மீளும் நினைவுகள்

மீளும் நினைவுகள்

05 Oct 19
Article


சமீபத்தில் எழுதிய கவிதைகளை எல்லாம் கொத்தாக எடுத்து தொகுத்துக் கொண்டிருக்கிறேன். இரண்டு தொகுப்புகளை ஒன்றாகச் சேர்த்து ஒரே நூலாகத் தொகுக்கலாம் என்ற எண்ணமும் இருக்கிறது. அவற்றை வாசிக்கும்போது தோன்றியது, இது தான்: நான் நாட்குறிப்பு என்று எதுவும் எழுதுவதில்லை. நினைவில் வைத்துக் கொள்ளும் படியாக எதையும் சேமித்தும் வைப்பதில்லை. ஒரு கவிஞருக்கு, எது சிறந்த நினைவுக் குறிப்பாக இருக்க முடியும்.


நாட்குறிப்பில் நம்பிக்கை இல்லை. ஓடிவிடுவது காலம். நினைவுகளும் ஓடிவிடக்கூடியவை. ஆனால், அவற்றின் தடங்கள் மொழியாகவோ, குறியீடாகவோ, உருவகமாகவோ நம்மில் நம் நடவடிக்கைகளில் என்றென்றும் தங்கிவிடுவது உண்டு. அப்படியாகத் தங்கிவிடும் என்ற நம்பிக்கை உண்டு. நினைவுகளிலேயே வாழக்கூடிய சிலரை நான அறிவேன். முகநூலில் மீளும் நினைவுகளைப் போல. அந்த நினைவுகளையே அசைபோட்டுக் கொண்டிருப்பதைப் போல. அவற்றின் எச்சங்கள் என்னில் எப்படி ரசவாதம் கொள்கின்றன என்று தேடி உணர்ந்ததில், அவை அவ்வப்பொழுது சீரற்ற இடைவெளிகளில் நான் எழுதிக்கொள்ளும் கவிதைகளில் அந்த கவிதையின் சித்திரங்களாய், நிலக்காட்சிகளாய், கொந்தளிக்கும் உணர்வுகளாய், தட்ப வெப்ப நிலைகளாய் வந்து தங்கிவிடுகின்றன.


எல்லா கவிஞர்களுக்கும் நினைவுகள் என்பவை இப்படித்தானா என்று தெரியவில்லை. ஆனால், சமீபத்தில் நான் எழுதிக் கொண்ட கவிதைகளில் நாட்களின் தடங்கள் அப்படித்தான் பதியனாகி இருக்கின்றன.


சமுத்திரம் கானகமாகி அசையும் இரவில்

தண்ணென்று நிலவு கொதித்து நீந்த

நாங்கள் கரையில் தனித்துக் கிடந்தோம்

மூச்செறியும் மீன்களைப் போல

எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பு

மீளும் நினைவு இது

கரையேறி வரும் எந்த ஒரு பேரலையும்

எந்த ஒரு மீனையும் 

தன் நீர்க்கானகத்திற்குள் அழைத்துச் செல்லாது

கரையிலேயே விட்டுச் சென்றதால்

சில நினைவுகள் அப்படியே 

இறந்து கிடந்தன கரையிலேயே

மீன்களுக்கும் சமுத்திரத்திற்கும் தான்

எவ்வளவு தூரம்?

எங்கள் கால்களுக்கும் அலைகளுக்கும் தான்

எவ்வளவு தூரம்?

நினைவுகளுக்கும் நிகழ்விற்கும் தான் 

எத்தனை தூரம்?

மயங்கிக் கிடக்கும் இரவில் 

வானில் துடித்துக் காய்ந்து கொண்டிருக்கும் நிலவு

மெளனமாய் ஒளிச்சித்திரமாய் எல்லோருக்குமாக

நீரலைகளில் நினைவுகளை நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறது


(‘மீண்டும் கண்டெடுக்கப்படும்’, கவிதைத் தொகுப்பிலிருந்து)

Write To Author

About

Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.

Get in touch

Enquiries welcome for poetry, translations, film, and literary events.

Site: Kutti Revathi