கட்டு விரியன்

கட்டு விரியன்

01 Nov 19
Stories


அதிகாலைக் குளிரின் துகிலைக் கிழித்துக் கொண்டு ஒரு கட்டுவிரியன் பாம்பைப் போலவே அந்த நெடுஞ்சாலையில் விறைத்த பாதங்களுடன் இருளனும் அவள் மனைவி காயாம்பூவும் மகன் செவத்தனும் நடந்து கொண்டிருந்தனர். காயாம்பூவின் கையில் ஒயர்கூடையும் அதில் சுருட்டி வைக்கப்பட்ட ஒரு கோணிப்பையும் இருந்தது. இருளன் கையில் ஒரு கடப்பாரையையும் முனை வளைந்திருக்கும் ஒரு கம்பியையும் சுமந்து கொண்டிருந்தான். அவர்கள் நடந்து செல்வதை சாலையைக் கடக்கும் எவரும் கூட உணரமுடியாத அளவிற்கு சத்தம் எழுப்பாமல் சீராக நடந்து கொண்டிருந்தனர். மூவரின் கருத்த நிறமும் அவர்கள் அணிந்திருந்த உடையும் அந்தக் கருக்கலை உறுத்தாமல் இருந்தது. மூவரும் ஒருவருக்குள் ஒருவராய் இருந்தமையால் பேசிக்கொள்ள ஏதும் இல்லை. அல்லது ஒருவரோடு ஒருவர் மெளனமாகப் பேசிக்கொண்டே வந்தனர். காயாம்பூ நிறைமாதமாய் இருந்ததால் வயிற்றில் சுமையுடன் அவர்கள் வேகத்திற்கு நடக்கமுடியாமல் திணறினாள். என்றாலும், பாம்பின் தடம் உணர அந்த அதிகாலை நேரம் தான் உசிதம். 

பாம்பின் தடம் சருகுகளைக் கூட கலைக்காமல் இருக்கும் போது தான் தன் கூரிய பார்வையால் அதன் போக்கை அறியமுடியும். காலத்தைக் கணித்துத் தான்  பாம்புகள் இயங்கும். பாம்பு எதையும் கலைத்துக்கொண்டு நகராது. சூழலின் உள்ளே புகுந்து கொண்டு காலத்தின் நிறத்தில் உடையை மாற்றிக்கொள்வதில் பாம்புகளுக்கு நிகரான உயிர் இல்லை. காயாம்பூ அவர்கள் நடைக்கு ஈடு கொடுத்தாள். இருளன், மனைவி சிரமப்படுவதை அறிந்து கொஞ்சம் மெல்ல நடைவேகத்தைக் குறைத்துக் கொண்டான். இதை இருவரும் பேசாமலேயே அனுசரித்துக் கொண்டனர். சாலையின் வலது பக்கம் ஓர் இறக்கம் கண்டு அதன் வழியாக இறங்கினார். ஏக்கர் ஏக்கராய் விவசாயம் செய்திருந்த வேணுகோபாலன் பிள்ளையின் வயல்களின் வரப்புகள் வழியாக வயலைக் கடந்தனர். கண்ணெதிரே ஒரு சாரைப்பாம்பு ஒரு வயலிலிருந்து இன்னொரு வயலுக்கு வரப்பேறிக் கடக்க, அது கடக்கும் வரைக் காத்திருந்து கடந்தனர். மெல்ல விடியத் தொடங்கியது. கருப்பு உருவங்களாய்த் தெரியாது வண்ணத்தின் சாயல் ஊட்டப்பட்ட யதார்த்தத்துடன் எல்லா உருவங்களும் தன்னைக் காட்டிக் கொண்டன.

மெல்ல காயாம்பூ தன் ஒயர்க்கூடையில் இருந்த கோணிப்பையை எடுத்து இடது கையில் வைத்துக் கொண்டு இருளனின் பின்னாலேயே அவன் நிழல் போல அசைந்தாள். இருவரின் மூச்சும் ஒருவருக்கொருவர் கேட்கும் படியாக நெருக்கிக் கொண்டே நடந்து, வயல்களுக்கு நடுவே இருந்த மரங்களும் புதர்களும் அடர்ந்த ஒரு மேட்டு நிலத்தைச் சுற்றிச் சுற்றி ஒரு கம்பியால் அவற்றின் அடிப்பகுதிகளை விலக்கிப் பார்த்தபடி பக்கவாட்டிலேயே நகர்ந்தனர். இரவு முழுதும் உறங்கிய சிற்றுயிர்களின் கூட்டம் எல்லாம் அந்நியர்கள் வந்துவிட்டதை பதற்றத்துடன் அங்கீகரித்துக் கொண்டு விலகி ஓடின. செவத்தன் சற்று தள்ளிய வரப்பில் நின்றிருந்த பனைமரங்களுக்குக் கீழே ஏதோ தேடி எடுத்தான். மரக்கிளைகளிலிருந்து உதிர்ந்த முதிர்ந்த தேனடைகள். தேனீக்கள் எல்லாம் வெளியேறி அடை மட்டும் காற்றில் உலரத் தொடங்கியிருந்தது. செவத்தன் அடையைப் பிளந்து, இடது கையால் அதைப் பிழிந்து வழியும் தேனை வலது கையில் வாங்கி நக்கினான். ருசித்தான். தேன் பிழிந்த சக்திக்கு அதிகமாகவே பிதுங்கி அவன் விரல்களினூடாக வழிந்தது. அடையை நேரடியாக வாய்க்கு மேலே பிடித்துக் கொண்டு பிழிந்தான்.  மகன் எங்கிருக்கிறான் என்று தேடிய காயாம்பூ அவன் கையில் தேனடையைக் கண்டதும் ஒரு புன்னகையுடன் கணவன் பக்கம் திரும்பி, புதர்களுக்கு இடையே மீண்டும் பாம்பின் தடங்களைத் தேடத்தொடங்கினாள்.

