டுக்கிறோம்.' அம்மா, பன்னீர் பட்டர் மசாலா, பீஸ் மசாலா, ஆலு கோபி மசாலா என மெல்லிய குரலில் முழு மெனு கார்டையும் வாசித்தாள்.  மிக மெதுவாகச் சாப்பிட்டாள். ஒரு ஸ்பெஷல் மீல்ஸ், பாதாம்பால் சாப்பிட்டுமுடிக்கவும், 'ஆட்டோல போகலாம்' என்று சொன்ன என்னைத் தடுத்து, 'கடைசிபஸ் எதுன்னு பாரு. பஸ்ஸுலயே போகலாம்.' அவளுடன் இப்படி தனியே இருப்பது எனக்கு உடல் கனத்துப்போன்ற உணர்வைத் தந்தது.

மறுநாள் காலை, விடியும் முன்னரேயே கிளம்பிவிட்டோம். சேவியரின் அம்மா முகத்தில்   எந்த உணர்ச்சியும் இல்லை. எதையோ சொல்லவந்து சொல்லமுடியாமல் திணறும் முகத்தை இப்பொழுது தான் பார்க்கிறாள். அகத்தைக் காட்டும் முகம். என்னை அனுப்புவதில் சேவியருக்கும் சேவியர் குடும்பத்துக்கும் சொல்லமுடியாத சங்கடம் இருந்தது. என் அம்மா என்பதால் அழுத்தமாக மறுக்கமுடியவில்லை. கோயம்பேடு வந்து ஊருக்குப் பேருந்து ஏறியிருந்தோம். அம்மா வழிநெடுகப் பேசவே இல்லை. என் முகத்தையும் பார்த்தாற்போல் இல்லை. அதிக வேதனையில் இருக்கும்போது, அவ்வப்பொழுது 'ம்' என்ற சத்தம் மட்டும் அவளிடம் வெளிப்படும். தனக்குத்தானே மெளனமாக பேசிக்கொண்டிருப்பதைப் போல். மொபைலில் ஹெட்ஃபோனைப் பொருத்தி ஏஆர்ரஹ்மானின் காதல் பாடல்கள் ஃபோல்டருக்குள் சென்று இருந்த நூற்றிஇருபது பாடல்களையும் கேட்பது என்று முடிவுசெய்து ஆன் செய்தேன். சேவியர் அழைத்தான். 'ஒன்னும் பிரச்சனையில்லையே'. 'இல்ல. எல்லாரும் வியாழன் கிளம்பி வெள்ளி காலையில வந்துருங்க. ரூம் புக் பண்ணிருவேன். வெள்ளிக்கிழமை ராத்திரி உங்களோடயே நானும் திரும்பி வந்துருவேன்'. பேசமுடியாததை செய்திகளாகத் தொடர்ந்து  எழுதிக் கொண்டே இருந்தான். நூற்றுக்கும் மேலே செய்திகள். கடைசியாக, நான் இப்படி ஒரு செய்தி அனுப்பினேன். 'இந்த மாசம் பீரியட்ஸ் தள்ளிப்போவுது. திரும்ப வந்ததும் ஆக்னஸ் டாக்டர்கிட்ட செக்அப் போவோம்' என்று செய்தி அனுப்பவும் செய்திகளை முத்தங்களால் நிறைத்தான். 

பயணம் வெறுமையாக இருந்தது. வறண்ட கோடைகாலத்தின் சூன்யம் பேருந்தில் இருந்தோர் கண்களில் எல்லாம் படர்ந்திருந்தது. வெக்கை, கழுத்தில் வியர்வையாய் வழிந்தது. எப்பொழுது பயணம் முடியும் என்று காத்திருந்தேன். அம்மாவின் சோகத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.  அப்பாவின் மூளை வழியாகவும் ஊரின் வாய்களுக்குப் பயந்தும் சிந்திக்கும் ஒரு பெண். கழுத்தில் சில தங்கச் சங்கிலிகளும் வருடங்களுக்குச் சில பட்டுப்புடவைகளும் சொந்தக்காரப்பெண்களிடம் அவளை உயர்த்திக் காட்டப் போதுமானவையாக இருந்தன. அம்மாவிற்கு என்னை விட, என் தங்கையைத் தான் நிரம்பப்பிடிக்கும். என்ன தான் அவள் எரிச்சல் பட்டாலும் அம்மாவின் பிரியம் முழுக்க அவளுக்குத்தான் என்பது எனக்குத் தெரியும். அப்பாவிடம் தான் காட்டமுடியாத எரிச்சலை அவள் காட்டுகிறாள் என்பது கூட இருக்கலாம். 

