கியூபாவை முன் வைத்து

கியூபாவை முன் வைத்து

08 Apr 20
Article


கியூபாவை முன் வைத்து: இங்கேயும் வேண்டும் ஒரு மருத்துவப்புரட்சி!

கடந்த இரண்டு நாட்களாக, கியூபாவில் நிகழ்ந்த அறுபது ஆண்டு கால மருத்துவப்புரட்சி பற்றி தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஃபிடல் காஸ்ட்ரோவும் சேகுவேராவும் சேர்ந்து நிகழ்த்தியது என்று நாம் ஏற்கெனவே அறிந்திருந்தாலும், 1959 - ல் இத்திட்டத்தை வடிவமைக்கும் போது, அறுபது ஆண்டுகள் தாண்டியும் வலுவான புரட்சியாக, இயக்கமாக, திட்டமாக அது புழக்கத்தில் இருந்து வருவதாய் அதை உருவாக்குதல் என்பது சாதாரண விடயம் அன்று.

எதிர்காலத்தையும், தம் நாட்டையும் அதன் ஏழ்மையையும் எப்படி எப்பொழுதுமே மருத்துவம் என்பது ஒரு வணிகச்சொத்தாகவே இருக்கிறது என்பதையும் கருத்தில் கொண்டு அமெரிக்கச் சிந்தனை முறையிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள இவ்விருவரும் கொண்டுவந்த மருத்துவ உள்கட்டமைப்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது.

நேற்று தமிழ் இந்து பத்திரிகையில், கு.வி. கிருஷ்ணமூர்த்தி அவர்கள், இதைப்பற்றிச் சிறந்ததொரு சுருக்கமான, எளிமையான கட்டுரையை வழங்கியிருக்கிறார். அதை ஒரு முறை நாம் வாசித்துவிடுவதும் முக்கியம்.

அடிப்படையிலேயே, நம் நாட்டில் மருத்துவக்கல்வி வியாபாரம் ஆனதும், அதன் தொடர்ப்பயணம் எங்குமே மருத்துவச்சேவையாக இல்லாமல் மருத்துவ வணிகம் என்றாகிவிட்டதும், ஏதோ தற்செயலானது அன்று. முன்பெல்லாம் மருத்துவர்கள், மருத்துவம் படித்துவிட்டு சமூகச்சேவை செய்வோம் என்று சொல்வார்கள். ஆனால், இன்று அந்த நிலைமை இல்லை. அதிகப்பணம் கொடுத்துப் பெற்ற கல்வி என்பதால் எப்படியும் அந்தப்பணத்தைத் திரும்பப் பெற்றுவிடவேண்டும் என்ற நோக்கம் தான் இருந்திருக்கிறது. இதையே, காஸ்ட்ரோவும் சேவும் கருத்தில் கொண்டு, ஏழைகளுக்குத் தான் முதலில் மருத்துவக் கல்வி கொடுக்க முன் வருகிறார்கள். அப்பொழுது தான் படித்துவிட்டு, ஏழைகளுக்கு, தம் சொந்த சகோதர, சகோதரிகளுக்குச் சென்று மருத்துவம் செய்யும் அக்கறை மருத்துவர்களுக்கு வரும், என்ற உள்நோக்கத்திலேயே இத்திட்டத்தை முன் வைக்கிறார்கள். ‘Barefoot Doctors’, என்ற இவர்கள் வடிவமைப்பு இன்றும் பயனுடைத்து.

அதுமட்டுமன்றி, வெளி நாடுகளிலிருந்தும் மருத்துவம் படிக்க மாணவர்களை இவர்கள் நாட்டிற்கு அழைக்கிறார்கள். இவர்கள் நாட்டிலிருந்தும் வெளிநாடு சென்று படிக்கலாம். மேலும், உயிரி தொழில்நுட்பவியல் (Bio Technology) துறையை இவர்கள் கையெடுத்து அதனை காலந்தோறும் நவீனப்படுத்தியும் சாதனைகள் நிகழ்த்தியும் சர்வதேச அளவில் தம் கடப்பாட்டை முன்வைத்துக் கொண்டே இருக்கின்றனர். இத்துறையில் இவர்களின் வளர்ச்சியை, சாதனையை இன்னொரு உரையில் முன்வைக்கலாம். வெவ்வேறு காலகட்டத்தில் அவர்கள் கண்டறிந்த மருத்துகள், வென்றெடுத்த உயிர்கள், ஒழித்த நோய்கள் என்று அவர்களின் சாதனைகள் தொடர்கின்றன. அடுத்து, மருந்துகள் தயாரிப்பு மற்றும் மருந்துகளின் விலை, இது தொடர்பான இவர்களின் செயல்பாடு.