இரவின் வெளியில் பாம்புகள் எந்த எச்சரிக்கையுமின்றி திரிகின்றன. எலிகளின் வளைகளை முகர்ந்து உள்ளே புகுந்து கொள்கின்றன. எலிகளின் உலகம் பரந்த அளவில் மண்ணில் புதைந்த கோட்டையைப் போல இருக்க, பாம்பு மட்டும் உடலை ஓர் ஆயுதம் போல முறுக்கேற்றிப் பிடித்துக் கொண்டு உள்ளே நுழையும். பாம்பு வருவதை அறிந்த எலிகள் தப்பித்து ஓடினாலும், பாம்பின் வேகமான நகர்வுக்கு அவற்றின் பாய்ச்சல் உதவாது போகும். அதற்காகத்தான் தன்னுடைய வளைக்கு பல வாயில்களை எழுப்புகின்றன. இருட்டில் பாம்பின் திறனுக்கு முன்னால் எலிகளும் தவளைகளும் எம்மாத்திரம். ஒரு பாம்பையேனும் பிடித்து அதன் நஞ்சை உறிஞ்சி சொசைட்டியில் கொடுத்தால் தான் , சில நூறு பணம் கிடைக்கும்.  பத்து நாளில் மாசி மகக் கொடைக்கு மகாபலிபுரம் போய் வரலாம். தனது அத்தனை உறவுகளையும் பார்த்து வரலாம். சிதம்பரம் சந்தைக்குப் போய் கொஞ்சம் கருவாடு வாங்கிக் கொள்ளவேண்டும். இதில் வேறு எப்பொழுது பிரசவமோ என்று எண்ணிக் கொண்டவளின் கை அனிச்சையாக தன் அடிவயிற்றைத் தடவிப்பார்த்துக் கொண்டது. கட்டியணைத்துக் கொண்டது.

இருளன் புதர்களின் அடிமரங்களையும் கிளைகளையும் அசைக்க அசைக்க அவற்றின் இலைகளிலிருந்து மூலிகையின் வாசனை கசிந்து அந்த இடமெங்கும் மணம் பரவியது. ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகியும் பாம்பின் தடம் எதுவும் புலப்படவில்லை. இருளன் கன்னியம்மனை நினைத்துக் கொண்டான். வயிற்றின் கொதிப்புக்கு பழைய கஞ்சி ஊற்றியே மூன்று நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. கிழக்கின் சூரியன் விரிந்து கொண்டிருந்த ஆகாயத்தை நோக்கி கன்னியம்மனை நினைத்துக் கொண்டான். காயாம்பூ, இருளனை விட்டு விலகி, நடந்து அந்த மேட்டு நிலத்தின் பாங்கை ஆராய்ந்தாள். அந்த மேட்டு நிலம்,  சுற்றியிருந்த வயல்களையெல்லாம் கதிர்மணி அறுத்துத் தின்னும் எலிகளின் அரண்மனையாக இருக்கவேண்டும். அந்த வயல் வெளிகளில் உலவும் சாரைப்பாம்புகளையும் பிற நஞ்சற்ற பாம்புகளையும் தவிர, அந்த இடத்திற்குப் பிரவேசிக்கும் கட்டுவிரியன் போன்ற நஞ்சு சுரக்கும் பாம்புகள் பிற மேட்டு நிலங்களிலிருந்து வரப்பு வழியாகத் தான் அந்த மேட்டு நிலத்திற்கு வரும். தாங்கள் நடந்து வந்த நெடுஞ்சாலையும் வரப்புகளும் தான் அவற்றிற்கும் பாதையாக இருக்க முடியும். இந்நேரம் பாம்புகள், அவர்களின் அதிர்வுகளை உணர்ந்து வளைகளின் அடிப்பாதைகளுக்குச் சென்றிருக்கக் கூடும். மெல்ல பூமியின் பரப்பில் இருக்கும் துளைகளை ஆராய்ந்தாள்.  ஒவ்வொரு சாண் பரப்பையும் கண்களால் துல்லியமாயும் வேகமாயும் கணித்தாள். மண்ணுக்கு அடியில் இருக்கும், எலி வளையின் வரைபடத்தைக் கண்களால் படித்து மனதில் வரைந்தாள். கட்டுவிரியன் வேகமும் புத்திசாலித்தனமும் உடையது. அதன் மெலிந்த உடலும் ஊர்வதற்கு வாகான முதுகெலும்பும் கொண்டு பார்க்கும் போது அதன் அழகில் மயங்கி, நிதானிக்கும் முன் தன் வேலையைக் காட்டிவிடும். எலிகள் தப்பித்து நுழைய முடியாத படிக்கு வாய் அகன்ற வாயிலைத் தான் கட்டுவிரியன் தேர்ந்தெடுத்து உள்ளே நுழையும். மெல்ல ஒவ்வொரு நுழை வாயிலையும் ஆராய்ந்தாள். அவள் மனக்கணக்கு துல்லியமாக இருந்தது. ஓரிடத்தில் ஒரு துளையின் வாய்ப்பகுதியில், ஓர் இலைச் சருகு மெல்ல இழுபட்டு அது துளையின் வாய்ப்பகுதியில் தங்கியிருந்தது.  பாதி இலைப்பகுதி துளைக்கு வெளியேயும், பாதி துளைக்கு உள்ளேயும் என அதற்கு மேல் அது உள்ளே செல்ல முடியாமல் அதன் வடிவம் பெரிதாக இருந்தது. காயாம்பூவின் கண்கள் விரிந்து இருளனை நோக்க, இருளனும் அந்தப் பார்வையில் அவளின் ஒட்டுமொத்தக் கற்பனையையும் வாசித்து விட்டது போல, அவளை நோக்கிப் பாதங்களை அழுத்தமாக அதிர்வில்லாமல் எட்டி வைத்து ஓடி வந்தான். நிதானித்துக் கொண்டு, கடப்பாரையால் பூமியை நோக்கி இறக்கினான். உயிர் மீது கடப்பாரை இறங்கி விடக்கூடாதே என்ற சர்வ கவனத்துடனும் அக்கறையுடனும் ஒவ்வொரு முறையும் செங்குத்தாய் இறக்கி மண்ணைப் புரட்டினான். 