சேவியரை நான் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன் என்று தெரிவித்தபோது அவன் முகத்திலிருந்த சிரிப்பு சட்டென்று உதிர்ந்து. 'இதெல்லாம் வேணாங்க. உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்காக, எங்களைக் கொல்ற உலகம் இது.' திடமாக மறுத்துவிட்டான். அதற்குப் பின் ஆறுமாதம் இருவரும் ஒருவரிடம் ஒருவர் பேசாமல் இருந்தோம். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த ஒரு நாள் இரவில் மொட்டை மாடியில் நானும் தங்கையும் அம்மாவுடன் படுத்திருந்தபோது, சேவியர் மீதான என் காதலை அம்மாவிடம் சொன்னேன். அம்மா அன்று இரவு நிறைய பேசினாள். 'இதெல்லாம் நம் வீடுகள்ல, சாதிகள்ல, சொந்தக்கார வீடுகள்ல கூட நடந்ததே இல்லை. மறந்துடு. ஒங்க அப்பா வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பாரு. தெரியுமில்ல'. தங்கை அன்று இரவு என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்கினாள். இரவு முழுதும் நான் தூங்கவில்லை. கல்யாணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்துவிடலாம் அல்லது  வாஷிங்டனில் வேலைபார்க்கும் புஷ்பாவின் அழைப்பிற்கு இணங்கி வேலை பார்க்க வெளிநாடு போய்விடலாம் என்று பலவாறாக யோசித்துக் கொண்டே இருந்தேன். சேவியரின் அம்மா முகம் நினைவுக்கு வர, அதிகாலைக் குளிரில் அம்மாவைக் கட்டிப்பிடித்துத் தூங்கிப் போனேன். அம்மா, விழித்தெழுந்தாள். அப்பாவிற்கு ஐந்தரைக்கு காபி குடிக்கவேண்டும். அதிகக் குளிர் வீசாமல் இருக்க, என் காதுகளுடன் போர்வையைப் போர்த்திவிட்டு ஒரு பெருமூச்செறிந்தாள். அம்மாவின் இருப்பை உணர்ந்தபோதும், உறக்கமும் களைப்பும் அழுத்தி மூடிய என் இமைகளைத் திறக்க இயலவில்லை. 

அலைகள் கொந்தளிக்கும் கடல். ஆங்காங்கே அலைகள் மீறித் தெரியும் கடும்பாறைகள். கரை வெகுதூரத்தில் இருக்கிறது. கரை சேர கடலில் குதித்து நீச்சலடிக்கவேண்டும். அலைகளின் கொந்தளிப்பு, நீச்சலடிக்கும் என் கொஞ்ச நஞ்ச ஆர்வத்தையும் பறித்துக்கொள்கிறது. பாறையிலேயே உட்கார்ந்திருந்த என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த என்னை, திடீரென்று எதிர்பாராமல்  உயர்ந்த அலை ஒன்று வீசி கடலுக்குள் என்னைத் தள்ளியது. நீச்சல் அறிந்தும் தப்பிக்கமுடியாமல் தத்தளிக்கிறேன்.

பேருந்து வழியிலே பயணிகளின் உணவிற்காக நின்றிருந்தது. அருகில் அம்மா இல்லை. ஜன்னல் வழியாகப் பார்த்தபொழுது, அம்மா சற்று தொலைவில் யாருடனோ ஃபோனில் பேசிக்கொண்டிருந்தாள். அம்மாவிடம் மொபைல் இருந்ததே எனக்குத் தெரியாது. ஒருவேளை பயணத்திற்காக, அப்பா கொடுத்துவிட்டிருக்கலாம் என்று நினைத்தபடியே என் மொபைலில் வந்து விழுந்திருந்த மெசேஜ்களைத் திறந்து பார்த்தேன். 'ஆஃபீசில் லீவு சொல்லிவிட்டதாகவும் தனக்கு எப்பொழுது ஊருக்கு வருவோம் என்று இருப்பதாகவும்' சேவியர் மெசேஜ் அனுப்பியிருந்தான். சேவியர் இப்படித்தான். அன்பைக் காட்டுவதில் தயக்கம் அற்றவன்.