இவர்களின் திட்ட வடிவமைப்பில், மருத்துவக்கல்வி மருத்துவச்சேவை இரண்டும் வேறு வேறாகவும் பார்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டதாகவும் பார்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இப்படியான திட்ட வடிவமைப்பிற்கு முக்கியமான காரணம், என்னைப் பொறுத்தவரை சேகுவேராவே ஒரு மருத்துவராக இருந்தது. தன் மருத்துவப்படிப்பின்போதே தன் நண்பனுடன் அவர் மேற்கொண்ட ஒன்பது மாத சுற்றுப்பயணம் அவர் வாழ்வைப் புரட்டிப்போட்டது. இரு சக்கரவாகனத்தில் தென் அமெரிக்கா முழுவதும் பயணம் செய்து வந்தது. அவர் நாட்டின் அடிப்படைத்தேவைகளை உணர்ந்திருந்தது.

1959ம் ஆண்டு அமெரிக்காவின் கருத்தியலுக்கு ஏற்றபடி ஆடிக்கொண்டிருந்த இராணுவ சர்வாதிகாரி படிஸ்டா (Fulgenico Batista) வை முறியடிக்கின்றனர் ஃபிடல் கேஸ்ட்ரோவும், சேகுவேராவும். பன்னாட்டு நாடுகளுக்கு இடையிலான உயிரி தொழில்நுட்பவியல் சாதனை மற்றும் போட்டியில், கியூபா முன்னிற்க விரும்பியது, வெறும் வணிகரீதியிலான வெற்றிக்காக மட்டுமன்று. மருத்துவச்சேவையில் முன்னிற்கவும், கொள்ளை நோய் தீநுண்மிகளை வெல்வதற்கான மருத்துவத்தில் தொடர்ந்து தம் நாடு முன்னிற்பதையும் கியூபா எப்போதுமே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது. அத்தகைய உள்கட்டமைப்பை உருவாக்கி அதன் வழியாக மருத்துவ வலிமையைப் பெறுவதே கேஸ்ட்ரோவின் திட்டம். அடிப்படையில் ஒரு மருத்துவராக இருந்து கொரில்லாப்போராளியாக ஆனார், சேகுவேரா. வாழ்நாள் நண்பர்கள் இருவரும். உயிரி தொழில்நுட்பவியல் துறை என்றுமே அவர்களுடையது என்பது போல அத்துறையில் அவர்களின் ஈடுபாடு, மானுடம் மிக்கது.

என்னை அசத்தியது, சமீபத்தில் கொரோனா தாக்குதலுக்குப் பின் கரீபியன் கடலில் பயணித்துக் கொண்டிருந்த எம்எஸ் ப்ரீமர் என்ற சொகுசு கப்பல் சம்பந்தப்பட்டது. உலகையே அசத்தியது தான். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளைக் கொண்டிருந்த அந்த மக்களை கப்பலை, எந்தக் கரீபியன் நாடும் தம் துறைமுகத்தில் இறக்கிக் கொள்ள முன்வராத நிலையில் பஹாமாஸ் தீவில் கியூபா இறக்கிக் கொண்டது. நோயாளிகளைத் தான் கவனித்துக் கொள்கிறேன் என்று சொல்லி மீதிப் பயணிகளை பிரிட்டனுக்கு அனுப்பியது. இவ்வளவு வேறு எந்த நாடும் இச்சிறந்த முன்மாதிரியைச் செய்வதற்கான மருத்துவக்கட்டமைப்பைக் கொண்டிருக்கவில்லை.

இம்மாதிரியான துணிவும் மருத்துவ அறமும் இன்றைய உலகமயமாக்கலில் சாதாரணமான விடயங்கள் அல்ல. தமிழ்நாட்டிற்கு, வருவோம். தொடர்ந்து கொள்ளை நோய்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறோம். சித்தமருத்துவம் ஒரு பெரிய மருத்துவச்செல்வம் என்று சொன்னதற்கே ஓர் எழுத்தாளர் கொந்தளித்துக் கிண்டலான நகைப்புடன் அது ஒரு போலி மருத்துவம் என்று எழுதியிருந்தார். ஆமாம், அவர் ஒரு எழுத்தாளர் தானே, மருத்துவர் இல்லையே. மருத்துவம் பற்றி அவருக்கு என்ன தெரியும் என்று விட்டுவிடுவோம்.

சென்ற நூற்றாண்டு முழுக்க, சித்தமருத்துவத்தைத் தமிழ்நாட்டில் நிலைநிறுத்துவதற்கான பணிகள் தொடர்ந்துள்ளன. பெரியார், கலைஞர் கருணாநிதி, அண்ணா, க.அன்பழகன் என்போர் முதன்மையானவர்கள். பின்னணியில், இம்மருத்துவம் நிலைபெற உழைத்தவர்களை பட்டியலிட முடியாத அளவிற்கு ஆயிரம் ஆயிரம். ஆயுர்வேதத்தின் ஒரு பிரிவாகக் கருதப்பட்டுவந்த தமிழ் மருத்துவத்தின் தத்துவமும், உள்ளடக்கங்களும் உணர்ந்து அதை ஒரு தனிமருத்துவமாக அங்கீகரிக்கச் செய்யவே, இன்று இரண்டு அரசு கல்லூரிகள் இயங்குவதற்கான நிலையைத் தொடரவே கடும் உழைப்பு தேவைப்பட்டது.