சூரியன் கிழக்கே ஏறிக் கொண்டிருந்தான். அவன் கதிர்கள் அங்கிருந்த மரங்களுக்கு இடையே ஊசித் தூண்களைப் போல இறங்கின. இருவரின் முதுகிலும் புறங்கழுத்திலும் துளைத்து இறங்கிக் குத்தின. வியர்வை முதுகில் கசிந்து வழிந்தது. இருளன் தொடர்ந்து கடப்பாரையை ஓங்கி ஓங்கிப் போட்டான். மண் இறுகிப் போய், வெட்டுவதற்கு சிரமமாக இருந்தது. அதிக உழைப்பையும் கவனத்தையும் வேண்டியது. உள்ளே ஏதேனும் உயிர் இருக்கப் போய் அதன் மேல் ஆயுதம் இறங்கி விட்டால், பிறகு ஒரு பொழுதும் பாம்பின் தடம் உணரமுடியாமல் போய்விடும். அந்தத் தோல்வி தந்த அழுத்தத்தில், கற்பனை சக்தி குறைந்து போய்விடும். பாம்பின் தடம் அறிய அதிக கற்பனை சக்தி வேண்டும். அது, தன்னை விட தன் மனைவிக்குத் தான் அதிகம் என்று இருளன் அறிவான். அவள் இசையின் லயத்துடன் பாம்பின் தடத்தைக் கற்பனை செய்வதில் வல்லவள். இது குறித்து தற்பெருமை கொள்ளாத காயாம்பூவின் மீது இருளன் கொண்டிருக்கும் மரியாதையும் காதலும் அதிகம். 

சில வெட்டுதல்களுக்குப் பிறகு, மேட்டு நிலத்தின் குறுக்குவெட்டுப் பரப்பில் கொடி போல படர்ந்திருந்த எலி வளையின் அமைப்பு வெளிப்படையாகத் தெரிந்தது.   ஒரு தாவரத்தின் மண்ணடி வேரின் ஓட்டம் போல கொடி பாவியிருந்தது. ஒரு சிறிய குச்சியை அதன் எல்லா முனைகளிலும் விட்டு மெல்ல நிமிண்ட, வழவழப்பும் பளபளப்பும் நிறைந்த கட்டுவிரியன் மண் துளையில் பொதிந்திருந்த உடலை  மெதுவாக உருவியபடியே தலையை வெளியே நீட்டியது. அதன் கண்கள் மின்னின. உடலும் மெலிந்து ஆனால் ஒரு முதிர்ந்த பாம்பு தான் என்று சொல்லக்கூடிய தோற்றத்தில் இருந்தது. நாக்கை வெளியே நீட்டி அச்சத்தின் காற்றைச் சுவைத்துக் கொண்டே இருந்தது.  கண்ணிமைக்கும் சில நொடிகளுக்குள், வளையின் நெளிவுகளுக்குள் ஆங்காங்கே உடலை நீட்டிப்படுத்திருந்த தன் உடலை வேகமாய் சுருட்டி இழுத்து வெளியே கொண்டு வந்தது. ஆறடிக்கு மேலே இருக்கும் ஆண் பாம்பு. தப்பிப்பதற்கான எல்லா ஆயத்தங்களையும் அது நொடி வேகத்தில் செய்து கொண்டிருந்தது. அதன் கவர்ச்சியான அழகும் நஞ்சின் வேகமும் ஒருமித்திருந்த வேகத்தை காயாம்பூ பலமுறை வியப்புடனும் திகைப்புடனும் பார்த்திருக்கிறாள். இருளன் என்ன தான் மறுத்தாலும், கட்டுவிரியனைப் பிடிப்பதில் அவள் தந்தை தான் திறமை சாலி. அவருடன் காடுகாடாய்ப் பயணித்த அனுபவம் தான் கட்டுவிரியனைப் பிடிக்கும் கூர்மையைத் தனக்குத் தந்திருக்கிறது என்று நம்பினாள். எந்தக் கட்டுவிரியனைப் பார்த்தாலும் தந்தையின் நினைவும் உடனே வரும். காயாம்பூ மனம் குவித்து அவரை வனங்கிவிட்டு, முன் நகர்ந்து, இருளனின் கையில் இருந்த கம்பியை வாங்கி, கண்ணிமைக்கும் நேரத்தில் இருளனின் கண்களே நம்பமுடியாத வேகத்தில், பாம்பின் உடலை வளைத்து மடக்கி, வாகாக இழுத்து கோணிக்குள் போட்டு வாயைக் கட்டினாள். சட்டென்று கண் முன்னால் இருந்த வெளிச்சம் மங்கியதைப் போல, கோணியின் இருட்டுக்குள் கட்டுவிரியன் மறைந்தது.

மூவரும் வரப்பு வழியாக நடந்து வரும் போதே, சூரியன் அவர்களின் கருத்த உடல்கள் மீது  காயத் தொடங்கியிருந்தான். வரப்பிலிருந்து சாலையில் ஏறும் இடத்தில் இன்ஸ்பெக்டர் சுதாகர், தன் பைக்கை நிறுத்தி விட்டு அதன் மீது சாய்ந்து நின்று, இவர்கள் அருகில் வருவதற்காக அவர்களையே பார்த்துக் கொண்டு நின்றான். 

'என்னடா, என்ன பாம்பு?'

இருளன் உடல் குனிந்து, 'கட்டுவிர்யன்ங்க!'

'ம்…! எவ்வளவு கிடைக்கும்?'

'வெஷம் அளவப் பொறுத்துங்கய்யா…!'

'ஒம் பொண்டாட்டிய ஒரு தடவை வுட்டா நானே அவ்வளவு கொடுப்பேனில்ல?'