சேவியரின் மறுப்பைக் காரணமாக வைத்து, சேவியரின் அம்மாவை அவர் பள்ளியில் சென்று சந்தித்தபோது, ஒரு தோழியைப் போல வாஞ்சையுடன் என்னை அணைத்துக் கொண்டார். அதுவரை இருந்த முழு கவலையும் என்னிடமிருந்து விலகிவிட்டது. அடுத்த நாள், சேவியர் என்னைத் தேடிவந்தான். காபி ஷாப்பின் நெருக்கடியில் வைத்து, 'என்ன ஏமாத்திரமாட்ட்டீங்கல்ல' என்று ஒரு குழந்தையைப் போல் கேட்டான். நான் அவன் விரல்களைப் பிடித்துத் திருகினேன். நூலகத்தில் எல்லோரும் செல்லக்காத்திருந்து, இருளான மூலையில் ஆசை தீரமுத்தமிட்டேன். அவன் வியர்வையில் எப்பொழுதும் நாவல்பழ வாசனை வீசும். பால்யத்தில்  விடுமுறை நாட்களில், நானும் தங்கையும் பள்ளியின் பின்புறம் இருக்கும் விளையாட்டு மைதானத்தில் இருக்கும் நாவல் மரங்களின் கீழ் விழுந்து கிடக்கும் நாவல்பழங்களைப் பொறுக்கித் தின்போம். எங்களுடன் சில பையன்களும் சேர்ந்துகொள்வர். தங்கை மரமேறுவதில் சிறந்தவள்.  அவள் பாவாடையில் பறித்து வரும் பழங்களுக்காகக் காத்திருக்கும்போது உள்ளூறும் ஆர்வம் கட்டுப்படுத்தமுடியாததாக இருக்கும். வியர்வையில் நாவல் பழ வாசனை வீசும்வரை திகட்டத் திகட்டத் தின்போம். சேவியருடனான முதல் பொழுது முயக்கத்தில் வீசிய நாவல் வாசனையில் அந்தக் காட்சி மனவெளியில் தோன்றி மறைந்தது. 

நாங்கள் சென்ற பேருந்து, பேருந்து நிலையத்திற்குள் நுழையும்போதே மாமா எங்களுக்காகக் காத்திருப்பதைப் பார்த்தேன். மாமா என்னைப் பார்த்து சிரிக்கவில்லை. வெறுமையான பார்வையால் என் முகத்தைக் கடந்துபோனார். மூவரும், எதிரே இருக்கும் ஹோட்டலில் அமர்ந்தோம். 'என்ன வேணுமோ வாங்கிச் சாப்பிடு' என்று சொல்லிவிட்டு எதிரில் அமர்ந்திருந்த அவர் இருப்புக் கொள்ளாமல் எழுந்து வெளியே சென்றார். ஹோட்டல் வாசலில் நின்றபடியே, நாங்கள் சாப்பிட்டு முடிக்கும்வரை அந்தப் பேருந்து நிலையத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒன்றும் சாப்பிடும் மனநிலையில் அவர் இல்லை போலும். 'ஏன் மாமா இப்படி இருக்காரு. ஏதாவது பிரச்சனையா'. அம்மா பதில் சொல்லவில்லை. 

வீட்டிற்குள் நுழையும்போது, தங்கையை எதிர்பார்த்து எல்லா அறைகளிலும் தேடினேன். அப்பா, என் வருகையை உணர்ந்து தன் வலது கையை இடது கையால் ஏந்தி எதிர்ப்புறம் சுவர் பார்த்து திரும்பிப்படுத்துக் கொண்டார். கிச்சனில், பாலைச் சுடவைத்துக்கொண்டிருந்த அம்மாவிடம், 'அவ எங்க?'. 'நேத்துதான் மாமாவீட்டுக்கு அனுப்பிவைச்சேன்.' 'என்கிட்ட சொல்லல?' அம்மா பதில் சொல்லவில்லை. வேகமாகச் சென்று, மொபைலில் அவள் எண்ணிற்கு அழுத்தினேன். அணைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கதறியது. எனக்கு அழுகை முட்டியது. பாத்ரூம் செல்லும் சாக்கில், குழாயைத் திறந்து விட்டுச் சத்தமாகக் கத்தி அழுதேன். சவத்தைப் பொதிந்துவைத்திருந்த மூட்டையைப் போல, வீடு எந்தக் குரலுக்கும் அசைவுக்கும் பதில் அளிக்காததாக இருந்தது.

