அசுரனை முன்வைத்து, சினிமாவின் கதைகளை அலசினோம் என்றால் இந்தியாவிற்கு என்று ஒரே ஒரு கதை தான் இருக்கிறது. மீண்டும் மீண்டும் திரைக்கு வெளியேயும் திரைக்கு உள்ளேயும் அதே கதை தான் நிகழ்கிறது.
அசுரனும் அப்படியான ஒரு கதை தான். உரிமைக்காக எழுச்சியுறும் தன் மகன்களைக் காப்பதற்காகப் பதறிப் பதறி ஓடும் தந்தையோ தாயோ எல்லா காலத்திலும் தோன்றிக்கொண்டே இருக்கின்றனர். சமூக அமைப்புகளின் ஒடுக்குமுறையயும் நன்கு உணர்ந்த தந்தை- தாய் தான். அதன் ஆணி வேர் வரை எல்லாவற்றையும் அறிந்திருப்பவர்கள் தான் என்றாலும் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு தலையைப் பழி வாங்கும் கதை என்பது தான் அசுரனும். இம்மாதிரியான கதை, இந்தியாவின் எந்த ஒரு பிடி நிலத்தைக் கையில் எடுத்துக் கொண்டாலும் நிகழ்ந்திருக்கும். நிச்சயமாக, நிகழ்ந்திருக்கும்.
மஹாசுவேதா தேவி, இது போல் ஒரு கதையை இருபது ஆண்டுகளுக்கு முன்பே எழுதியிருக்கிறார். பூமணியும் முன்பே எழுதியிருக்கிறார். இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாயச் சென்று தொலைதூரக் கதைகளை எல்லாம் வாசித்து வந்தால், இந்தியா முழுவதும் இது போல் இரத்தம் சிந்திய நிலமும் கூனிக்குறுகி முறிந்த தந்தையின் முதுகெலும்புகளையும் நிறைய பார்க்கமுடியும்.
இவ்வளவு தானா சாதி என்று நினைக்கும் படியாக, ஒரே கதையில் ஒரே இயக்குநரால் இதன் அடர்த்தியை எல்லாம் ஒட்டுமொத்தமாகச் சொல்லிவிட முடியும் என்று தோன்றவில்லை. நாம் அவ்விதம் நினைக்கவும் முடியாது. ஒவ்வொரு இயக்குநரும் அதன் வெவ்வேறு முகக்கோணங்களை நம் முன் கொண்டு வருகின்றனர். குருடன் பார்த்து உணர்ந்து கொண்ட யானையைப் போல் தான், நாம் எல்லோரும் சாதியை ஒவ்வொரு பக்கத்தில் நின்று கொண்டு நம் புரிதலை விவாதிக்கிறோம்.
நாம் காணும் கேட்கும் ஒவ்வொரு கதை வழியாகவும் நம் மனதின் அடியில் படிந்த அழுக்கு வண்டலை நாம் உணரமுடியும் அவ்வளவே.
ஆனால், எங்கோ பழிவாங்கலையும் வன்மத்தையும் எழுச்சியையும் நாம் வேறு வேறாக புரிந்துகொள்ளும் படியாகக் கதைகளை வடிவமைத்துக் கொண்டால், சாதியின் தடிமனை இன்னும் அதிகமாகப் புரிந்து கொண்டு, அதை மறுக்கும் நம் இலட்சியம் நோக்கி நாம் இன்னும் திடமாக நகரமுடியும்.
ஒரு நண்பர் எழுதியிருந்தார், மரியான் படத்திலேயே தனுஷின் நடிப்பைப் பற்றி வியந்து. மரியான் படத்திலேயே அவர் நடிப்பின் திறனை முழுமையாகத் தொட்டிருந்தார் என்று சொல்லவேண்டும். தனுஷின் நடிப்பில் விஞ்சி நிற்பது என்னவென்றால், அவர் நடிப்பினூடே கூடி அவர் முகத்தில், உடல் அசைவில், மொழியில் என எல்லாவற்றிலும் அக்கதாபாத்திரத்தின் மன ஓட்டத்தை நாம் படம் முழுக்க உணர்ந்து கொண்டே இருக்கமுடியும் என்பது தான்.

Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.
Enquiries welcome for poetry, translations, film, and literary events.
Site: Kutti Revathi