இருளன் முகம் சுருங்கியது. அவனைக் கடந்து முன்னால் சென்றிருந்த காயாம்பூவின் காதில் இது விழுந்து விடக்கூடாதே என்று கவலைப்பட்டான். ஆனால், காயாம்பூவின் கண்ணும் காதும் கூர்மையானவை. எதையும் துல்லியமாய் உணர்ந்து விடும். காயாம்பூ முன்னே நடந்து சென்று கொண்டே இருந்தாள். நிறை மாதப் பெண்ணைத் தாயாய் அல்லவா நினைக்க வேண்டும். இவன் எல்லாம் என்ன மாதிரி ஆண் என்று நினைத்துக் கொண்டாள். எதிர்க்குரலோ பார்வையோ எழுப்பாது அந்த நெடுஞ்சாலையில் நிழல்கள் போல மூவரும் கடந்து நடந்தனர். நீண்ட தூரத்திற்கு  இன்ஸ்பெக்டரின் பார்வை தன் முதுகைத் துளைத்ததை உணர்ந்தான், இருளன். அவன் உடலெங்கும் கலவரத்தின் உதிரம் பரவி நடுக்கம் உருவானது. 

மறு நாள் மாலையே, இருளன் குடிசைக்குள் இன்னும் இரண்டு போலீஸ்களுடன் சுதாகர் உள்ளே நுழைந்தான். இருளன் சுதாரிப்பதற்குள் அவனை அடிவயிற்றில் எட்டி உதைத்தான். அவன் தலைமுடியைக் கொத்தாக அள்ளி வன்மத்தின் சுவற்றில் மோதி மோதித் தள்ளினான். அவன் மண்டை வீங்கி, அதன் வழியாக இரத்தம் சுரந்தது. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் காயாம்பூவை, தரையில் மல்லாக்கத் தள்ளி, அவள் உடலுக்குள் தன் வன்மத்தின் குறியைச் செலுத்தினான். அவனுக்குப் பின், உடன் வந்திருந்த போலீஸ்காரர்களும் அதையே செய்தனர். அப்பொழுது அவர்கள் கண்களில் தெறிந்த விஷம், இது வரை தான் எந்தப் பாம்பின் கண்களிலும் காணாதது, என்று அந்த நிலையிலும் அவர்களின் கண்களின் விஷத்தை ஆராய்ந்தாள், காயாம்பூ. காயாம்பூ இது போன்ற வன்முறைகளை பலமுறை அனுபவித்திருக்கிறாள். போலீஸ், அரசியல் தலைவர்கள், நாட்டாமை, பண்ணையார் என்று போவோர் வருவோரின் கண்களில் எல்லாம் அவள் உடலின் வடிவு கிடந்து உறுத்த, இது போல பலவந்தமாய் புணர்ந்துவிட்டுப் போவார்கள். நாளடைவில் அதன் மீதான அருவெறுப்பும் கறையும் கூட அவளிடமிருந்து அழிந்து போய்விட்டது.

 


உடல் முழுக்க ஊமைக்காயங்களுடன் இருளன் தரையெங்கும் புரண்டான்.  பேண்டின் ஜிப்பையும் பெல்ட்டையும் மாட்டிக்கொண்டே வந்து இருளனை இன்னொரு பலமான உதை உதைத்தான், சுதாகர். வலியில் சத்தமின்றி சுருண்டிருந்த இருளன், அந்  உதையில் அவன் உடல் பாம்பைப் போலவே அந்த மண் தரையில் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு நழுவியது. காயாம்பூ அவனைப்பார்த்து துடித்துப் போனாள். அவள் கண்களிலிருந்து பொல பொலவென்று நீர் கொட்டிக் கொண்டே இருந்தது. இன்ஸ்பெக்டர், இருளனைக் குடிசையிலிருந்து வெளியே இழுத்தான். 'ஊர்த்தலைவரு வீட்டுல நகைய திருடிருக்க. என்ன தினாவட்டு?'

வெளியே பக்கத்துக் குடிசைகளிலிருந்து எல்லாம் மக்கள் பயத்துடனும், இருளனைக் காப்பாற்ற முடியாத குற்றவுணர்வுடனும் முதுகு மடித்து நின்று கொண்டிருந்தனர். முதியவர் கருப்பன் தான் ஓடிவந்து, இன்ஸ்பெக்டரின் காலில் விழுந்து கெஞ்சினார். 'விட்டுருங்கய்யா! நகையெல்லாம் எடுத்து நாங்க என்ன அய்யா பண்ணப் போறோம்! முன்ன பின்ன தங்கம் பாத்தவுக இல்ல அய்யா!' என்று சொற்களை முடிக்கும் முன்னே, இன்ஸ்பெக்டர் தன் பூட்ஸ் காலால் அவர் நெஞ்சில் எட்டி உதைக்க முதியவர் எதிரில் இருந்த பனை மூட்டின் அடிமரத்தில் மோதி விழுந்தார். பேச்சு மூச்சு இல்லாமல் ஆனார்.

இருளனை இரண்டு நாட்கள் போலீஸ் ஸ்டேஷனிலேயே வைத்திருந்தனர். தன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு இருளனை அடித்துது துவைத்திருந்தனர். அந்த ஸ்டேஷன் மர்மமான உணர்வுகளால் நிறைந்திருந்தது. மங்கிய மின்சாரவெளியும் அதில் தொடர்ந்து புகைத்துக் கொண்டிருந்த போலீசுகாரர்களின் மனப் புகைச்சலும் பரவி, வெளிச்சமே புகைந்து கொண்டிருந்தது. அவனை ஓர் அறைக்குள் தள்ளாமல், அந்தக் கட்டிடத்தின் பின்முற்றத்தை ஒட்டியிருந்த அறைக்கு வெளியே ஒரு தூணுடன் சங்கிலியால் கட்டி வைத்திருந்தனர்.  நினைத்தபொழுதெல்லாம் அவர்களின் எரிச்சல் தன் உடலில் இரத்தக் கண்டுகளாய்க் காய்ந்தது. காயாம்பூ, பெண் குழந்தை ஈன்றிருக்கிறாள் என்று மாரிப்பொண்ணு காவல் நிலையத்தின் பின் சந்து வழியாக வந்து யாருக்கும் தெரியாமல் சொல்லிச்சென்றாள். காயாம்பூவின் உடல் கந்தக பூமி போல. எதையும் உள்ளே இழுத்துத் தாங்கிக் கொள்ளும். அவளை நினைக்கும் போதே, அவன் கண்களிலிருந்து பெருமடையான கண்ணீரும், துக்கத்தின் மூச்சுகளும் வெளிவந்தன. அவளை நினைப்பில் ஆரத்தழுவி அவள் உடலெல்லாம் முத்தம் கொடுத்தான். தன் முத்தம், அவள் உடலின் உள்காயங்களையும் ஆற்றிவிடும் என்ற நம்பிக்கையுடன் முத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தான். முத்தத்தால் அவளை அந்தத் தனிமையில் வெளியில் வரைந்து கண் முன்னே கண்டுகொண்டிருந்தான். அவன் இருந்த சூழலிலிருந்தே அவன் வெகு தொலைவில் இருந்தான்.