குளித்து வந்த கோலத்தில், பீரோவில் இருந்த என் பழைய பட்டுப்புடவைகளை எல்லாம் எடுத்து சூட்கேசில் வைத்தேன். அம்மா, எட்டிப்பார்த்து, 'இப்ப எதுக்கு அதெல்லாம்?'. 'ஊருக்கு எடுத்துட்டுப் போவத்தான். அங்க டிரெஸ் குறைவா இருக்கு'. 'அப்புறம் வச்சிக்கலாம். சத்தம் உண்டாக்காத. அவர் தூங்குறாரு'. அம்மா நகர்ந்ததும் நான் புடவைகள் எடுத்துவைப்பதைத் தொடர்ந்தேன். புடவைகளுக்கு உள்ளிருந்து ஒரு வெள்ளைக்காகிதம் வந்து விழுந்தது. தங்கைக்கு அருணன் என்று யாரோ எழுதியிருக்கும் காதல் கடிதம்.  காதலே வேண்டாம் என்று மறுத்துப்பேசிய தங்கைக்குக் காதல் கடிதத்தை வாசித்து முடிப்பதற்குள் வியர்த்து வழிந்தது.

மொபைலில் மெசேஜ் வந்து விழும் சத்தம். சேவியர். என்ன செய்து கொண்டிருக்கிறாய்? அப்பா என்ன செய்கிறார்? விழா ஏற்பாடுகள் ஏதும் தன் தரப்பில் செய்யவேண்டுமா? நான், அதற்கான எந்த அறிகுறியும் இங்கே இல்லை என்று பதில் அளித்தேன். சேவியர் அழைத்தான். அழைப்பை ஏற்ப மறிப்பது போல்,  அப்பா வந்து அறையின் முன் நின்றார். அவர் முகம், சுவரில் விழும் நிழலுருவம் போல விகாரமாக இருந்தது. இப்பொழுது தான் நினைவுக்கு வருகிறது. அப்பாவின் முகம் பார்த்துப்பேசியே பல வருடங்கள் ஆகிவிட்டன என்று. கிழிந்து தைக்கப்பட்டிருந்த கோணிப்பையைப் போல இருந்தது, அவர் முகம். அப்பா என்னவோ  பேசி உறுமினார். உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் அவர் குழறலாய்ப்பேசியது புரியவில்லை. வேகமாக வந்த அம்மா,  என்னிடமிருந்து ஃபோனை பிடுங்கி ஜன்னல் வழியே எறிந்தாள். என் உடலெங்கும் ஒரு நடுக்கம் பரவியது வெளிப்படையாகத் தெரிந்தது. அம்மாவும் அப்பாவும் நகரும் வரைக் காத்திருந்து வீட்டை விட்டு வெளியே ஓடிச்சென்று தோட்டத்தின் இருள் வெளியில் இருந்து ஃபோனைத் தேடி எடுத்து வந்தேன். கீழே விழுந்ததில் ஃபோன் அணைந்திருந்தது. ஃபோனை சரிசெய்து, சேவியருக்கு செய்திகளாகத் தட்டி அனுப்பினேன். 'உண்மையில் திருமணத்திற்காக இங்கு அழைத்துவரவில்லை. ஏதோ வேறு எண்ணம் இருக்கிறது. அதிகாலைக்குள் எப்படியும் வீட்டிலிருந்து வெளியேறிவிடுவேன். மீதியைக் காலை பேசுகிறேன்'. 

