தற்பொழுதைய வாசிப்பில்

தற்பொழுதைய வாசிப்பில்

04 Nov 19
Article


ஆதி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் முத்து நாகு எழுதிய ‘சுளுந்தீ’ நாவலை வாசித்துக் கொண்டிருக்கிறேன். சித்த மருத்துவ நூல்களுக்கு வெளியே நவீன இலக்கிய வெளியில் முதன் முறையாக, மூலிகைகளின் மருத்துவப் பயன்பாட்டின் செம்மையான விவரணைகளுடன் ஆசிரியர் எழுதியிருக்கிறார். வாசிக்க வாசிக்க பரவசமாக இருக்கிறது. சமூக அரசியல் வரலாற்றைச் சொல்வதினூடே நாவிதர்களின் மரபார்ந்த மருத்துவ அறிவை, நுட்பமான குணபாடங்களைச் சொல்லிச் செல்கிறார். அங்கிங்கென்று இல்லை. நூலில் எங்கெங்கும் விரவிக் கிடக்கின்றது.

ஒரு தோழி, வள்ளலாரை எனக்கு அறிமுகப்படுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டதன் பேரில் வள்ளலாரின் நூல்களைத் தேடிச் சில கடைகளுக்குச் சென்றிருந்தேன். நான் தனிப்பட்ட விதத்தில் அறிந்திருந்த வள்ளலாரின் எந்த மாண்புக்கும் எளிமைக்கும் ஈடான ஓர் அழகிய நூலைக் காணவில்லை. இறுதியில், மபொசி எழுதிய வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்ற நூலை வாங்கினேன். சாகித்ய அகாதமியின் பரிசை வென்ற நூல். வள்ளலார் பாடலுக்கு பொழிப்புரை எழுதவேண்டும் என்று தோன்றியது. ஆனால்,  அது ஒரு வாழ்நாள் அனுபவமாக இருக்கும். அப்படித்தான் நான் வள்ளலாரை, அவரது பொது நெறியை, சமத்துவத்தை உணர்ந்து கொண்டிருக்கிறேன், புரிந்து வைத்திருக்கிறேன். 

நியூ புக் லேண்ட்ஸ் கடைக்குச் சென்று நூல்கள் வாங்காமல் திரும்பியதே இல்லை. என்றாலும் சுற்றிச் சுற்றி வந்தாலும் எந்த நூலும் வாங்கும் படியாக இல்லை. முடிவாக, பத்தாவது முறையாக, ழாக் ப்ரெவெரின் ‘சொற்கள்’, நூலையே வாங்கினேன். கூடவே, க்ரியா பதிப்பகத்தின் நான் வாசிக்காத நூல்களான, ‘காவிரிக் கரையில் அப்போது….’ , தங்க. ஜெயராமன் எழுதியது மற்றும், வெ.ஶ்ரீராம்  பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கும் எழுத்தாளர் காமெல் தாவுத் (Kamel Dauod) - இன் மெர்சோ: மறுவிசாரணை நூலையும் வாங்கி வந்தேன். ஶ்ரீராம் அவர்களின் மொழியாக்கம் ஆற்றொழுக்கின் நடை யும் அழகும் கொண்டது. ழாக் ப்ரெவெரும் அவர் மொழிபெயர்த்ததே.

சென்ற ஆண்டின் சிறந்த விற்பனை என்று சுளுந்தீ  நூலைச் சொல்கிறார்கள். நுட்பமான வழக்காறு நிறைந்த புனைவு சட்டென்று மனதைக் கவ்விக் கொள்கிறது. சமூக ஊடக வாழ்வியலுக்குப் பின் நம் சிந்தனைத் தேவையை ஈடுசெய்யும் படைப்பாக இருக்கிறது. இன்னும் வாசித்து முடிக்கவில்லை. முடித்ததும் விரிவாக அந்நூலைப் பற்றி எழுதும் எண்ணம் கொண்டிருக்கிறேன். ஜோ டி குரூஸின் ஆழி சூழ் உலகு நூலுக்குப் பின் ஒரு முக்கியமான வரவு, இந்நூல்.

Write To Author

About

Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.

Get in touch

Enquiries welcome for poetry, translations, film, and literary events.

Site: Kutti Revathi