இருளனை நீண்ட நேரமாகக் கவனித்துக் கொண்டிருந்த சுதாகர்,  இருளனின் முகம் அவன் முன்னால் இருந்த காற்றுக்குள் முகத்தை நீட்டி நீட்டி என்னவோ போல உதடு சுழித்ததை அச்சத்துடனும் அருவறுப்புடனும் பார்த்துக் கொண்டிருந்தான். 'ஏய் இவன அவுத்துவிட்டு வெரட்டுங்க! பைத்தியம் புடிச்சிருச்சு போல!' இருளன் இடைவிடாமல் காயாம்பூவின் உடலெங்கும் முத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தான். ஸ்டேஷன் சாலை மறையும் வரை காத்திருந்து காயாம்பூவைக் காண ஓட்டமாய் ஓடினான். அவள் பிரசவம் குடிசையிலேயே நடந்திருந்தது. நைந்த துணிகளுக்கு மத்தியில்    இன்னும் வெளிறாத ஒரு துணியைப் போலக் கிடந்தாள் காயாம்பூ. குடிசைக்குள் நுழைந்தது முதல் செவத்தன் இருளனின் முதுகில் சாய்ந்து கொண்டு நீண்ட நேரமாய் கழுத்தைக் கட்டிக் கொண்டு தொங்கினான். இருளன் வந்த செய்தி அறிந்ததும் ஊரார் எல்லோரும் அங்கு வந்துவிட்டனர். அவனுக்குக் காயாம்பூ மீதிருந்த அன்பின் தித்திப்பை ஊரார் கண்கள் எல்லாம் தேனீக்களைப் போல மொய்த்தன. எல்லோரின் முகத்திலும் புன்னகையும் அதே சமயம் கண்களில் இருந்து கண்ணீரின் வெதுவெதுப்பும் வழிந்தது. இருளன் குழந்தையை மடியில் எடுத்து வைத்துக் கொண்டு, காயாம்பூவின் தலை முடியைக் கோதி, அவள் நெஞ்சைத் தடவினான்.  குழந்தை பனம் பழத்தைப் போல கறுத்துப் பளபளப்பாய் இருந்தது. குழந்தையை முத்தமிட்டவன், பின்பு காயாம்பூவிடம் திரும்பி அவள் கன்னங்களை வருடினான். யாருக்கு முத்தமிடுவது என்று தெரியாமல் அவன் திகைக்கவே, ஊர்க்காரர்கள் எல்லோரும் கண்ணீருக்கிடையே சிரித்தபடியே அங்கிருந்து நழுவினார்கள். அந்தக் குடிசையில் நீண்ட நேரம் காயாம்பூவும், இருளனும் விழித்திருந்தார்கள். அவர்களின் உறக்கமற்ற மூச்சுக்காற்றில் அந்தக் குழந்தை அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தது. மறு நாள், குடிசையின் கூரை வழியாக, சூரியனின் வட்டங்கள் தரையெங்கும் வீழ்ந்து பெரிதாகும் வரை காயாம்பூ தூங்கியிருந்தாள். விழித்து எழுந்து, இருளனைக் குடிசையைச் சுற்றிலும் தேடினாள். செவத்தனுக்கும் அவன் எங்கு சென்றான் என்று தெரியவில்லை. மாரி அக்காவிடம் இருளனைப் பார்த்தாளா என்று கேட்டாள்.  கருக்கலுக்கு முன்னமேயே கடப்பாரையுடன் அவன் தெற்கு நோக்கிப் போனதாகக் கூறினாள். 'பொண்ணு பொறந்துருச்சுல்ல! சம்பாதிக்கிற ஆசை அதிகமாயிருச்சு போல!' அவன் மீதான காதல் பொங்க தனக்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டாள். மார்பில் சுரந்த காதலின் அமுதத்தைக் ஒரு சொட்டும் கீழே விழாமல் குழந்தைக்கு ஊட்டினாள். அவள் முகம் அன்றெல்லாம் இருளனின் அன்பால் பூரிப்பில் திளைத்தது.

மதியத்திற்கு மேல் தான் இருளன் குடிசைக்குத் திரும்பினான். கையில் வெறும் கடப்பாரை மட்டும் தான் இருந்தது. காயாம்பூ எதுவுமே கேட்டுக் கொள்ளவில்லை. அவன் முகத்தில் விரிந்திருந்த சலனமின்மையே அவள் மனதுக்கு ஆறுதலாக இருந்தது. சட்டியில் இருந்த கொஞ்சம் அரிசியில் சோறு பொங்கி நீரூற்றிக் கொடுத்தாள். பக்கத்துவீட்டில் போய் இரு வெங்காயம் வாங்கி வந்தாள். அதைக் கடித்துக் கொண்டே இருளன் சாப்பிடுவதை ரசித்தாள். ஆனால், சற்று நேரத்திற்குப் பின் தான் உணர்ந்தாள். அவன் அவளுடன்  நிகழ்த்தும் மன உரையாடலை முற்றிலுமாக நிறுத்திக் கொண்டது போல இருந்தது. அசைக்கமுடியாத மெளனத்தின் கருங்கல்லாய் அவன் முகம் ஆகியிருந்தது. அதே சமயம், அவன் முகத்தில் வழக்கத்திற்கு மாறான சொல்லொணா நிம்மதியும் நிறைந்திருந்தது. அவன் கண்கள் எங்கோ தூரத்தில் நிலைகுத்தியிருந்தது. கை தான் உணவை உண்டதே அன்றி மனம் அங்கே இல்லை. குழந்தை தூக்கத்தில் சிரிக்க இருவரின் கவனமும் குழந்தையின் மீது திரும்பிச் சிரித்தது.