குத்சியா காந்தி அவர்கள் இயக்குநராக இருந்தபோது தான், கடைசியாக சித்தமருத்துவ நூல்கள் வெளியிடப்பட்டதாக நினைவு. அதற்குப் பிறகு சித்தமருத்துவர்கள், பேராசிரியர்கள் ஆய்வு செய்து, எழுதப்பட்ட எந்த நூலும் வெளியிடப்படவில்லை. எழுதப்பட்டு வெளியிடமுடியாமல் தவிக்கும் பேராசிரியர்களை அறிவேன். ஏறத்தாழ, நவீன இலக்கியத்தளத்தினைப் போலவே தான், சித்தமருத்துவத்துறையிலும். புத்தகங்களை எழுதுவது, எழுதியவற்றை வெளியிடுவது, பாடத்திட்டங்களில் அரங்கேற்றுவது சாத்தியமே இல்லை.

தமிழ்நாட்டின் அறிவுமரபு புத்தகங்களாகத் தொடர்வதை உணர்ந்தவர்கள், அதை வேண்டுமென்றே புறக்கணித்திருக்கிறார்கள். நூலக உரிமைகளை மறுத்திருக்கிறார்கள், நூலகங்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன. அல்லது, நூலகங்கள் மூடப்பட்டிருக்கின்றன. தமிழ்ச்சிந்தனை ஒட்டுமொத்த அறிவு மரபையும் தமிழ்மருத்துவம், தமிழ் இசை என்றே இரண்டே பிரிவுகளாலும் மறுமலர்ச்சி செய்துவிடமுடியும். இரண்டு துறைகளிலும் ஒரே மாதிரி அரசியல்.

வீம்பினாலும் வீண் வன்மங்களினாலும் சித்தமருத்துவத்தின் பயன்பாடுகளை நாம் நுகராது இழப்பினையும் மரணத்தினையும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். எத்தனை ஆங்கில மருத்துவர்களால் வஞ்சிக்கப்பட்டாலும் அதை நினைவில் கொள்ளாமல், எங்கோ ஒரு சித்தமருத்துவர் என்ற பெயரால் பாதிப்புக்குள்ளானதைக் காரணம் காட்டி ஒரு மருத்துவ மரபையே எதிர்ப்பதும் ஒவ்வாமை கொள்வதும் பச்சை மடமை. கியூபாவின் மருத்துவப்புரட்சியை வாசிக்க வாசிக்க மெய்சிலிர்க்கிறது. இத்தனைக்கும் நம்மிடம் ஒரு மரபு மருத்துவத்தின் மூலம் வேறு இன்னும் அதிகமாய் இருந்தும், அதை உலகமயப்படுத்தாமல், நாமும் நம் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஒவ்வாமை, அலட்சியம், வன்மம் போன்ற தொனிகளால் புறந்தள்ளுகிறோம். யாருக்கு நட்டமும் இழப்பும் நண்பர்களே!

பொதுமக்கள் மனம் மாறாமல், தாம் வணிகமயமாக்கப்படுவதை தாமே விழிப்புற்று உணர்ந்து நிறுத்தாமல் இங்கும் மருத்துவப்புரட்சி சாத்தியமில்லை.

இந்திய அளவில் சித்தமருத்துவத்திற்கான அங்கீகாரம் கோருவதும், அதற்கான திட்டங்களை வரையறுப்பதும் செயல்படுத்துவதும் கடினம். தமிழ்நாட்டிலிருந்தே சித்தமருத்துவதற்கான எழுச்சி நிகழவேண்டும். நாம் உயிரிழப்புகளுக்குத் தயாராக இருக்கிறோம். ஆனால், நம் மூளையை நாமே மூடிவைத்துக்கொண்டதைத் திறந்து கொள்ளும் முயற்சிக்குத் தயாராக இல்லை.

என்ன தான் சித்தமருத்துவம் நம் மண்ணின் செல்வம், வேர், அறிவு மரபு என்றாலும் அதை வளர்த்தெடுத்தால் தானே புரட்சி.
இன்னொரு நாள், சித்தமருத்துவத்தின் அடிப்படைகளை முன்வைக்க விரும்புகிறேன். மிகவும் வெளிப்படையாகவே.

Write To Author

About ME

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book.

Get In Touch

Address: 262 Milacina Mrest.

Phone: +91 3333 6789.

Tax: +91 3333 6789.

Email: support@kr.com

Website: www.kr.com