அநாகரிகம் நிறைந்த புகைப்படம்

அநாகரிகம் நிறைந்த புகைப்படம்

08 Apr 20
Article


இந்தப்புகைப்படம் மனித அநாகரிகத்தின் உச்சம். ஆனால், நண்பர்களே இதற்கு முன்பும் இது போல் நடந்து கொண்டு தான் இருந்திருக்கிறது. அன்று ஒரு நிகழ்விற்காக, நாம் கொந்தளிந்தோம், குமுறினோம். இன்றும், இப்படியான ஒரு சம்பவத்திற்காக நாம் புழுங்கிப் போகிறோம். நாளையும் இப்படி ஒன்று நடக்கும். நம்மால் எல்லாவற்றிற்கும் குமுறித்தான் போக முடிகிறது. எதையும் மாற்ற முடியவில்லை.

இதற்குக் காரணமாக நான் கருதுவது, நம் சமூக வரலாற்றை முழுமையாக நாம் அறிந்திருக்காதது தான். ஒருமித்த எழுச்சியும் போராட்டமுமாக இல்லாமல் அங்கும் இங்கும் அப்பொழுதும் இப்பொழுதுமாக வெடிப்பதற்குக் காரணமும் இது தான். நாம் போராடுகிறோம். ஆனால், நம் போராட்டங்கள் எல்லாம் சதியாலும் சூழ்ச்சிகளாலும் முறியடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. மாற்றத்தை, முன்னேற்றத்தை, மாண்பை நிரந்தரமாக்குவதில்லை.

இதற்கு இன்னொரு காரணம், நம்முள் ஊறியிருக்கும், ஒவ்வொருவரும் தன்னுள் வளர்த்தெடுத்திருக்கும் அடிமை மனமும் தான். இந்த நாட்டின் அடிமைத்தன வரலாறு அறியாமல் ஏழைகள் யார் என்று நாம் அறிய முடியாது, ஒடுக்கப்பட்டவர்கள் யார், உழைப்பாளிகள் யார், இந்த நாட்டைக் கட்டமைப்பவர்கள் யார் என்று நாம் அறியவே முடியாது. இப்படி பூச்சி மருந்தை வேறு பிரிவினர் மீது ஒரு பொழுதும் அதிகாரம் நடத்தியிருக்கமுடியாது என்பதையும் அதற்கான சமூகக்காரணங்களையும் நாம் அறியவே முடியாது.

எப்பொழுதுமே அதிகாரம் நமக்கு இது மாதிரியான படங்கள் வழியாகப் படிப்பினைகளை நடத்திக் கொண்டே இருக்கிறது. இன்னும் இன்னும் அதற்கு நாம் வாய்ப்புகளையும் கொடுத்துக் கொண்டே இருக்கிறோம். இதற்கு ஒருவர் தன் அடிமை மனம் எப்படிச் செயல்படுகிறது என்பதை தான் அறியாததும், பிரிவினைகளை இந்தத் தேசத்தில் மீண்டும் மீண்டும் செயல்படுத்த எப்படித் தனியொரு மனிதராகத் தான் காரணமாக இருக்கிறோம் என்று அறியாததும் தான்.

உணவில், வாழ்வில், கல்வியில், பொருளாதாரத்தில், அங்கீகாரத்தில், மனித உரிமைகளில் என எல்லா வகையிலும் ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டதாக இந்தச் சமூகம் விளங்குவதற்கான காரணங்களைக் கண்டுணர நாம் உறுதியாக அண்ணல் அம்பேத்கரின் படைப்புகளை உணரவேண்டும்.

வீட்டில் அடைந்துகிடப்போர் அல்லது வீட்டில் இந்தச் சமூகத்தனிமை நாட்களைச் சொகுசாக வாழக்கிடைத்தோர் நினைக்கலாம், தம் வாழ்வு சுகமானது என்று, தாம் விடுதலையடைந்துவிட்டோம் என்று. ஆனால், இந்த அதிகாரச் செயல்பாடு மாறி மாறித் தன் வாழ்வில் விளையாடுவதை சமூகவரலாறு வழியாக உணராதவரை இந்த மனித மாண்பற்றச் செயல்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

கீழ்மையான ஒரு செயல்பாட்டை நாம் எங்கோ பார்த்துக் கொண்டு இருக்கிறோம் என்றால், அதைத் தனக்கும் அனுமதிப்பவராக இருக்கிறோம் என்று தான் பொருள். அப்படித் தனக்கும் அனுமதிக்க நம் மனம் ஒப்புக்கொள்கிறது என்றால், நாமும் இந்த அதிகாரச் செயல்பாட்டின் அடிமைகளாக இருப்பதை ருசிக்கிறோம் என்று தானே அர்த்தம். ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டாடுகிறோம் என்று தானே அர்த்தம்.

உண்மையிலேயே இந்தச் சமூகத்தனிமை நாட்கள், அண்ணல் அம்பேத்கர் நமக்காகச் சிந்தித்து உழைத்துப் போராடி எழுதியவற்றை வாசித்து அறிவதற்கும் உணர்வதற்குமான நாட்கள். இது நம் நாடு, நம் மக்கள், நம் மானுட உரிமைகள் நாம் ஈட்டிப் பெற வேண்டியவை. யாரோ நம் கையளிப்பவை அன்று. தன் சமூக வரலாற்றை ஒருவர் அறியாத வரை, தன் சமூகப்பொறுப்பை ஒருவர் உணராதவரை சமூகத்தின் இத்தகைய கீழ்மையான செயல்பாட்டின் முழுமையான அர்த்தங்களை நாம் உணரப்போவதேயில்லை.

இப்படி இழிவாக மனிதர்கள் நடத்தப்படுவதைப் பார்த்துக்கொண்டிருக்கும் நாம் அந்த இழிவான செயலைச் செய்பவர்களை விட இழிவானவர்கள்!

Write To Author

About

Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.

Get in touch

Enquiries welcome for poetry, translations, film, and literary events.

Site: Kutti Revathi