மறு நாள் காலை, இறந்து போன முதியவர் கருத்தனின் இளைய மகன் தான் ஓடிவந்து சொன்னான். இன்ஸ்பெக்டர் சுதாகரைப் பாம்பு கொட்டியதாகவும், மருத்துவமனை கொண்டு செல்லும் முன் அவர் இறந்து விட்டதாகவும், இன்னொரு இன்ஸ்பெக்டரை மருத்துவமனையில் வைத்திருப்பதாகவும். வெளியே  அடுப்பை மூட்டிக் கொண்டிருந்த காயாம்பூ ஓடிவந்து இருளனின் கண்களை நோக்கினாள். 'பாவமில்லையா, அது" என்று வாய் பொத்தி பார்வையாலேயே கேட்க, அவன் கண்களின் இமைகளும் பார்வையும் குற்றத்தின் கனத்தில் தாழ்ந்தன. காயாம்பூவின் மனதில் ஒரு பெரிய பாறையைப் போல சுமை அழுத்த, குழந்தையைத் தூக்கி மார்பில் அணைத்துக் கொண்டாள். அந்தக் குடிசைக்குள் இருந்த மங்கிய ஒளி அங்கு நிலவிக் கொண்டிருந்த கனத்த அமைதியை ஒரு புகையைப் போல சுற்றி வந்தது. சிறிய சத்தமும் சுவற்றில் எதிரொலித்து அடங்கியது, பேரச்சமாய் இருந்தது. குழந்தை அழுதால் கூட அவர்கள் இருவரின் மனவெளிக்குள் அழுவது போல ஒலித்தது. செவத்தன் தான் குழந்தையைக் கொஞ்சிக் கொஞ்சி தனக்குத் தானே விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தான். காயாம்பூவும் இருளனும் அந்த இறுக்கத்தையும் அமைதியையும் குலைக்க விரும்பாதவர்களைப் போல  நாட்கணக்கில் இருந்தனர். வெயிலும் இருளும் முற்றத்தை மாறி மாறி நனைத்ததைத் தவிர வேறெதுவும் நடக்கவில்லை. ஊரே மாசிமகம் கொண்டாட மகாபலிபுரத்துக்குக் கிளம்பியது. காயாம்பூவும் துணியும் பாத்திரங்களும் கட்டி மூட்டையாக்கிக் கொண்டு கிளம்பினாள். பச்சைக்குழந்தையை, இருளனே தன் இருகைகளில் தாங்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டு நடந்தான். அந்த ஏரிக்கரை ஊரே மூன்று மாட்டுவண்டிகளில் அடங்கிப் போனது. வண்டிகள் மதிய வேளை மகாபலிபுரத்தை வந்தடைந்தன. குச்சிகளை வட்டமாக நிலத்தில் செருகி அதைச் சுற்றி வண்ணப்புடவையால் எல்லை வரைந்து கட்டி, அதற்குள் கல்மூட்டி சமைக்கத் தொடங்கினார்கள். வெளிச்சத்தின் நிழல் அந்தக் கடற்கரை மணல் வெளியெங்கும் கோலாகலமாகியது. 

காயாம்பூ, கொஞ்சம் அரிசி போட்டு சோறு வடித்து, கருவாட்டுக் குழம்பு வைத்தாள். மணத்தை முகர்ந்து கொண்டே செவத்தன் ஓடிவந்து தட்டுவைத்துக் கொண்டு உட்கார, அவனுக்கு உணவு கொடுத்து விட்டு இருளனுக்கும் வைத்தாள். இருளனும் காயாம்பூவும் மெளனத்துக்குள் சமைந்து போயிருந்தனர். அதன் இறுக்கம் இருவருக்குமே மூச்சு முட்டியது என்றாலும் கதவை முட்டித் திறப்பது யார் என்ற தயக்கத்திலோ வீறாப்பிலோ சுணங்கிப் போய்க் கிடந்தனர்.  குழந்தை பிறந்த பச்சைமேனியுடன் இருந்த காயாம்பூ அவள் கட்டியிருந்த பஞ்சுமிட்டாய் வண்ணப் புடவையின் மீது விழுந்த மாலை வெயில், அவள் கன்னத்தில் எதிரொளிக்க, அவள் செழுமையை கண்ணின் மறைவுப் பார்வையால் பார்த்து ஏங்கினான் இருளன். உடலுக்குள் சீறி எழுந்த கட்டுவிரியனை சுருட்டி வைத்துக் கொண்டான். காயாம்பூ பிடிவாதக்காரி என்று அவன் அறிவான். குறிப்பால் மனதைத் தெளிவாக்கி விட்டாள் என்றால், அதற்குப் பின் அதை அழிக்க இன்னொரு பார்வையோ சொல்லோ கூட கிடையாது. 

