குழந்தைகளின் உலகமாய் இல்லை, இது!

குழந்தைகளின் உலகமாய் இல்லை, இது!

14 Nov 19
Article


பொதுவாக, பெரியவர்களைப் பெரியவர்கள் சொற்களாலோ வன்முறைகளாலோ செயல்களாலோ வதைத்துக் கொண்டால் நான் அதைப் பற்றிப் பெரிதாய் அலட்டிக் கொள்வதில்லை. பெரியவர்களுக்குப், இதெல்லாம் பொழுது போக்கு. ஆனால், குழந்தைகள் வதையுறும்போது என்னால் தாங்கிக் கொள்ளவே முடிந்ததில்லை. 


அடுத்தடுத்த தலைமுறையினரிடம் நெருக்கமாகப் பழகிவிடும் நான், எந்தத் தலைமுறையிடமும் எளிதாக நெருங்கிவிட முடியும் என்னால் என் தலைமுறையினரிடம் கடும் எச்சரிக்கையுடன் பழக வேண்டியதில் இருக்கும் பாரம் குறித்தே என் தலைமுறையினர் விடுத்து மற்றவர்களிடம் எளிதாகப் பழகிவிடுவேன். அதிலும், இளைய தலையமுறையினர் நிறைய கடுமையான பிரச்சனைகளைக் கூட எளிதாகக் கையாண்டு விட,  எம் தலைமுறையினர் தலைமுறை இடைவெளிகளுக்கு இடையே பள்ளங்களைத் தமக்குத் தாமே உண்டாக்கிக் கொண்டு,  அதில் எதிர்நீச்சல் அடிக்க முயற்சி செய்து கொண்டிருப்பார்கள்.


குழந்தைகள் தினத்திற்கு வருவோம். மரியா மாண்டிசோரி பற்றிய நெடும் ஆராய்ச்சி ஒன்றை செய்யவேண்டியிருந்தது. எப்பொழுதும் அவர் மீது பெரும் ஈர்ப்பும் வியப்பும். அவர் பற்றிய எல்லாமே வாசித்து அறிந்து வைத்தருந்தேன். அவர் பற்றிய ஒரு நூலுக்கு முன்னுரையும் எழுதியிருக்கிறேன். அவரை கவனமாய் வாசித்த பின்பு எனக்குத் தோன்றியதும் தோன்றுவதும் இது தான்: குழந்தைகளின் உலகமாய் இது இல்லை. 


குழந்தைகளாய் இருக்கையில் அறிவுப்புலன்கள் கூர்மையானவை. கலைரசனையும் கூட. ஆனால், இந்த முட்டாள் பெற்றோர்கள் தங்களின் முட்டாள் தனத்தின் அளவிற்கே குழந்தைகளும் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தம் குழந்தைகளைக் கண்டிப்பதும் அடக்குவதும் தன்னுடைய உலகத்திற்குள்ளேயே செக்குமாடாய் வைத்துக்கொள்வதும், என்றென்றும் எங்கெங்கும் காணக் கிடைக்கும் ஒன்று. அன்று ஒரு வீட்டைக் கடந்து கொண்டிருக்கிறேன். மூன்று வயதிற்கு மேல் இருக்காது அந்தக் குழந்தையின் குரலுக்கு: ‘அம்மா, கிள்ளாதம்மா..அப்படிக் கிள்ளாதம்மா…ரொம்ப வலிக்குதும்மா’, என்று கேட்டது. நீண்ட நேரம் அந்தக் குரல் இதயத்தை என்னென்னவோ செய்து கொண்டிருந்தது.


குழந்தைகளைச் சிறகடித்துப் பறக்கவிடவேண்டும். அவர்களுக்குப் பாதுகாப்பாய்,  முடிந்தால் நாமும் அவர்களின் திசைக்கு வேகத்திற்குப் பறந்து செல்லவேண்டும். அந்தக் குழந்தைமையை அவர்களுக்கே காப்பாற்றிக் கொடுக்க முடிந்தால் அதுவே அவர்கள் வாழ்க்கையில் நாம் நிகழ்த்தும் அற்புதம்.


சரியான பெற்றோரை  வெகு அரிதாகவே காண முடிகிறது. சமூகத்தின் அவலத்தை விட, குடும்பங்களின் வன்முறை இன்னும் கடுமையானது. சமீபத்தில் ஒரு பொன்மொழி படித்தேன்: குழந்தைகளுக்குப் பெற்றோரின் அன்பை விட உயர்வானவை கலையும் கலைரசனையும் தாம் என்று. நூறு சதவிதம் சரி.


ஒரே நேரத்தில் தம் குழந்தைமையையும், தம் வாழ்வையும் காப்பாற்றிக் கொள்ள குழந்தைகளுக்கு இருக்கும் ஒரே எளிய வழியும், கலை ஈடுபாடு தான். மரியா மாண்டிசோரி சொல்வது போல, தன்னால் வென்று விட முடியும் என்று உணரும் ஒரு குழந்தை ஒன்றைச் செய்யும்போது, வளர்ந்துவிட்டவர்கள் தாம் உதவுகிறோம் என்று தலைகளை நுழைக்காமல் இருந்தாலே போதும்! என்றென்றும் குழந்தையர் தினமாய் அமைய வாழ்த்துகள்!

 

புகைப்படத்தில் மரியா மாண்டிசோரி

Write To Author

About

Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.

Get in touch

Enquiries welcome for poetry, translations, film, and literary events.

Site: Kutti Revathi