இந்தப் பெரிய, ஆடம்பரமான வீடு எப்பொழுதும் ஒரு கொதிநிலையில் இருப்பதைப் போலவே எனக்குத் தோன்றும். பள்ளியில் உடன் படிக்கும் தோழிகள் அவரவர் வீட்டைப் பற்றிச் சொல்வது போல இனிமையாகவோ, கலகலப்பாகவோ இருந்ததில்லை என் வீடு. அம்மாவும் நானும் தங்கையும் ஒரே கொட்டிலில் அடைக்கப்பட்டு உணவு அளிக்கப்பட்டிருக்கிறோம் அவ்வளவே. அம்மா, சிரிப்பது எப்பொழுதாவது நிகழும். அம்மா சிரிக்கும் கணங்கள் மிகவும் அரிதானவை. தங்கை, அப்பாவைக் கிண்டல் செய்கையில் அப்படி ஒரு சிரிப்பை உதிர்ப்பாள்.

ஹாலில், லேண்ட் லைன் ஒலித்தது. யாருமே அதை எடுக்கவில்லை. ஒலித்து அடங்கியது. எங்கோ தூரத்திலிருந்து, 'எவனோ ஒருவன் வாசிக்கிறான்' பாடல் திடமான இருளின் ஊடே கரைந்து கேட்கிறது.  மணி பன்னிரண்டு இருக்கலாம். லேண்ட் லைன் ஃபோன் மீண்டும் ஒலித்து அடங்கியது. விடியலில் எல்லோருக்கும் முன் விழித்துக் கிளம்பிவிடவேண்டும். முடிந்தவரை தூங்காமல் இருக்கவேண்டும் என்று நினைக்கும்போதே பயணத்தின் அலுப்பு தூக்கமாய்க் கண்களை அழுத்தியது. அம்மா வந்து அருகில் படுத்தாள். என் தலையை வருடினாள். நான் தூங்குவதுபோல் நடித்தேன். இடதுகண்ணில் இருவிழிகளின் நீரும் சேர்ந்து தலையணையை ஈரமாக்கியது. சத்தமில்லாமல் கண்ணீரைச் சிந்தினேன். என் இடது காதை மூடியிருந்த மயிர்க்கற்றைகளை தன் மெலிந்த விரல்களால் அம்மா விலக்கினாள். ஏதோ சொட்டுச்சொட்டாய் மருந்து போன்ற ஒன்றை என் வலது காதில் ஊற்றினாள். என் மீது ஒரு நிழல் விழும் உணர்வு தோன்றியது. அம்மாவிடமிருந்து ஆமோதிப்பாய், 'ம்' என்ற குரல் கேட்டது.  காது தான் உடலுக்குள் நுழையும் வாயில் போல. காதில் விழுந்த திரவத்துளிகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து, தலைக்குள் கிளைவிட்டுப் பரவிப் பாய்ந்தன. ஒளிரும் பச்சை நிறம் மூளைக்குள் வீசியது. ஒளி என்றால் சாதாரண ஒளி அல்ல. கண் கூசும், உடலைச் சுக்குநூறாகக் கிழிக்கும் ஒளி. தொலைதூரத்தில்  ஒரு ஃபோன் ஒலிக்கும் கதறல் கேட்டு அடங்கியது. 

Recent Article

கால போதம்

வெகுநாள் கழித்து
அன்று தான் கண்டேன் காதலனை
முட்ட முட்டத் தாயின்...

(08 Apr 20 - Poems)


தற்காப்பு மருத்துவம்

நண்பர்களே, வணக்கம். இன்னும் கொரோனாவிற்கு எதிர்ப்பு மருந்து என்று ஒன்று...

(08 Apr 20 - Article)


அநாகரிகம் நிறைந்த புகைப்படம்

இந்தப்புகைப்படம் மனித அநாகரிகத்தின் உச்சம். ஆனால், நண்பர்களே இதற்கு...

(08 Apr 20 - Article)


தனிமை தனிமை

தனிமை தனிமை தனிமையோ தனிமை...

(08 Apr 20 - Article)


அரசியல் சிறைவாசிகளை விடுதலை செய்!

தமிழக அரசே,

கரோனா 19-என்ற தொற்றுநோய் நாடு முழுவதும் பொது...

(08 Apr 20 - Article)


Read All

Write To Author

About ME

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book.

Get In Touch

Address: 262 Milacina Mrest.

Phone: +91 3333 6789.

Tax: +91 3333 6789.

Email: support@kr.com

Website: www.kr.com