வழக்கமாக, மாசிமக விழாவில் காயாம்பூவின் நடனம் தான் கொடி கட்டும். அவளுடைய தோழிப் பெண்டிரெல்லாம் அவளை வற்புறுத்தி அழைத்துச் செல்ல, குழந்தையைத் தூக்கி மடியில் கிடத்திக் கொண்டான் இருளன். அது அவளுக்கு, 'கவலைப்படாமல் போய்க் கலந்து கொள்!' என்றொரு சமிக்ஞை. பார்வையால் ஒருவரையொருவர் எட்ட நிறுத்தி தான் இதையும் புரிந்து கொண்டனர். காயாம்பூ, தோழியர் பாடிய காதல் பாடல்களுக்கு சுழன்று சுழன்று ஆடினாள். அவள் இடுப்பும் மார்பும் காதல் பெரும்புனலுக்கு ஏற்றாற் போல ஈடு கொடுத்து ஆடின. அவள் ஆடியதைப் பார்த்து நிறைய சிறுமிகளும், கிழவிகளும் கூட ஆட்டத்தில் சேர்ந்து கொண்டனர். சற்று தூரத்தில் இருளில் இருந்து அவள் ஆட்டத்தை ரசித்த இருளன், வழக்கமான அவளுடைய ஆட்டம் இது இல்லை என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான். ஏதோ கட்டுப்பாட்டுடனும் கனத்துடனும் தான் அந்த உடலை அவள் விடுதலையாக அனுமதித்தாள் என்பது இருளனுக்கு மட்டும் தான் விளங்கியது. அவள் மனதின் அடியில் புரளும் வேதனையை, இந்த நடனத்தின் சுழற்சியில் கொஞ்சம் உதிர்த்து விட்டால் போதும் என்று நம்பினான்.

கடற்கரையில் இருள் அமைதியாகப் பரவ, பேச்சொலிகளும் கொண்டாட்டங்களும் பாடல்களும் மெல்ல அடங்கிக் கொண்டிருந்தன. இருளன் அவள் நடனத்தைக் கவனியாதது போல குழந்தையுடன் வந்து படுத்துக் கொண்டான். நடனம் முடிந்து வந்த காயாம்பூவின் உடலிலிருந்து வீசிய வியர்வையின் மனம், இருளனின் புலன்களையெல்லாம் தூண்டியது. அவளை இழுத்து அணைத்து மூச்சுகள் கலக்க உறவு கொண்டால் தான் அவன் தொண்டையை அடைத்துக் கொண்டிருக்கும் வலியின் பாறை நகரும். இருளனின்   காமம் உடலெங்கும் பரபரவென்று அலைந்தது, பாம்பென. அதன் நாவு கண்களில் திளைக்க, காயாம்பூவைப் பார்த்தான். உறக்கம் பிடிக்காமல் புரண்டு புரண்டு படுத்தான். காயாம்பூ, குழந்தையை அவள் மார்பு ஒட்டிக்கிடத்தி, எதிர்த்திசையில் திரும்பிப் படுத்திருந்தாள். தன் இடுப்பின் மீது கிடந்த செவத்தனின் காலை எடுத்து மெல்ல கீழே போட்டுவிட்டு, இருளன் காயாம்பூவின் வயிற்றை ஒட்டித் தன் கையைப் போட்டு அணைத்தான். காயாம்பூவின் உடல் ஒரு பெரு மூச்சிற்கு உயர்ந்து அடங்கியது. தன்னுள் படர்ந்த கொடிகள் அவள் மீதும் படரக் காத்திருந்தான் இருளன். காயாம்பூ, எந்த உணர்ச்சியும் அற்று திடமாய்க் கிடந்தாள். அசைவின்றி அப்படியே தூங்கிப்போனாள். இருளனின் உடல் அவள் அன்பின் அணைப்பிற்காய் நீண்ட நேரம் காத்திருந்தது.

காலை நான்குமணிக்கே எல்லோரும் எழுந்திருக்கத் தொடங்கியதில், உறக்கம் களைந்தான் இருளன். அவன் விழிக்கும் முன்பே, காயாம்பூ கடலில் குளித்து உடை மாற்றியிருந்தாள். அதிகாலை குளிரை வெல்லும் ஊக்கம் அவள் உடலில் இருக்கிறது என்பதை அறியாதவனா இருளன். காயாம்பூ, கடல் கன்னிக்கு சடங்குகள் செய்வதற்கான ஏற்பாடுகளையும் கற்பூரம் பழங்களையும் மண்ணில் படிகள் செய்து அவற்றை ஏற்பாடு செய்திருந்தாள். அவர்கள் குலத்தின் ஏழு கன்னிமார்களில், கடல் கன்னி தான் வித்தியாசமானவள். அபூர்வமான வரங்களை வழங்குபவள். அவள் மாசிமகத்தின் நாள் அன்று தான் கரையேறிவருவாள். அப்பொழுது அவளுக்காக விழித்திருந்து காத்திருந்து என்ன கேட்டாலும் தருவாள். தனக்கு என்ன வேண்டும் என்று இருளன் தன்னையே கேட்டுக் கொண்டான். காயாம்பூ போன்ற மதிநுட்பமும் பேரன்பும் கொண்ட பெண்ணுடன் இந்த வாழ்க்கை முழுதும் கழியக் கிடைத்தால் போதும். அந்த இன்ஸ்பெக்டர் சுதாகரின் செயல் தான் அவனை மிகுந்த அவமானத்திற்குள் தள்ளியதாக உணர்ந்தான். ஆனால், அவன் சமூகத்தில் போலீஸ்காரரின் அடிபடாத ஆண்களும், அவர்களின் உடல் வன்மம் தாங்காத பெண்களும் யார் இருக்கிறார்கள். 

காயாம்பூ துரிதமாக  சடங்குகளுக்கான ஏற்பாடு செய்தாள். கடல் கன்னி சூரியன் வழியாகத் தான் எழுந்து வருவாள். கற்பூரத்தை இருளனின் கைகளில் கொடுத்தாள். இருளன், பெரிய கற்பூரக் கட்டியைக் கையிலே ஏற்றித் தூக்கினான். அவன் உடல் குளிரிலும், ஆழ்மனக்கிடக்கைகளிலும் உருக்கொண்டு நடுங்கியது. மெல்ல நடுங்கினான். அவன் வாய், மனித வாழ்வின் அபூர்வமான தருணங்களை எல்லாம் முணுமுணுக்கத் தொடங்கியது. காயாம்பூ, உடலெல்லாம் செவியாகி அவன் சொற்களையே கேட்டுக் கொண்டிருந்தாள். திடீரென்று ஒரு பெருமூச்சில்,  இருளன் பாம்பாய் உடல் திருகி அங்கிங்கென அந்தக் கடற்கரையில் ஊர்ந்திடத் தொடங்கினான். அவன் மூச்சு சீறியது. கண்களின் கருவிழிகள் இமைகளின் மேலண்ணத்தில் ஒட்டியது. நாசி முனை விடைத்து, பாம்பின் வேகமும் மூர்க்கமும் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தக் கூட்டத்துக்கிடையே நழுவினான். நகர்ந்தான். மெல்லிய அவன் உடலின் விலா எலும்புகளும் முதுகெலும்புகள் உயர்ந்து நின்று ஓர் இரைக்கான வேட்டையை நிகழ்த்துவது போல கூர்மையாகி நின்றன. உடலின் முதுகெலும்புக்குள் வயிறு ஒட்டிப் படமெடுத்து நிற்கும் பாம்பைப் போல இருந்தது. கூட்டம் பயபக்தியுடன் அவனையே பார்த்து நின்றது. ஒரு கணத்தில் அவன் இரத்த ஓட்டம் எல்லாம் நீலம்பாய்ந்து சுழன்று திசைகளுக்கு விரைந்தது போல வண்ணம் மாறி இயங்கினான்.

கூட்டம் அவன் பின்னாலேயே ஓடியது. காயாம்பூ, மனதுக்குள் அவனை நோக்கி இரைந்தாள். அவன் வேதனையை உணர்வதாய் மனதுக்குள் சத்தியம் செய்தாள். எல்லோரும் அவனையே பார்த்துக் கொண்டிருந்த வேளையில் யாரும் எதிர்பாராத நேரத்தில் இருளன் தான் நகர்ந்து கொண்டிருந்த வேகத்திலேயே கடலின் அலைகளுக்கு ஊடே புகுந்து கடலுக்குள் மறைந்தான். காயாம்பூ அலைகளுக்கு இடையே நின்று கலங்கினாள்.  இருளனைத் தேடி அரற்றினாள். கால்கள் அலைகளுக்கு இடையே நிற்க முடியாமல் நழுவின. சில நிமிடங்கள் கரைகளில் தயங்கி நின்று வேடிக்கை பார்த்த ஆண்கள் எல்லோரும் சுதாரித்துக் கொண்டு அலை நீரில் பாய்ந்தனர். காயாம்பூ நின்ற இடத்திலேயே நின்ற படி கடலைப் பார்த்து தொழுது கொண்டிருந்தாள். கரையில் நின்ற மாரி அக்காவின் கையில் இருந்த தன் குழந்தை சூழலின் சத்தத்தில் அமைதி கலைந்து கத்தி அழுதது. மாரி அக்கா அந்த நிலையிலும் அதைத் தாலாட்டிக் கொண்டிருந்தாள். கடல் எதையும் பொருட்படுத்தாத மனதுடன் அலைகளால் கரையை தளும்பச் செய்து கொண்டே இருந்தது. உள்ளே சென்ற அலைகள் எல்லாம் கரையை நோக்கி வந்து கொண்டிருந்தன. கடலுக்குள் சென்ற சிலர், ஒரு வேளை இருளன் கரைக்குத் திரும்பியிருப்பானோ என்ற சந்தேகத்தில் கரைக்கு வந்து பார்த்துவிட்டு, இல்லையென்றதும் மீண்டும் படகைப் போல கடலுக்குள்ளே பாய்ந்தனர்.

ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆகியிருக்கும். எல்லோரின் உணர்ச்சிகளும் கொந்தளிப்பின் உச்சத்தை அடைந்திருந்த வேளையில், இருளன் கடலுக்குள்ளிருந்து அலைகள் அடங்கிய தூரத்திலிருந்து எழுந்து நடந்து வந்தான். அவனைக் கண்ட காயாம்பூ அப்படியே மயங்கி கரையில் மடங்கி விழுந்த அலையில் சரிந்தாள். மக்கள் தூக்கிச் சென்று அவள் முகத்தில் நீர் தெளித்து எழுப்பினார்கள். அந்தக் கூட்டத்திற்கு இடையிலும், இருளனின் கண்களைத் தேடி அலைந்து அதன் அன்பில் தங்கிக்கொண்டாள், காயாம்பூ. இருளன் தூக்கி எடுத்து அவளைத் தோள்களால் அணைத்துக் கொண்டான்.  இருவரும் ஒன்றாக அவர்களின் இடம் நோக்கி நகர, காயாம்பூ அவனிடம் திரும்பி, 'ஒன் வேதனை எனக்குப் புரியும் அய்யா!' என்றாள். இருளனின் கண்களில் காயாம்பூவின் அன்பால் ஊறிய கண்ணீர், அவன் தலையிலிருந்து வழிந்த ஈரக் கோடுகளுக்கு இடையே பாம்பின் தடம் போல வழிந்து மறைந்ததை காயாம்பூ கவனிக்கத் தவறவில்லை. 

Recent Article

கால போதம்

வெகுநாள் கழித்து
அன்று தான் கண்டேன் காதலனை
முட்ட முட்டத் தாயின்...

(08 Apr 20 - Poems)


தற்காப்பு மருத்துவம்

நண்பர்களே, வணக்கம். இன்னும் கொரோனாவிற்கு எதிர்ப்பு மருந்து என்று ஒன்று...

(08 Apr 20 - Article)


அநாகரிகம் நிறைந்த புகைப்படம்

இந்தப்புகைப்படம் மனித அநாகரிகத்தின் உச்சம். ஆனால், நண்பர்களே இதற்கு...

(08 Apr 20 - Article)


தனிமை தனிமை

தனிமை தனிமை தனிமையோ தனிமை...

(08 Apr 20 - Article)


அரசியல் சிறைவாசிகளை விடுதலை செய்!

தமிழக அரசே,

கரோனா 19-என்ற தொற்றுநோய் நாடு முழுவதும் பொது...

(08 Apr 20 - Article)


Read All

Write To Author

About ME

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book.

Get In Touch

Address: 262 Milacina Mrest.

Phone: +91 3333 6789.

Tax: +91 3333 6789.

Email: support@kr.com

Website: www.kr.com